யாரும் எதிர்பாராத தேர்தல் தேதி அறிவிப்பு


யாரும் எதிர்பாராத தேர்தல் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 9:39 PM GMT (Updated: 2021-03-01T03:09:44+05:30)

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஜூன் 8-ந்தேதியோடு பதவிகாலம் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் 15-வது சட்டசபையின் பதவிகாலம் வருகிற மே 24-ந்தேதியோடு முடிவடைகிறது. அதுபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஜூன் 8-ந்தேதியோடு பதவிகாலம் நிறைவடைகிறது. இந்தநிலையில் அதற்கு முன்பு சட்டசபை தேர்தல் நடத்தி ஆகவேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அதே ஆண்டில் மார்ச் மாதம் முதல்வாரத்தில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. எனவே அதனையொட்டி மார்ச் முதல்வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஏன் பிரதமர் நரேந்திரமோடியே கடந்த 2-ந்தேதி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது, “2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 4-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் 7-ந்தேதி தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று கருதுகிறேன்” என கூறினார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் கமிஷன் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்துவிட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு வேட்பு மனுதாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 19-ந்தேதி. ஆக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எந்த தரப்பிலும் முடிவடையாத சூழ்நிலையில், இனி புயல் வேகத்தில் கூட்டணிகள், ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி பங்கீடுகள், வேட்பாளர் தேர்வுகள் என எல்லாமே அடுத்தடுத்து நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைத்து கட்சிகளும் வந்துள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், அ.தி.மு.க. கூட்டணியில் யார்? யார்?, தி.மு.க. கூட்டணியில் யார்? யார்?, கமல்ஹாசன் அமைக்கப்போகும் 3-வது அணியில் யார்? யார்?, தனியாக நிற்கப்போகும் கட்சிகள் எவை? எவை? என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஒவ்வொரு நாளும் பரபரப்பான அறிவிப்புகள் வெளிவரப்போகும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத பல அறிவிப்புகளை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. புதுச்சேரியில் ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.22 லட்சம் செலவழிக்கலாம். தமிழ்நாடு, கேரளாவில் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யலாம். கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 66 ஆயிரத்து 7 வாக்குச்சாவடிகள் இருந்தநிலையில், இப்போது 89 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகளாகவும், புதுச்சேரியில் 930 வாக்குச்சாவடிகள் இருந்தநிலையில், தற்போது 1,559 வாக்குச்சாவடிகளாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. வேட்பாளர் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யும்போது, அவருடன் 5 பேர் மட்டுமே செல்ல முடியும். வாகன பிரசாரங்களிலும் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்படும் மைதானங்களின் விவரத்தை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்ளூர் நாளிதழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியிடவேண்டும். வாக்குச்சாவடிகளின் தரைத்தளத்தில் மட்டுமே வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் வாக்காளர்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தாது.

தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் ஒரு முறையும், ஆர்.கே.நகர் தொகுதியில் இரு முறையும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாட்டை தேர்தல் செலவின பதற்ற மாநிலமாக தேர்தல் கமிஷன் எடுத்துக்கொண்டு, 2 செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளது. ஆக ஒரு பக்கம் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள், மற்றொரு பக்கம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை ஆளப்போவது யார்? என்று மக்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாவற்றுக்குமே மே 2-ந்தேதி பதில் கிடைத்துவிடும்.

Next Story