மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது; பராமரித்து வளர்க்க வேண்டும்!


மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது; பராமரித்து வளர்க்க வேண்டும்!
x
தினத்தந்தி 3 March 2021 8:23 PM GMT (Updated: 2021-03-04T01:53:52+05:30)

அரசு சார்பில் நடப்பட்ட 6 கோடிக்கு மேலான மரக்கன்றுகளையும், மற்ற மரக்கன்றுகளையும் முறையாக வளர்த்திருந்தால், தமிழ்நாடு இப்போது மர வளமிக்க பசுஞ்சோலையாக காட்சியளித்திருக்கும்.

ஒரு மாநிலம் செழிப்பாக இருக்கவேண்டும் என்றால், அங்கு மொத்த நிலப்பரப்பில் 3-ல் ஒரு பகுதி வனப்பரப்பு இருக்க வேண்டும். வனவளம், மரவளம் இருந்தால்தான், மழை பொழியும். அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், வன உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாட்டில் வனவளம் 3-ல் ஒரு பகுதி இல்லை. இந்திய வன நில அளவை நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, மாநிலத்தின் வனப்பரப்பு 26,364.02 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது மாநிலத்தின் மொத்த புவியியல் பரப்பில் 20.27 சதவீதமாகும். தற்போது தமிழ்நாட்டின் வனப்பரப்பு 83.02 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது.

அதனால்தான், நீண்ட நெடுங்காலமாகவே தமிழக தலைவர்கள் மரவளத்தை பெருக்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தார்கள். இப்போதும் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில், குறிப்பாக குரங்கணிக்கு போகும் வழியில், ஏராளமான தேக்கு மரங்கள் ஓங்கி உயர்ந்து செழிப்புடன் வளர்ந்திருப்பதை பார்க்க முடியும். அந்த மரக்கன்றுகள் நடப்படுவதற்கு முன்பு, அந்த வழியே வந்த காமராஜர், “ஆற்றில் தண்ணீர் ஓடி எப்போதும் செழிப்பாக இருக்கிறதே இந்தப்பகுதி, இங்கு தேக்கு கன்றுகள் நடலாமே” என்றார். அப்போது, அருகில் இருந்த உயர் அதிகாரி, “இந்தப்பகுதியில் தேக்கு மரம் வளராது” என்றார். உடனே காமராஜர், “நட்டுப்பார்த்தீர்களா.. வளராது என்று சொல்வதற்கு?. உடனடியாக தேக்கு மரக்கன்றுகளை ஏராளமாக நடுங்கள். வளர்ந்தால் நல்லது. வளராவிட்டாலும் பரவாயில்லை” என்று கூறியதை தொடர்ந்து, நடப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தான், இன்று மிகச்செழிப்புடன் வளர்ந்து பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கிறது.

அப்போது இருந்தே பல தலைவர்கள், முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில், மரக்கன்றுகளை நடுவது வழக்கம். மறைந்த ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, கடந்த மாதம் 24-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகளை நடும் வகையில், முதலாவதாக ஒரு மகிழம் மரக்கன்றை நட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் வனத்துறை சார்பில் ஜெயலலிதாவின் வயதை குறிக்கும் வகையில், இவ்வாறு மரக்கன்றுகள் நடப்படுவதாக அரசு குறிப்பேடுகளில் இருக்கிறது. இந்த மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளி-கல்லூரிகளிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளிலும் நடப்பட்டு, பராமரித்து, பாதுகாக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளால் இந்தத்திட்டம் இணைந்து செயல்படுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் மட்டும் இதுவரை, 6 கோடிக்கு மேல் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். இதுதவிர, நடிகர் விவேக் போன்ற சமூக ஆர்வலர்கள் நிறையபேர், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். மரக்கன்றுகள் நடும் திட்டம் நிச்சயமாக வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. ஆனால், இதுவரை அரசு சார்பில் நடப்பட்ட 6 கோடிக்கு மேலான மரக்கன்றுகளையும், மற்ற மரக்கன்றுகளையும் முறையாக வளர்த்திருந்தால், தமிழ்நாடு இப்போது மர வளமிக்க பசுஞ்சோலையாக காட்சியளித்திருக்கும்.

எனவே, மரக்கன்றுகளை நடுபவர்கள், நடும் துறைகள், தனியார் எல்லாம், அதை வளர்க்கும் பொறுப்பையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியில் இப்போது குறைந்த நிலப்பரப்பில் அதிக மரங்களை வளர்க்கும் “மியாவாக்கி” காடுகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதுபோல, அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் “மியாவாக்கி” காடுகளை உருவாக்க அரசு நிதிஒதுக்கி ஊக்கப்படுத்த வேண்டும். இப்போது 20.27 சதவீத வனப்பரப்புகளை கொண்ட தமிழ்நாட்டை 33 சதவீத வனப்பரப்பு கொண்டுள்ள மாநிலமாக மாற்றவும், மாநிலம் முழுவதுமுள்ள மர வளத்தை பெருக்கவும் தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கப்போகும் அரசு, மிகத்தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் செழிப்பான தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Next Story