புதிய தொழிற்சாலைகளை உதயமாக்க போகும் கொள்கைகள்!


புதிய தொழிற்சாலைகளை உதயமாக்க போகும் கொள்கைகள்!
x
தினத்தந்தி 19 Feb 2021 9:20 PM GMT (Updated: 2021-02-20T03:24:34+05:30)

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய ஏர்ல் நைட்டிங்கேல் என்பவர், ‘இப்போதுள்ள தேவைகளெல்லாம் தெளிவான திட்டமிடல், அதற்குரிய செயல்முறைகள் மற்றும் அந்த இலக்கை அடைய தேவையான துணிச்சல்’ என்று கூறினார்.

அதேபாதையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில்கொள்கை, சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில்களுக்கான கொள்கைகளை வெளியிட்டார். ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொழில்கொள்கையின் காலக்கெடு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இருக்கிறது. ஆனாலும் தொழில்வளர்ச்சியில் மாறிவரும் சூழ்நிலையில் புதிய தொழில்களை ஈர்க்கவும், தமிழ்நாட்டை தொழில்வளர்ச்சியில் முதலிடத்தில் கொண்டுவரவும் வேண்டுமென்றால் புதியவகையிலான இலக்கில் இப்போது புதிய தொழில்கொள்கைகளை உருவாக்குவது நிச்சயமாக அவசியம். கடந்த பல மாதங்களாகவே தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், கூடுதல் செயலாளர் அருண்ராய், வழிகாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் நீரஜ்மிட்டல் ஆகியோர் புதிய தொழில்கொள்கையை உருவாக்க பல்வேறு ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி, தொழில்முனைவோரையும் சந்தித்து வந்தார்கள். இந்த தொழில்கொள்கையின்படி, 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை அமலுக்கு வரும் புதியதிட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இது 4 முக்கிய நோக்கங்களை கொண்டதாக இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் ரூ.10 லட்சம் கோடி புதிய முதலீடுகளை ஈர்ப்பது, அதே காலகட்டத்துக்குள் உற்பத்தித்துறையின் ஆண்டுவளர்ச்சி 15 சதவீதமும், மாநிலத்தின் பொருளாதாரத்தில் உற்பத்தித்துறையின் பங்கு இப்போதுள்ள 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக ஆக்குவதும், 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் ஆகும். மேலும், புதிதாக தொழில்தொடங்கும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு விதமான ஊக்கச்சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே தொழில்கள் தொடங்கப்பட்டு வந்தநிலையில், தொழிலில் பின்தங்கிய அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்களில் தொழில் தொடங்கும் தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத விலையில் நிலமும், மற்ற ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது நிச்சயமாக மாநிலம் முழுவதும் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும்.

இதுமட்டுமில்லாமல், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் தொழில்தொடங்க வருபவர்களை ஈர்க்கும்வகையில் பல சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தனியார் தொழில்பூங்காக்களுக்கும் பல ஊக்கச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல, தமிழ்நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை தருவது சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில்கள்தான். தற்போது 23 லட்சத்து 60 ஆயிரம் நிறுவனங்கள், 1 கோடியே 51 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதோடு, 6 ஆயிரம் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலமாகவே நடக்கிறது. இப்போது சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில்களுக்காக  வெளியிடப்பட்டுள்ள கொள்கையில் 2025-ம் 
ஆண்டுக்குள் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கவும், மேலும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பல ஊக்கச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இருதொழில் கொள்கைகளிலும் அறிவிக்கப்பட்ட சலுகைகள் 2025-ம் ஆண்டு வரை தொடர்ந்து தீவிரமாக வழங்கப்பட்டால், புதிய தொழிற்சாலைகள் நிச்சயமாக உருவாகும். புதிதாக 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அந்தவகையில் இந்த தொழில் கொள்கையில் உள்ள ஒவ்வொரு அறிவிப்புகளையும் அமல்படுத்தும்வகையில், தொழில்முனைவோர் அனைவருக்கும்  உள்நாட்டில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் தெரிவித்து, அழைத்துப்பேசி, இலக்கு நிர்ணயித்த அளவு தொழிற்சாலைகளை தொடங்கி, 2025-ல் தொழில்வளர்ச்சியில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது என்ற உன்னதமான இடத்தை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை அரசுத்துறைகள் முழுவீச்சில் எடுக்கவேண்டும். அதில்தான் இந்த தொழில்கொள்கைகளின் வெற்றி இருக்கிறது.

Next Story