மத்திய - மாநில அரசுகள் உடனடியாக வரியை குறைக்கவேண்டும்!


மத்திய - மாநில அரசுகள் உடனடியாக வரியை குறைக்கவேண்டும்!
x
தினத்தந்தி 22 Feb 2021 10:54 PM GMT (Updated: 2021-02-23T04:24:07+05:30)

மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தங்கள் வரியை குறைத்தால்தான் மக்கள் இந்த சுமையில் இருந்து விடுபடமுடியும்.

கிராமங்களில், “சாண் ஏறினால் முழம் சறுக்கும்” என்பார்கள். அதுதான் இப்போது மக்கள் வாழ்வில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பாதிப்பால் பெரும் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருந்த மக்கள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு சகஜநிலைக்கு பக்கத்தில் வந்துவிட்டோம், இனி புதுவாழ்வு மலரும் என்ற நம்பிக்கையில் திளைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு “நீ எங்கே போகிறாய்?, உன்னை போகவிடுவோமா?’’ என்று காலைப்பிடித்து கீழே இழுத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா நேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுகிறோம் என்ற நோக்கில், வேறு போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழ்நிலையில், இருசக்கர வாகனங்களில் போய் பழகிவிட்ட நடுத்தர, ஏழை-எளிய மக்களால், இப்போது அதை ஓரம் கட்டவும் முடியவில்லை. 2013-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 122 டாலராக இருந்த நேரத்தில்கூட பெட்ரோல் விலை ரூ.76-ஐ சுற்றித்தான் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 63.38 டாலர்தான் என்றாலும், ஏற்கனவே மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டிவிட்டநிலையில், தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களிலும் விரைவில் எட்டிவிடும் அபாயம் இருக்கிறது.

கச்சா எண்ணெயின் விலை இப்போதுள்ள விலையில், ஏறத்தாழ 40 சதவீதம்தான். மீதமுள்ள தொகை எல்லாம் மத்திய-மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான். மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் மட்டுமே பெட்ரோல் மீது விதிக்கப்படும் சிறப்பு கூடுதல் கலால்வரி மற்றும் சாலை உள்கட்டமைப்பு வரியை இருமுறை உயர்த்தி இருக்கிறது. அதாவது இந்த 3 மாதங்களில் மட்டுமே பெட்ரோல் மீதான வரி ரூ.13 மற்றும் கூடுதல் வரி என்று ரூ.16 உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய கலால் மற்றும் மேல்வரி மட்டும் ரூ.32.90 ஆகும். டீசல் மீது விதிக்கப்படும் இந்த வரிகள் ரூ.31.80 ஆகும். இதுதவிர, தமிழக அரசு பெட்ரோல் விலையில் 15 சதவீதமும், அதற்கு மேல்வரி ரூ.13.02 மதிப்பு கூட்டுவரியாகவும் விதிக்கிறது. இதுபோல் டீசல் ஒரு லிட்டருக்கு 11 சதவீதமும், ரூ.9.62 மதிப்பு கூட்டு வரியாகவும் விதிக்கப்படுகிறது.

ஆக, இப்போதுள்ள சூழ்நிலையில், மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தங்கள் வரியை குறைத்தால்தான் மக்கள் இந்த சுமையில் இருந்து விடுபடமுடியும். தங்கள் வருவாயை பெருக்க மத்திய-மாநில அரசுகள் முதலில் கைவைப்பது பெட்ரோல்-டீசல் மீதுதான். ஆனால், இந்த வரி உயர்வால் பொதுமக்களுக்கும் பாதிப்பு. மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு டீசல் வாங்கமுடியாமல், தொழிலுக்கு செல்லமுடியாத அளவு பாதிப்பு. விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை ஓட்ட முடியாமல் பாதிப்பு. இப்படி எல்லா தரப்பும் பாதிக்கும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க, இப்போதுள்ள சூழ்நிலையில் வரிகளை குறைப்பது ஒன்றே ஒரேவழி.

ஆனால் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், “மத்திய அரசாங்கத்துக்கு வரியை குறைக்கும் எண்ணமில்லை. மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை குறைக்கவேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். மாநில அரசை பார்த்து நீங்கள் வரியை குறையுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, மத்திய அரசாங்கம் தானே முன்வந்து முதலில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை பெருமளவில் குறைக்கட்டும். அல்லது ராஜஸ்தான், அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம் போன்ற மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான தங்கள் மாநில வரிகளை குறைத்ததுபோல, மத்திய அரசாங்கத்துக்கு பல திட்டங்களில் வழிகாட்டும் தமிழக அரசு, இதிலும் நாங்கள் முன்னால் போகிறோம், நீங்களும் பின்னால் வாருங்கள் என்று பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை குறைக்கட்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story