உழைப்பே உயர்வு தரும்!


உழைப்பே உயர்வு தரும்!
x
தினத்தந்தி 24 Feb 2021 1:01 AM GMT (Updated: 24 Feb 2021 1:01 AM GMT)

‘தினத்தந்தி’ அதிபர் அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் எப்போதும் தொழிலாளர்களிடம் பேசும்போது, தன்னையும் சேர்த்து, “நாம் அனைவரும் உழைப்போம் உயர்வோம்” என்றுதான் கூறுவார்.

பண்டைய காலங்களில் இருந்து நமது முன்னோர்கள், இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் உழைப்பின் மேன்மையை வலியுறுத்திக்கூறி வந்திருக்கிறார்கள். சட்டசபையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பெருந்தலைவர் காமராஜர் படத்தின் கீழ், “உழைப்பே உயர்வு தரும்” என்ற பொன் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ‘தினத்தந்தி’ அதிபர் அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் எப்போதும் தொழிலாளர்களிடம் பேசும்போது, தன்னையும் சேர்த்து, “நாம் அனைவரும் உழைப்போம் உயர்வோம்” என்றுதான் கூறுவார்.

அந்த வகையில், உழைத்தால்தான் உயர்வு உண்டு என்ற உணர்வுகளை தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் மென்மையாக அறிவுறுத்த வேண்டிய காலக்கட்டத்தில், மத்திய அரசாங்கம் கொண்டுவர இருக்கும் 4 தொழிலாளர் நல சட்டங்கள், உழைப்புக்கும், உற்பத்திக்கும் பெரும் பங்கம் விளைவித்துவிடுமோ? என்ற அச்சம் நடுநிலையாளர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. அதாவது, சம்பளம், தொழில் உறவுகள், பணியின்போது பாதுகாப்பு, சுகாதாரம்-பணிச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு என 4 சட்டங்களை நிறைவேற்ற இருக்கிறது.

இந்த சட்டங்கள் அரசு அலுவலகங்களுக்கு பொருந்தாது, தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது, தொழில் நிறுவனங்களில் பணி செய்யும் நாட்கள் வாரத்திற்கு 5 அல்லது 6 என்று இருக்கிறது. மத்திய அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்தின் கீழ் இதை 4 நாட்களாகவும் ஆக்கிக்கொள்ளலாம். ஆனால், வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் பணியாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது. வேலை நேரத்தை 4 நாட்கள் வைப்பதா?, 5 நாட்கள் வைப்பதா?, 6 நாட்கள் வைப்பதா ? என்பதை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியிருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியது. ஆனால், 4 நாட்களில் 48 மணி நேரம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பது எல்லா பணிகளுக்கும் பொருத்தமாக இருக்காது. சில பணிகளை தினமும் 12 மணி நேரம் செய்ய முடியும். உடல் உழைப்பு போன்ற சில பணிகளை 8 மணி நேரத்திற்கு மேல் நிச்சயமாக செய்வது என்பது கஷ்டம். இந்த பணிகளை 12 மணி நேரம் செய்தால், களைப்பு, மனஅழுத்தம், உடல் வலி, மனச்சோர்வு ஏற்பட்டு விடும்.

எனவே, எல்லா பணிகளுக்கும், எல்லா நிறுவனங்களுக்கும் ஒரேபோல 4 நாள், தினமும் 12 மணி நேரம் வேலை என்பது சரியாக இருக்குமா? என்பதை ஆலோசிக்க வேண்டும். 4 நாட்கள் அதிக வேலை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 3 நாட்களுக்கும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை கொடுப்பது சரியாக இருக்குமா? என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதுபோல, வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்களை வேலைபார்க்க சொல்லக்கூடாது. அவர்கள் தாமாக முன்வந்து பார்த்தாலும் அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. தினமும் 8 மணி நேரம் 6 நாட்கள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், கூடுதலாக ஓரிரு மணி நேரங்கள், ‘ஓவர் டைம்’ பார்க்க அனுமதிக்கக்கூடாது என்பது சரியான முடிவு அல்ல. 8 மணி நேரத்திற்கு மேல் ‘ஓவர் டைம்’ பார்க்க அனுமதிப்பது என்பது தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். தொழில் நிறுவனங்களுக்கும் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

எனவே, தேவைப்படும் நேரத்தில் ஓரிரு நாட்களில், ஓரிரு மணி நேரங்கள் கூடுதலாக வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுதான் சரியான முடிவாக இருக்கும். என்றாலும், இந்த சட்டத்தை அமல்படுத்தும் முன்பு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், தொழிலாளர் நல அதிகாரிகள் என்று எல்லோருடனும் கலந்தாலோசித்து, அதன்பிறகே ஒரு முடிவு எடுப்பது நல்லது. எந்தெந்த பணிகளுக்கு இந்த புதிய முறை பொருந்தும் என்பதையும் வகுத்துக்கூறவேண்டும்.

மொத்தத்தில் இந்த விஷயத்தில் உழைப்பையும், தொழிலாளர் நலனையும், உற்பத்தி திறனையும் ஒன்றுசேர ஊக்குவிக்கும் வகையில், அரசு முயற்சிகளை மேற்கொள்வதே சிறந்தது.

Next Story