பிரதமர் வழிகாட்டிவிட்டார்; தடுப்பூசியில் வேகம் தேவை!


பிரதமர் வழிகாட்டிவிட்டார்; தடுப்பூசியில் வேகம் தேவை!
x
தினத்தந்தி 3 March 2021 12:06 AM GMT (Updated: 2021-03-03T05:36:47+05:30)

தடுப்பூசி போட்டுகொள்வதற்கு வயது வரம்பு இல்லாமல், விருப்பப்படும் எல்லோரும், தடுப்பூசி போடுவதற்கான அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் உடனடியாக வெளியிடவேண்டும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாத கடைசியில் இந்தியாவில் கால்தடம் பதித்த கொரோனா தொற்று, தமிழ்நாட்டில் மார்ச் 7-ந்தேதி முதல் பாதிப்பை ஏற்படுத்தியது. வேகமாக பரவிக்கொண்டிருந்த கொரோனாவை தடுக்க வேண்டுமென்றால், தடுப்பூசி ஒன்றுதான் சாலச்சிறந்தது என்ற வகையில், கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல், டாக்டர்கள், நர்சுகள் உள்பட மருத்துவப் பணியாளர்களுக்கும், பிப்ரவரி 3-ந்தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இருதரப்பில் இருந்தும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

நேற்று முன்தின கணக்குப்படி, ஒரு கோடியே 47 லட்சம் பேர்தான் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 45 நாட்கள் ஆகியும் இந்தியாவில் மொத்த மக்கள்தொகை யில், ஒரு சதவீதம் பேர்தான் தடுப்பூசி போட்டிருக் கிறார்கள். ஆனால், இந்தியாவைப்போலவே தடுப்பூசி வசதியுள்ள அமெரிக்காவில் 20 சதவீத மக்களும், இங்கி லாந்தில் 30 சதவீத மக்களும் தடுப்பூசி போட்டுவிட்டார்கள்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், தடுப்பூசி போடும்பணி இந்தியா முழுவதும் தொடங்கியது. ஆனால், இதிலும் யாருக்கும் ஆர்வம் இல்லை. முதல் நாளில், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 18 ஆயிரத்து 850 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழ்நாட்டிலும் 60 வயதுக்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 865 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 5 ஆயிரத்து 197 பேரும்தான் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடலாம் என்ற அறிவிப்பையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் ஆளாக சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைவிட சிறப்பு, எல்லோரும் போடத் தயங்கும் “கோவேக்சின்” தடுப்பூசியை போட்டிருக்கிறார். அவருக்கு இந்த தடுப்பூசியை போட்டது நிவேதா மற்றும் ரோசம்மா அனில் என்ற நர்சுகள். ஊசிப்போட்டு முடித்தவுடன், “எனக்கு வலியே தெரியவில்லை” என்று பாராட்டிய பிரத மர், நீங்கள் இருவரும் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கேட்டிருக்கிறார். நிவேதா, புதுச்சேரி என்றவுடன், பிரதமர் “வணக்கம்” என்று தமிழில் தெரிவித்தது, நிவே தாவை ஆச்சரியத்தில் மூழ்கவைத்தது. ரோசம்மா அனில் தனக்கு சொந்த மாநிலம் கேரளா என்று கூறியிருக்கிறார்.

இதேபோல, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கொரோனா பரவல் சங்கிலியை துண்டிப்பதற்கு ஒரேவழி, தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான். பிரதமரே வழிகாட்டிவிட்டார். எனவே, மக்கள் சிறிதும் பயம் இல்லாமல், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும். ஆனால், அதற்கான வழி முறைகள் இன்னும் எளிதாக்கப்பட வேண்டும். எல்லோரா லும் “கோவின்” செயலி மூலம் தடுப்பூசி போடுவதற்கு பதிவுசெய்வது சிரமம் என்றாலும், அரசு மருத்துவமனை களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் நேரடியாக போய் பதிவுசெய்து தடுப்பூசி போடும் வசதி இருக்கிறது. ஆனால், அதிலும் பல நடைமுறை சிக்கல் இருக்கிறது.

தடுப்பூசி போட வருபவர்களை மருத்துவமனையில் புகைப்படம் எடுக்கவேண்டும். பிறகு அடையாள அட்டையை படம் எடுக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு கட்டமாக முடித்துவிட்டுத்தான் ஊசிபோட முடியும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், தடுப்பூசி போடும் வேகம் மிக குறைவாகவே இருக்கிறது. கடந்த 1-ந்தேதி கணக்குப்படி, மொத்தம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 390 பேர்தான் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

தற்போது, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும் 8 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் தடுப்பூசி போடுவதற்கு பெருமளவில் முன்வர வேண்டும். தடுப்பூசி போட்டுகொள்வதற்கு வயது வரம்பு இல்லாமல், விருப்பப்படும் எல்லோரும், தடுப்பூசி போடுவதற்கான அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் உடனடியாக வெளியிடவேண்டும்.

Next Story