தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஏறுமுகம்


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஏறுமுகம்
x
தினத்தந்தி 18 March 2021 1:46 AM GMT (Updated: 18 March 2021 1:46 AM GMT)

பிரதமர் நரேந்திரமோடி, மாநில முதல்-மந்திரிகளோடு நேற்று காணொலி மூலம் கொரோனா பரவல் குறித்து நடத்திய ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனை வேகப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி, மாநில முதல்-மந்திரிகளோடு நேற்று காணொலி மூலம் கொரோனா பரவல் குறித்து நடத்திய ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனை வேகப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இப்போது பரவலை தடுத்து நிறுத்தாவிட்டால் அது தேசிய அளவிலான பெரிய தொற்று பரவலாக ஆகிவிடக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளையோடு முடிவடைகிறது. இப்போதே அரசியல் கட்சித்தலைவர் களும், வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்கள். தலைவர்களின் சுற்றுப்பயண நேரங்களின்போது ஏராளமான தொண்டர்கள் உற்சாகத்தோடு அலை, அலையாய் வருகிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. அந்த கூட்டநெரிசலில் சமூகஇடைவெளியும் இல்லை. இந்தநிலையில் ஏற்கனவே கடந்த சில நாட்களிலேயே இருமடங்குக்கும் அதிகமாக போய்விட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இன்னும் வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று காலையில் நிருபர்களிடம் கூறியபோது, ‘கொரோனா பரவல் தற்போது ஏறுமுகத்தில் இருக்கிறது. கொரோனா தொற்றை பொறுத்தவரையில், அது எந்த கூட்டம் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. ஆண், பெண் என்றும், குழந்தைகள், முதியோர்கள் என்றும் பாகுபாடு பார்ப்பது இல்லை. எங்கு 20 பேருக்கு மேல் கூட்டம் கூடினாலும் எல்லோரும் முககவசம் அணியவேண்டும் என்பது கட்டாயம். மருத்துவர்கள் கூட்டாக விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அனைத்து கட்சிகளும் தாங்கள் சார்ந்த கூட்டங்களில் தொண்டர்கள் அனைவரும் முககவசம் அணிவதை உறுதிப்படுத்தி கொள்ளவேண்டும். அனைவரும் முககவசம் அணியவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து கொண்டு வருகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியபிறகு வெளியிட்ட அறிக்கையில், ‘பெரும்பாலான இடங்களில் முககவசமின்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடப்பது, பொதுஇடங்களில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது ஆகியவையே தொற்று அதிகரிக்க காரணம். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி பெற்றவர்கள் அதை கடைப்பிடிக்காததால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுவதும், வங்கிகள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு வழிமுறை பின்பற்றாததால் கூட்டாக சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுஇடங்களில் மக்கள் முககவசம் அணிவதையும், அரசின் வழிகாட்டுதல் களை நிறுவனங்கள் பின்பற்றுவதையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரம், வருவாய்த்துறையினர் கண்காணிக்கவேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்’ என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தலைமைச்செயலாளரின் உத்தரவு வெறும் உத்தரவாக மட்டும் இருந்துவிடாமல், மிக கடுமையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ஏறுமுகத்தில் இப்போதிருக்கும் கொரோனா தொற்று பரவலை இறங்குமுகத்துக்கு கொண்டுவரமுடியும். நேற்று பிரதமர், முதல்-மந்திரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் ‘டெஸ்ட், டிராக், ட்ரீட்’ என்று ஆங்கிலத்தில் கூறிய இந்த 3 ‘டீ’க்கள், அதாவது கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டவர் களுடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று தேடிப்பிடித்து பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை என்பதில் அரசு இப்போது உள்ள வேகத்தைவிட இன்னும் அதிகமான வேகம் காட்டவேண்டும். தடுப்பூசி போடும் பணிகளும் இன்னமும் தீவிரப்படுத்தப்படவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினமும் வீடுதோறும் பணியாளர்கள் வந்து காய்ச்சல் இருக்கிறதா? என்று கேட்டதுபோல, இப்போதும் தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? என்று கேட்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடும் அனுமதியை விரைவில் மத்திய அரசாங்கத்திடம் பெற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story