வாக்காளர்களுக்கு கையுறை; நல்ல முன்னெச்சரிக்கை


வாக்காளர்களுக்கு கையுறை; நல்ல முன்னெச்சரிக்கை
x
தினத்தந்தி 12 March 2021 11:33 PM GMT (Updated: 2021-03-13T07:17:08+05:30)

ஓராண்டுக்கும் மேலாக தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா, இடையில் சற்று குறைந்துவந்தது.

கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி 600-க்கு மேல் பாதிப்புகள் இருந்த நிலையில், பின்னர் மளமளவென்று குறைந்தது. இப்போது மீண்டும் 600-ஐ தாண்டி உயரத் தொடங்கிவிட்டது. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 670 ஆக இருந்தது.

இந்தநேரத்தில், தமிழக சட்டசபை தேர்தலும் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது. பொதுவாக கொரோனா பரவல் மக்கள் அதிகம்கூடும் இடங்களில்தான் வேகமாக இருக்கும் என்பதால், தேர்தலின்போது, கொரோனா பரவல் அதிகமாகி விடுமோ? என்ற ஒரு கலக்கம் மக்களைத்தாண்டி அரசாங்கத்துக்கும் இருக்கிறது.

ஆனால், தகுந்த நடவடிக்கைகளை எடுத்தால், கொரோனா பரவல் அதிகமாகாமல் தேர்தலை நடத்த முடியும் என்பதற்கு பீகார் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலே எடுத்துக்காட்டு. பீகாரில் கடந்த ஆண்டு அக்டோபர் 22, நவம்பர் 3 மற்றும் 7-ந்தேதிகளில் என 3 கட்டங்களாக, அங்குள்ள 243 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் கமிஷன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்ததால், அதிக கொரோனா பரவலின்றி தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இப்போது தமிழ்நாட்டிலும், அதற்கு சற்றே இணையான 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. வாக்குச்சாவடிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க இதுவரை 1,500 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என்றநிலையை மாற்றி, 1,000 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என்று குறைக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வரலாம். வீடு வீடாக பிரசாரம் செய்யும்போது, வேட்பாளரையும் சேர்த்து 5 பேர் மட்டுமே செல்லலாம். அதுபோல, வாகனங்களில் பிரசாரம் செய்யும்போது வேட்பாளருடன் 5 வாகனங்கள் மட்டுமே வரவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 
இடங்களில்தான் தேர்தல் பிரசார கூட்டம் நடத்தவேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதுபோன்ற கூட்டங்களில் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட நிர்வாகங்கள் கண்காணித்து, அதை மீறும் வேட்பாளர்கள் மற்றும் அந்தக் கூட்ட அமைப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருக்கிறார். அனைத்து வாக்காளர்களும் முககவசம் அணிந்தே வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். வாக்காளர்களின் உடல் வெப்பநிலை ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதிக்கப்படும். யாருக்காவது, காய்ச்சலோ, கொரோனா அறிகுறியோ இருந்தால், அவர்களுக்கு ஒரு மருத்துவ சான்றிதழ் கொடுத்து, வாக்குப்பதிவுக்கு என நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில்வந்து வாக்களிக்க 
அனுமதிக்கப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு முழு கவச உடை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக வாக்குப்பதிவு எந்திரத்திலுள்ள பட்டனை அழுத்தித்தான் வாக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற நடைமுறையில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் பதிவுசெய்த பட்டனை மற்றவர்களும் அழுத்தும்போது, கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது என்ற நிலையில், வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும் என்று அறிவித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மிகவும் வரவேற்கத்தகுந்தது. ஆனால், இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்க வேண்டிய சூழ்நிலையில், அந்த மையை வைத்தவுடன் கையுறை அணிந்தால் 
அடையாள மை அழியும் வாய்ப்பும் இருக்கிறது.

எனவே, உடனடியாக காய்ந்துவிடும் நிலையில், அடையாள மை தயாரிக்கப்படவேண்டும். கையுறை வழங்கப்படுவதுபோல, முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு முககவசம் வழங்குவதற்கும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்யவேண்டும். தேர்தல் என்பது இப்போது ஒரு கண்டம்போல, கொரோனா பரவலுக்கு தெரிகிறது. அனைத்து முன்னெச்சரிக்கையையும் எடுத்து இதைத்தாண்டிவிட்டால், அடுத்து சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி முயற்சிகள் மூலம் கட்டுப்படுத்திவிடமுடியும்.

Next Story