என்ன வேளாண் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படப் போகிறது?


என்ன வேளாண் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படப் போகிறது?
x
தினத்தந்தி 11 March 2021 9:31 PM GMT (Updated: 2021-03-12T03:01:57+05:30)

வழக்கமாக மத்திய பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நாட்டின் உற்பத்தி, வரிவசூல், விற்பனை என்று எல்லாமே சரிந்து இருந்த நிலையில், அரசாங்கத்தின் வரிவருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. நிதிநிலைமை அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

செலவுகள் அதிகரித்து, வரவு குறைந்தநிலையில் பட்ஜெட்டில் இதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?. அனேகமாக கொரோனா மேல்வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவுக்கு என எந்த மேல்வரியும் விதிக்கப்பட வில்லை. அதற்கு பதிலாக வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல்வரி என்று விதிக்கப்பட்டது.

எதற்காக இந்த புது வரி அமல்படுத்துகிறது? என்பதையும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது அவர், ‘அதிக விளைச்சலை காண்பதற்கும், விளைவிக்கப்படும் பொருட்களை பாதுகாத்து அதை திறம்பட பதப்படுத்தி வைப்பதற்கும், வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் உடனடி தேவையாக இருக்கிறது. இதன்மூலம் இது நமது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் உறுதிசெய்யும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான நிதிஆதாரங்களை உருவாக்கவே இந்த புதிய மேல்வரி மிக குறைவான எண்ணிக்கை உள்ள 
பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். எத்தனை பொருட்களுக்கு வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல்வரி விதிக்கப்படுகிறது?, ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு சதவீதம் வரி விதிக்கப்படுகிறது? என்பதெல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும்போது, அப்படி மக்கள் அந்த வரியை செலுத்தி வசூலாகும் தொகையை அரசு எந்தெந்த வகையில் வேளாண் மேம்பாட்டுக்கு செலவழிக்கப்போகிறது என்பதை அறிவதும் மக்களுக்குள்ள உரிமை ஆகும்.

பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள், மதுவகைகள், பருப்பு வகைகள், பாமாயில், யூரியா போன்ற பொருட்களுக்கும், பெட்ரோல்-டீசலுக்கும் இந்த புதிய மேல்வரி விதிக்கப்பட்டது. இதில் 25 பொருட்களுக்கு அடிப்படை கலால்வரியும், சிறப்பு கூடுதல் கலால்வரியும் குறைக்கப்பட்டது. பெட்ரோலை பொறுத்தமட்டில், ஒரு லிட்டருக்கு ரூ.2.50 வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல டீசலுக்கு ரூ.4-ம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கேற்ற வகையில் கலால்வரியும், சிறப்பு 
கூடுதல் கலால்வரியும் குறைக்கப்பட்டதால் மக்களுக்கு பாதிப்பில்லை. பொதுவாக வரியாக வசூலித்தால் அது மத்திய அரசாங்கத்தின் தொகுப்பு நிதியிலிருந்து எந்த துறைகளுக்கும் செலவு செய்யமுடியும். அதுமட்டுமில்லாமல் நிதிக்குழு பரிந்துரையின்படி, 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.2.50 கலால்வரியாக வசூலித்தால், ரூ.1.02 மாநில  அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். ஆனால் மேல்வரி என்றால் அந்த தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியதில்லை. எந்த நோக்கத்துக்காக வசூலிக்கப்படுகிறதோ? 

அந்த நோக்கத்துக்காக மட்டுமே செலவழிக்கப்படவேண்டும். 2018-19-ம் நிதியாண்டில் 35 மேல்வரிகள் மூலம் மத்திய அரசாங்கத்துக்கு ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 592 கோடி வருவாயாக கிடைத்தது. இப்போது 29 பொருட்களுக்கு வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல்வரி விதிக்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் வேளாண் மேம்பாட்டுக்கு மட்டுமே செலவு 
செய்யப்படவேண்டும். வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் மக்கள் வரியாக அளிக்கும் பணம் செலவழிக்கப்படும் என்பதால் என்னென்ன வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்?, என்னென்ன மேம்பாட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்?, அதன்மூலம் ஒரு சாதாரண விவசாயிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்பதை எல்லாம் அறிய விவசாயிகள் ஆவலோடு இருக்கிறார்கள். இந்த புதிய மேல்வரி எந்த அளவு நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தும்? விளைச்சலை பெருக்கும்? விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும்? என்பது எல்லாம் அடுத்த நிதியாண்டு முடியும் போதுதான் மக்களுக்கு தெரியும்.

Next Story