தாங்காதய்யா தாங்காது...


தாங்காதய்யா தாங்காது...
x
தினத்தந்தி 4 March 2021 9:50 PM GMT (Updated: 2021-03-05T03:20:25+05:30)

ஒருபக்கம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, மறுபக்கம் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்றால் அவர்களால் தாங்கவே முடியாது. ‘‘தாங்காதய்யா தாங்காது’’ என்று பொதுமக்கள் சோகக்குரல் எழுப்புகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் இன்று தங்கம் என்ன விலை?, பெட்ரோல்-டீசல் என்ன விலை?, காய்கறிகள் என்ன விலை? என்று மக்கள் பார்ப்பது வழக்கம். அதேபோல ஒரு நிலை கியாஸ் சிலிண்டருக்கும் வந்துவிடுமோ? என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளானாலும் சரி, சிறியஅளவிலான ரோட்டோர உணவுவிடுதிகள் என்றாலும் சரி, கியாஸ் சிலிண்டர் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. கியாஸ் சிலிண்டர் இல்லையென்றால், சமையல் இல்லை என்ற நிலை வீடுகளில் நிலவுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக கியாஸ் அடுப்புகளை வழங்கினார். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இணைப்புகள் வழங்கப்பட்டன. அந்தவகையில், தமிழ்நாட்டில் தற்போது வீடுகளுக்கு, 3 எண்ணெய் நிறுவனங்கள் மூலம் 2 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சிலிண்டருக்கு ஆரம்பகாலங்களில் இருந்தே மானியம் வழங்கப்பட்டுவந்தது. இப்போது சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மானியம் குறைந்துகொண்டே போகிறது என்பது எல்லா குடும்பங்களில் உள்ள மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1-ந்தேதி முதல் வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடைகொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. 5 நாட்களில் இது 2-வது முறை உயர்வு. கடந்த பிப்ரவரி 4-ந்தேதி முதல் ஒருமாதம்கூட ஆகவில்லை. இது 4-வது விலை உயர்வு. பிப்ரவரி மாதம் 4-ந்தேதி சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டது. 15-ந்தேதி ரூ.52.50 உயர்ந்துள்ளது. 25-ந்தேதி மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு உள்ளது. ஆக, ஒரு மாதத்துக்குள் ரூ.127.50 உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கணக்கிட்டால் ரூ.225-க்கு மேல் உயர்ந்திருக்கிறது. சரி சிலிண்டர் விலைதான் உயருகிறது. அதற்கு ஈடாக மானியம் வருமா? என்று பார்த்தால், மானியம் கடந்த பல மாதங்களாகவே குறைந்துகொண்டே இருக்கிறது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலிண்டர் விலை ரூ.714 ஆக இருந்தபோது, ரூ.174.72 மானியம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.835. ஆனால், மானியம் ரூ.25 தான் வருகிறது. அதுவும் பலருக்கு வரவில்லை. இதுபோல டீக்கடைகள், ஓட்டல் போன்ற வணிக நிறுவனங்களில் பயன்படுத்தும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பெரிதும் நலிவடைந்த நிலையில் கீழே விழுந்துகொண்டிருந்த மக்களின் பொருளாதார நிலை, இப்போதுதான் கையை ஊன்றி எழும்பி உட்கார்ந்திருக்கிறது. இதுபோன்ற நிலை மக்களை மீண்டும் படுக்கவைத்துவிடக்கூடாது. ஒருபக்கம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, மறுபக்கம் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்றால் அவர்களால் தாங்கவே முடியாது. ‘‘தாங்காதய்யா தாங்காது’’ என்று சோகக்குரல் எழுப்புகிறார்கள். பொதுமக்களை பொறுத்தமட்டில், எங்களுக்கு மானியம்வேண்டாம், விலையை மட்டும் நன்றாக குறைத்துவிடுங்கள் என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இப்படி ஒரேமாதத்தில் பலமுறை சிலிண்டர் விலையை உயர்த்துவதைவிட, 3 மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தினாலும் பரவாயில்லை. மேலும், மானியத்தை குறைப்பதில் முனைப்பு காட்டியுள்ள மத்திய அரசாங்கம், அதைவிட வேகமாக விலையை குறைப்பதில் வேகம் காட்டவேண்டும் என்பதுதான் மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் விலை உயர்த்தப்பட்ட தாக்கத்தின் காரணமாக சிலிண்டர்களுக்கான பதிவு வெகுவாக குறைந்திருக்கிறது. குறிப்பாக ஏழை-எளிய மக்கள் இந்தவிலையில் கியாஸ் சிலிண்டர் வாங்கமுடியாது. அவர்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு போகாமல் தடுக்கவேண்டுமென்றால், உடனடியாக மத்திய-மாநில அரசுகள் வரிகளை குறைப்பதன்மூலம் சிலிண்டர் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story