தமிழ் மொழிக்கு பிரதமர் தந்த பெருமை!


தமிழ் மொழிக்கு பிரதமர் தந்த பெருமை!
x
தினத்தந்தி 9 March 2021 9:02 PM GMT (Updated: 9 March 2021 9:02 PM GMT)

மாதந்தோறும் பிரதமர் நரேந்திரமோடி ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றுவது வழக்கம்.

மாதந்தோறும் பிரதமர் நரேந்திரமோடி ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பிரதமரின் இந்த உரையை அறிவதற்கு நாடு முழுவதும் ஒரு பெரிய ஆர்வம் உண்டு. பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அவர் ஆற்றிய உரையில், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

பிரதமருக்கு எப்போதுமே தமிழ்மொழி மீது பெரிய பற்று உண்டு. அதனால்தான், 2017-ம் ஆண்டு நடந்த ‘தினத்தந்தி’ பவள விழாவுக்கு பெருமகிழ்ச்சியோடு வந்து, தமிழிலும் சில வார்த்தைகளை தன் உரையில் கூறினார். அதிலிருந்து அவர் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சி களில் எல்லாம், திருவள்ளுவரையோ, தமிழ் இலக்கியங் களையோ, கோடிட்டு காட்டுவதை தவறுவதில்லை. இப்போதைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தமிழை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமோ? என்ற கவலையை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

அவர் உரையில், “நண்பர்களே! சில வேளைகளில் சில எளிய வினாக்கள்கூட, நம்மை பெரிதும் புரட்டிப்போட்டுவிடக்கூடும். இந்த வினாக்கள் நீண்டவையாக இருப்பதில்லை. மிகவும் எளியவையாக இருக்கின்றன. என்றாலும்கூட, நம்மை சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பாக ஐதராபாத்தில் அபர்ணா ரெட்டி என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். நீங்கள் இத்தனை ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக முதல்வராக இருந்தீர்கள். நீங்கள் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கும் வகையில், ஏதேனும் குறைபாடு இருப்பதாக எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?” என்று கேட்டார்.

“நான் இந்த கேள்வி குறித்து ஆழமாக சிந்தித்து பார்த்தேன். என்னிடத்தில் என்ன குறை இருக்கிறது? என்று கேட்டுக்கொண்டேன். தூண்டித்துருவி அலசிப்பார்த்தேன். ஆம், ஒரு குறை இருக்கிறது என்பதை கண்டுணர்ந்தேன். உலகின் மிக தொன்மையான, செம்மொழியாம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள என்னால் முடியவில்லையே என்ற குறை என்னை வாட்டுகிறது. தமிழ் அழகு கொஞ்சும் மொழி. உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் மொழி. தமிழ் மொழி இலக்கியத்தின் தரம், தமிழ் கவிதைகளின் ஆழம் ஆகியவை பற்றி பலர் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள்” என்று பெருமைபட பேசினார்.

பிரதமரின் இந்த உரை, “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தக்குடி தமிழ் குடி” என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. “பெருமை மிகுந்த தமிழ் மொழியை கற்க முடியவில்லையே” என்பதை பிரதமர் நரேந்திரமோடியே, தன்னிடம் உள்ள பெரிய குறையாக கூறுவது தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பை அளிக்கிறது. இதுபோல, “விவசாய கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்கும் பல முயற்சிகள், நாடெங்கிலும், வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றன. எடுத்துக்காட்டாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவர், வாழைக்கழிவுகளைக் கொண்டு, கயிறு உருவாக்கும் ஒரு எந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். முருகேசனுடைய இந்த நூதனமான கண்டுபிடிப்பால் சுற்றுச்சூழல் மற்றும் கழிவுகளுக்கான தீர்வு பிறக்கும். விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்திற்கான வழியும் உண்டாகும்” என்று கூறியுள்ளார். முருகேசன் கண்டுபிடிப்பு இதுவரை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாட்டில் எத்தனையோ முருகேசன்கள் சிறு சிறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி, வெளியே தெரியாமல் தங்களோடு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுபோல, சிறு சிறு கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அதற்கு அங்கீகாரம் கொடுக்கும் முயற்சிகளை தமிழக அரசு தொடங்கவேண்டும் என்பதற்கு பிரதமரின் உரை வழிகாட்டுவதாக இருக்கிறது.

அதேபோல, அவர் உரையில், “தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் ஏரி, குளங்கள் பராமரிப்பு ஒரு இயக்கமாக நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டார். திருவண்ணாமலை முயற்சியும் தமிழ்நாடு முழுவதும் தொடரவேண்டும். ஆங்காங்குள்ள மக்கள் தங்கள் ஊரில் உள்ள குளம், குட்டை, ஏரிகளை பராமரிக்க ஒரு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே பிரதமரின் ஆலோசனையாக இருக்கிறது. மொத்தத்தில் பிரதமரின் இந்த உரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Next Story