தடுப்பூசியும் வேண்டும்; கபசுர குடிநீரும் வேண்டும்!


தடுப்பூசியும் வேண்டும்; கபசுர குடிநீரும் வேண்டும்!
x
தினத்தந்தி 21 March 2021 8:37 PM GMT (Updated: 21 March 2021 8:37 PM GMT)

தமிழ்நாட்டில் கொடிய கொரோனா கால்தடம் பதித்து ஓராண்டு ஆகிவிட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறப்போகிறது.

தமிழ்நாட்டில் கொடிய கொரோனா கால்தடம் பதித்து ஓராண்டு ஆகிவிட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறப்போகிறது. கடந்த ஆண்டு மார்ச் 7-ந்தேதி முதலாவதாக ஒருவர் கொரோனா தொற்றுடன் மஸ்கட்டில் இருந்து வந்தார். மார்ச் 25-ந்தேதி தான் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பல தளர்வுகளுடன் 14-வது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. படிப்படியாக குறைந்துவந்த கொரோனா மீண்டும் அச்சமூட்டும் வகையில், 81 நாட்களுக்கு பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1,289 ஆக உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி 438 பேருக்கு தான் பாதிப்பு இருந்தது. சரி, “இனி தொற்றின் தாக்கம் குறைந்துவிடும். தடுப்பூசியும் போடத்தொடங்கிவிட்டார்கள். எனவே ‘விரட்டி அடித்துவிடலாம் கொரோனா அரக்கனை” என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது மீண்டும் அதிகமாக உயரத்தொடங்கி இருக்கிறது.

முதற்கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் போன்ற மருத்துவ பணியாளர்களுக்கும், தொடர்ந்து கொரோனா ஒழிப்பில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோயுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கிடையில் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தஉறைவு ஏற்படும் என்று உலகம் முழுவதும் ஒரு வதந்தி காட்டுத்தீயாக பரவியது. உலக சுகாதார நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக மறுத்தது. எந்த ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போட தயக்கம் இருந்ததோ, அதே ஐரோப்பிய யூனியனின் சுகாதார நிறுவனம், “ஆஸ்டிரா ஜெனிக்கா (கோவிஷீல்டு) தடுப்பூசி பாதுகாப்பானது. மிகுந்த பலனளிக்கக்கூடியது. ரத்தஉறைவு அபாயம் எதையும் ஏற்படுத்தாது” என்று உறுதியாக தெரிவித்ததன் அடிப்படையில், இப்போது பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளெல்லாம் இந்த தடுப்பூசி மருந்தை போடத்தொடங்கிவிட்டது.

அமெரிக்காவும் இந்த தடுப்பூசி மருந்தை மெக்சிகோ, கனடா நாடுகளுக்கு அனுப்புகிறது. புனேவில் உள்ள ‘சீரம் நிறுவனம்’ தயாரிக்கும் இந்த மருந்தை 72 நாடுகள் இந்தியாவில் இருந்து வாங்குகிறது. இந்தியாவில் இருந்துவரும் கோவிஷீல்டு மருந்தை நாங்கள் பயன்படுத்துவோம் என்று கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனவே, எல்லா நாடுகளும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்தும்போது, தமிழ்நாட்டிலும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோயுள்ளவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், ஒருவர் பாக்கியில்லாமல் தடுப்பூசி மருந்தை உடனடியாக போட்டுக்கொள்ளவேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன் பிரசாரக்கூட்டங் களில், ‘நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன், நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள்’ என்று கூறி வருவது மிகவும் வரவேற்புக்குரியது. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அனைத்து தலைவர்களும் தடுப்பூசி போடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவேண்டும்.

இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு கொரோனா உச்சநிலைக்கு போய்க்கொண்டிருந்த நேரத்தில், அதை தடுக்க அனைவரும் கபசுர குடிநீர் குடிக்கவேண்டும் என்று அரசு சார்பிலும், சமூகஆர்வலர்கள் சார்பிலும், ஏன் மருத்துவர்கள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. கபசுர குடிநீர் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற வகையில், இதன் பயன்பாடு அதிகமாக இருந்த நேரத்தில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை காணமுடிந்தது. தொற்று குறைந்தவுடன் அரசு சார்பில் கபசுர குடிநீர் வழங்கி வந்ததும் நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுமக்களிடமும் ஆர்வம் குறைந்துவிட்டது. வீடுகளில் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட்டில் கபசுர குடிநீர் பொடி வாங்குவது இடம்பெற்று இருந்தது. ஆர்வம் குறைந்துபோனதால் அவர்களும் அதை இப்போது வாங்குவதில்லை. எனவே நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் வினியோகத்தை முன்புபோல அரசின் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவமுகாம்களில் அதிகளவில் வினியோகித்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் குடிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கவேண்டும்.

Next Story