பெண்களுக்கும் விவசாயிகள் அங்கீகாரம்!


பெண்களுக்கும் விவசாயிகள் அங்கீகாரம்!
x
தினத்தந்தி 15 March 2021 9:20 PM GMT (Updated: 2021-03-16T02:50:49+05:30)

கடந்த 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

கடந்த 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடினாலும், மகாகவி பாரதியார், “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்று பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் விடுதலைக்கு முழக்கமிட்டார். “ஒரு நாட்டில் உள்ள பெண்களின் நிலையை வைத்தே, அந்த நாட்டின் நிலையை கூறிவிடலாம்” என்று கூறினார், மறைந்த பிரதமர் நேரு. இப்போதும் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலைப்பார்த்தால், மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவ்வளவு ஏன், தமிழ்நாட்டில் இந்தத்தேர்தலில் வாக்காளர்கள் பட்டியலை பார்த்தால், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473. ஆனால், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து727 ஆகும்.

எல்லா துறைகளிலும் வேகமாக கால்தடம் பதிக்கும் பெண்களுக்கு விவசாயத் துறையில் அங்கீகாரம் இல்லை என்பது அவர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது. டெல்லி எல்லைகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடும் பனியிலும், கொட்டும் மழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் இரவு-பகலுமாக போராட்டம் நடத்திவருகிறார்கள். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்த போராட்டங்களுக்கு பெண்களே தலைமை தாங்கி நடத்தினார்கள். இந்த மாநிலங்களை சேர்ந்த பெண் விவசாயிகள், டிராக்டர்கள், கார்கள், ஜீப்புகள் போன்ற மோட்டார் வாகனங்களை ஓட்டிக்கொண்டுவந்து, சிங்கு, திக்ரி, காசிப்பூர் போன்ற போராட்டக்களங்களில், மிக தீவிரமாக போராட்டங்களை நடத்தினர். பெண்கள் அனைவரும் மஞ்சள், பச்சை நிறங்களில் தலையை சுற்றியோ, கழுத்திலோ, தோளிலோ “ஸ்கார்ப்” அணிந்திருந்தார்கள்.

அவர்கள் வெறுமனே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று மட்டும் கூறவில்லை. நாங்களும் வயல் வெளிகளில், ஆணுக்கு இணையாக எவ்வளவோ வேலைகளை செய்கிறோம். ஆனால், எங்களுக்கு விவசாயிகள் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. அரசாங்க பதிவேடுகளில்கூட, எங்களை விவசாயிகள் என்று அங்கீகரிக்கவில்லை. பெண் விவசாயிகள் என்ற வகையில் எங்களுக்கு நில உரிமை பத்திரம் இல்லை. பெரும்பாலும் அது ஆண்கள் பெயரில்தான் இருக்கிறது. வங்கிக் கடன்களோ, கூட்டுறவு சங்க கடன்களோ, அரசாங்க துறைகளின் உதவிகளோ பெண் விவசாயிகள் என்ற அங்கீகாரத்தில் கிடைப்பதில்லை என்று தங்கள் மனக்குமுறலை அந்தப் போராட்டத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.பி.சிங், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும், நில நிர்வாக குறியீட்டு மைய பதிவேடுகளின் அடிப்படையிலும், இந்தியாவில் வேளாண் தொழிலாளர்களில் 32 சதவீதம் பெண்கள்தான் என்றும், விளைபொருள் உற்பத்தியில் 55 சதவீதம் முதல் 66 சதவீதம் வரை, அவர்களின் பங்கு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், மொத்த நிலங்களில் 12.8 சதவீதம்தான் பெண்கள் பெயரில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் விவசாயத்தில் பெண்களின் பங்கு பெரும்பங்கு. நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்வது போன்ற பணிகளை எல்லாம் பெரும்பாலும் பெண்களே செய்கிறார்கள். எனவே, டெல்லி போராட்டக்களத்தில் பெண் விவசாயிகள் விடுத்த கோரிக்கையான, பெண்களுக்கும் விவசாயிகள் என்ற அங்கீகாரம் வழங்கப்படவேண்டும், அதைத்தொடர்ந்து விவசாயிகள் என்ற உரிமைகளும், சலுகைகளும், உதவிகளும் வழங்கப்படவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை, அடுத்து தமிழ்நாட்டில் அமையப்போகும் அரசு முன்னுரிமை கொடுத்து செய்யவேண்டும் என்பதே வேளாண் தொழில்களில் ஈடுபடும் பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story