‘நீட்’டின் இன்னொரு பெயர் திறனறி தேர்வா?


‘நீட்’டின் இன்னொரு பெயர் திறனறி தேர்வா?
x
தினத்தந்தி 22 March 2021 8:58 PM GMT (Updated: 2021-03-23T02:28:56+05:30)

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வே வேண்டாம். எங்கள் மாணவர்களால் அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களால், ஏழை-எளிய மாணவர்களால் ‘நீட்’ தேர்வை எழுதி மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியவில்லையே என்ற ஆதங்கம் பெருமளவில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வே வேண்டாம். எங்கள் மாணவர்களால் அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களால், ஏழை-எளிய மாணவர்களால் ‘நீட்’ தேர்வை எழுதி மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியவில்லையே என்ற ஆதங்கம் பெருமளவில் இருக்கிறது. நல்ல வேளையாக மருத்துவ கல்லூரியோடு தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று கூறப்படும் ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு முடிந்துவிடுகிறது. மற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளில், கலை கல்லூரிகளில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துவிடுவதால், ஏழை மாணவர்களும் என்ஜினீயரிங் படிப்பு படிக்க முடிகிறது. கலை கல்லூரிகளில் சேர முடிகிறது.

ஏற்கனவே என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு வருகிறது, வருகிறது என்று கூறிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போது அது வரவில்லை என்ற மனநிறைவு கொண்டிருந்த நேரத்தில், சென்னைக்கு வந்திருந்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டுவிட்டார். ‘நாடு முழுவதும் இனி உயர்கல்விக்கான, அதாவது என்ஜினீயரிங், கலை கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘ஆப்டிடியூடு டெஸ்ட்’ என்ற தேர்வை எழுத வேண்டும்’ என்று கூறிவிட்டார். தமிழ் வளர்ச்சித்துறையின் ஆட்சி சொல்லகராதியில் ‘ஆப்டிடியூடு டெஸ்ட்’ என்பதற்கு விருப்பம் அல்லது நாட்டம் குறித்த தேர்வு, திறனறித்தேர்வு என்று பொருள் கூறப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் படிக்க செல்லும் மாணவர்கள் ‘சாட்’ மற்றும் ‘ஜி.ஆர்.இ.’ என்ற தேர்வை எழுத வேண்டிய நிலை இருக்கிறது. இது அந்த மாணவர்களை தர மதிப்பீடு செய்யும் தேர்வுகள் ஆகும். இதேபோன்ற தேர்வுதான் நாடு முழுவதும் என்ஜினீயரிங், மருந்தியல், கலை கல்லூரிகள் போன்ற உயர் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய நிலை வரும் என்று கூறி இருக்கிறார். இது தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நீட்’ மற்றும் ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளை போல தனது எல்லைகளை விரிவாக்கும் முயற்சி என்று அவரே கூறியிருக்கிறார். மாணவர்கள் எந்த படிப்பை படிக்க விரும்புகிறார்கள்? என்பதை உளவியல் ரீதியாக அறிவதற்கு நடத்தப்படும் தேர்வா? அல்லது அவர்கள் விரும்பும் படிப்புகளுக்காக பிளஸ்-2 படிப்பில் படித்த அவர்களுக்குரிய பாடங்களில் அவர்கள் திறனை அறியும் தேர்வா? என்பது இன்னும் விளக்கப்படவில்லை. ஆனால், ‘நீட்’டின் மறுபெயராக இந்த திறனறித்தேர்வு ஒரு நுழைவுத்தேர்வு என்பது மட்டும் நிச்சயம். நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ‘நீட்’ தேர்வின் நீட்சிதான் இந்த திறனறித்தேர்வு என்பது எல்லோருடைய கருத்தாக இருக்கிறது.

நுழைவுத்தேர்வு என்பது மருத்துவத்தோடு முடிந்துவிடட்டும். அதன் எல்லையை விரிவாக்குகிறோம் என்ற வகையில் என்ஜினீயரிங், மருந்தியல், கலை கல்லூரிகள் போன்றவற்றில் மாணவர் சேர்க்கையை நடத்துவோம் என்றால் நிச்சயமாக அது பெரும் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். ஏற்கனவே பிளஸ்-2 படித்து முடித்தவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளிலோ, கலை கல்லூரிகளிலோ முன்பு சேர்ந்தது போல் சேராமல், நிறைய கல்லூரிகளில் காலி இடங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்போது திறனறித்தேர்வு என்ற பெயரில் மற்றொரு நுழைவுத்தேர்வு என்று நடத்துவது கண்டிப்பாக உரிய பலனை தராது. தமிழ்நாட்டில் போட்டியிடும் தி.மு.க.வானாலும் சரி, அ.தி.மு.க.வானாலும் சரி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய பாடுபடுவோம் என்று கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி இன்னொரு முனை தாக்குதலாக, திறனறித்தேர்வு என்று கொண்டு வருவதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்காது. உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கணைகள் வீசத் தொடங்கட்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story