ஓராண்டு ஆகிவிட்டதே, போகமாட்டாயா கொரோனா!


ஓராண்டு ஆகிவிட்டதே, போகமாட்டாயா கொரோனா!
x
தினத்தந்தி 5 March 2021 9:09 PM GMT (Updated: 2021-03-06T02:39:07+05:30)

ஓரிருஆண்டுகள் முககவசம் அணியாமல், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருக்கக்கூடாது. அதனை மீறுபவர்கள் மீது அரசும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொடிய கொரோனா தமிழ்நாட்டில் கால்தடம் பதித்து நாளையோடு ஓராண்டு ஆகிறது. எவ்வளவு பெரிய கொடியநோய் என்றாலும், சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி விட முடியும். ஆனால் கொரோனா கடந்தாண்டு மார்ச் 7-ந்தேதி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது. வரும்போது சிங்கிளாகத்தான் நுழைந்தது. முதலில் மஸ்கட்டில் இருந்து ஒரே ஒருவர்தான் பாதிப்போடு வந்தார். அடுத்து சிலநாட்களில் வேறுசிலர் வெளிமாநிலங்களிலிருந்து கொரோனாவை கொண்டுவந்தனர். கொஞ்சம், கொஞ்சமாக பரவத்தொடங்கிய கொரோனா முதலில் 10, 20 என தொடங்கி நூற்றுக்கணக்கில் அதிகரித்து, பிறகு அது ‘ஜெட்’ வேகத்தில் பரவியது. 2020-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதியன்று உச்சக்கட்டமாக ஒரேநாளில் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதித்தது. அக்டோபர் 11-ந்தேதி முதல் சற்று குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 53 ஆயிரத்து 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக குறைந்துவந்த கொரோனா, ஒழிந்துவிடும் என்று நினைத்த நேரத்தில், தற்போது மெல்ல.. மெல்ல.. அதிகரித்துவருவது கவலையளிக்கிறது.

மராட்டியம், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த பாதிப்பில் இந்த மாநிலங்களில்தான் ஏறத்தாழ 86 சதவீத பாதிப்புகள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு பாதிப்பு நமக்கு தெரியாவிட்டாலும்கூட, மத்திய அரசாங்கம் இதுகுறித்து ஆய்வு நடத்த ஒரு உயர்மட்டக்குழுவை அனுப்பியிருந்தது. கடந்த 3 நாட்கள் இந்தக்குழு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற சில மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தியது. சில மாவட்டங்களில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. சென்னையில் ஏறத்தாழ ஆயிரம் தெருக்களில் கொத்து, கொத்தாக அதாவது, தொடர்ந்து 5, 6 பேர் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது மக்களுக்கு இருந்த பயம் இப்போது போய்விட்டது. பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. சமூகஇடைவெளி என்றால் என்ன? என்று கேட்கும் நிலை இருக்கிறது. கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க தடுப்பூசி ஒன்றுதான் சாலச்சிறந்தது என்ற வகையில், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2 ஆயிரம் அரசு மருத்துவமனை களிலும், 620 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உள்ள வரவேற்பு, கோவேக்சினுக்கு இல்லாமல் இருந்தது. ஏனென்றால் கோவேக்சின் 3-வது கட்ட பரிசோதனையின் இறுதிகட்ட முடிவுகள் வெளிவரவில்லை. ஆனால் நமது பிரதமர் நரேந்திரமோடி மிக தைரியமாக கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், தற்போது கோவேக்சின் செயல்திறன் முடிவுகள் வெளிவந்துள்ளன. 81 சதவீதம் செயல்திறன் கொண்ட கோவேக்சின், உருமாறிய கொரோனாவையும் வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்டது என்று 3-வது கட்ட ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இப்போது மத்திய அரசாங்கம் தடுப்பூசி மருந்தைப்போடும் மருத்துவமனைகள் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரைதான் போடவேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டித்து, தேவைப்பட்டால் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது. மேலும், தடுப்பூசி மருந்து போட்டுக்கொண்டால் ‘ஆண்டிபாடிஸ்’ என்று கூறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி 14 நாட்களுக்கு பிறகு ஏற்பட தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், கொரோனா பாதிப்பின் 2-வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்கவேண்டுமென்றால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்குமேல் இணைநோய் உள்ளவர்களும் முழுமையாக தடுப்பூசி போடவேண்டும். விரைவில் அரசாங்கம் எல்லோருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். பொதுமக்களும் அடுத்த ஓரிருஆண்டுகள் முககவசம் அணியாமல், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருக்கக்கூடாது. அதனை மீறுபவர்கள் மீது அரசும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மொத்தத்தில் அரசும், பொதுமக்களும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கொரோனா இல்லாத தமிழ்நாட்டை விரைவில் உருவாக்கவேண்டும்.

Next Story