கொரோனா 2-வது அலைக்கான எச்சரிக்கை மணியா?


கொரோனா 2-வது அலைக்கான எச்சரிக்கை மணியா?
x
தினத்தந்தி 10 March 2021 8:36 PM GMT (Updated: 2021-03-11T02:06:13+05:30)

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், கடந்த சில நாட்களாக மெல்ல.. மெல்ல.. உயர்ந்து வந்து கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், கடந்த சில நாட்களாக மெல்ல.. மெல்ல.. உயர்ந்து வந்து கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகம், குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது. இவ்வளவுக்கும் அரசு சார்பில், இப்போது முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச விமானப்பயணிகள் கண்டிப்பாக இ-பாஸ் கொண்டுவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில், கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைத்தவிர, மற்ற மாநில பயணிகளுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக 3 நாட்கள் மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்துபோகும் பயணிகள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகள், அவர்கள் வேறு விமான நிலையங்களில் இறங்கிவந்தாலும், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கவேண்டும். தமிழ்நாட்டில் இறங்கும்போதும், அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். மற்ற ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்கள், தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சுய சான்றிதழையும், 14 நாட்களுக்கு முன்பு அவர்களுடைய பயண விவரங்களையும், அங்கிருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் தெரிவிக்கவேண்டும். கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும், 7 நாட்கள் தங்களை கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொரோனா பரிசோதனையை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும் என்பதே, மருத்துவ ஆலோசனையாக இருக்கிறது. நேற்று வரை தமிழ்நாட்டில் 1 கோடியே 77 லட்சத்து 3 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்திருக்கிறது. 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கிறது. 12 ஆயிரத்து 530 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை சற்று கவலையளித்தாலும், 8 லட்சத்து 40 ஆயிரத்து 180 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் சற்று மனத்தெம்பை அளித்துள்ளது.

நேற்று 64 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கையை இன்னமும் அதிகரிக்கவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல வெற்றிகண்ட தமிழக அரசு, இனி செய்யவேண்டியது கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் வேகப்படுத்தவேண்டும். அகில இந்திய அளவில், கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு 9-வது இடத்தில்தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களில், குறிப்பாக மராட்டியம், கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதை மக்கள் ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ளவேண்டும். தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும், ஏறத்தாழ 2 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 621 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசிபோடும் பணிகள் நடந்தாலும், நேற்று வரை 11 லட்சத்து 25 ஆயிரத்து 703 பேர்தான் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

எனவே, இன்னும் அதிகமான எண்ணிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் அனைவரும், ஒருவர் பாக்கியில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். பெரும்பாலான மக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சில இடங்களில் ஆய்வுசெய்து முககவசம் அணியாத மக்களிடம், முககவசம் அணியவேண்டும் என்று அறிவுரையும் வழங்கி, ரூ.200 அபராதமும் வசூலித்தார். இப்போது தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை உருவாகாமல் இருக்கவேண்டும் என்றால், தடுப்பூசி போடுவதிலும் தீவிரம்வேண்டும், பரிசோதனைகளும் அதிகரிக்கப்படவேண்டும், மக்களும் முககவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் இன்னமும் தீவிரம் காட்டவேண்டும்.

Next Story