ஆட்டத்தை தொடங்கிவிட்டார், மம்தா பானர்ஜி!


ஆட்டத்தை தொடங்கிவிட்டார், மம்தா பானர்ஜி!
x
தினத்தந்தி 8 March 2021 11:02 PM GMT (Updated: 2021-03-09T04:32:43+05:30)

மேற்கு வங்காள மாநிலமும், தமிழ்நாட்டைப் போல சட்டசபை தேர்தலை காணப் போகிறது. தமிழ்நாடு ஒரே கட்டத்தேர்தலை சந்திக்கும் நிலையில், மேற்கு வங்காளம் 8 கட்டத்தேர்தலை சந்திக்க இருக்கிறது.

மேற்கு வங்காள மாநிலமும், தமிழ்நாட்டைப் போல சட்டசபை தேர்தலை காணப் போகிறது. தமிழ்நாடு ஒரே கட்டத்தேர்தலை சந்திக்கும் நிலையில், மேற்கு வங்காளம் 8 கட்டத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, எந்த மாநிலத்திலும் இப்படி 8 கட்டங்களாக தேர்தல் நடந்ததில்லை. தற்போது, மேற்கு வங்காள முதல்-மந்திரியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, 2011, 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்து இருக்கிறார். அசைக்க முடியாத கட்சியாக விளங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தவர் அவர். எதிலுமே, எல்லோரும் செல்லும் வழியில் செல்லாமல், தனக்கென தனிப்பாதை வகுத்து செயல்படுபவர் மம்தா பானர்ஜி. தன்னுடைய பாணியை வேட்பாளர் பட்டியலிலும் காண்பித்து இருக்கிறார்.

கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் கொல்கத்தாவிலுள்ள பவானிப்பூரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், இந்த முறை, பா.ஜ.க.வின் சவாலை ஏற்றுக்கொண்டு, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடுகிறது. மீதி 3 இடங்களை கோர்கா ஜமுக்தி மோர்ச்சா கட்சிக்கு கொடுத்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் எல்லாம், தங்கள் ஆதரவை தருவதாக கூறியிருக்கிறது.

பா.ஜ.க. எப்படியும் மேற்கு வங்காளத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் சூழ்நிலையில், மம்தா பானர்ஜி 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார். இந்த பட்டியலை பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 114 வேட்பாளர்கள், அதாவது 39 சதவீத வேட்பாளர்கள் புதுமுகங்கள்தான். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடமில்லை என்று கூறிவிட்டார். 5 மந்திரிகளுக்கே வேட்பாளர் பட்டியலில் இடமில்லை. இதுதவிர, இப்போதுள்ள 28 எம்.எல்.ஏ.க்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை.

மேற்கு வங்காளத்தில் 49 சதவீதம் பெண் வாக்கா ளர்கள். அந்த வகையில், 51 பெண் வேட்பாளர்களுக்கும் (18 சதவீதம்), 79 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் (27 சதவீதம்), 17 பழங்குடியினருக்கும் (6 சதவீதம்), 42 முஸ்லிம்களுக்கும் (14 சதவீதம்), இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந்த 19 பேருக்கும் (7 சதவீதம்) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வேட்பாளர் பட்டியலில் 9 நடிகர்கள், 2 விளையாட்டு வீரர்கள், ஒரு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மேற்கு வங்காளத்தில் 68 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 79 பேருக்கு போட்டியிட மம்தா பானர்ஜி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதாவது, 11 பொது தொகுதிகளை கூடுதலாக அவர்களுக்கு வழங்கி, தன் துணிச்சலை காட்டியிருக்கிறார். “நந்திகிராமில் போட்டியிடுவேன் என்ற எனது வார்த்தையை காப்பாற்றிவிட்டேன். இது எனக்கு ஒரு எளிதான தேர்தல். ஆட்டம் தொடங்கிவிட்டது. போட்டியில் சந்திப்போம். 21-ம் எண் எனக்கு எப்போதுமே ராசியான எண். நாங்கள்தான் வெற்றி பெறுவோம்” என்று கூறுகிறார், மம்தா. ஆனால், நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திரமோடி, “உங்கள் ஆட்டம் முடிந்துவிட்டது. மேற்கு வங்காள வாக்காளர்களுக்கு ஒரு உண்மையான மாற்றத்தை கொண்டுவருவோம்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். மம்தாவின் கருத்துக்கு பா.ஜ.க. தரப்பில், “தோல்விக்கு பயந்துதான், சொந்த தொகுதியான பவானிபூரில் இருந்து நந்திகிராமுக்கு ‘லாங்ஜம்ப்’ (நீளம் தாண்டுதல்) செய்திருக்கிறார். மம்தா ஓடலாம். ஆனால் ஒளியமுடியாது. மேற்கு வங்காளத்தில் அவருக்கு பாதுகாப்பான தொகுதி எதுவும் கிடையாது” என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் 3-வது முறையாக “ஹாட்ரிக்” வெற்றியை பெற்று, மம்தா ஆளப்போகிறாரா? அல்லது பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கப்போகிறதா? என்பதைத்தான் இந்தியா முழுவதும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. மே 2-ந்தேதி இதற்கு விடை சொல்லும்.

Next Story