முககவசம் அணியவில்லையா... விமானத்தில் பயணம் செய்யமுடியாது!


முககவசம் அணியவில்லையா... விமானத்தில் பயணம் செய்யமுடியாது!
x
தினத்தந்தி 23 March 2021 8:35 PM GMT (Updated: 23 March 2021 8:35 PM GMT)

ஓராண்டு நிறைவுற்ற நிலையில், தமிழ்நாட்டில் நன்றாக குறைந்து வந்துகொண்டிருந்த கொரோனா பாதிப்பு இப்போது மீண்டும் தொடக்க காலங்களில் எப்படி உயர்ந்துவந்ததோ... அதுபோல நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

ஓராண்டு நிறைவுற்ற நிலையில், தமிழ்நாட்டில் நன்றாக குறைந்து வந்துகொண்டிருந்த கொரோனா பாதிப்பு இப்போது மீண்டும் தொடக்க காலங்களில் எப்படி உயர்ந்துவந்ததோ... அதுபோல நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மராட்டியம், தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகம், அரியானா ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமே தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒருபக்கம் கொரோனா பரிசோதனை, மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் முயற்சிகள் எல்லாம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தாலும், மக்களின் அலட்சியப்போக்கா அல்லது நமக்கெங்கே வரப்போகிறது என்ற மெத்தனமா என்று தெரியவில்லை. கொரோனாவை தடுப்பதற்கு கையில் எடுக்கவேண்டிய முக்கிய ஆயுதமான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சோப்புபோட்டு கழுவுதல் என்பதையெல்லாம் மக்கள் சுத்தமாக மறந்துவிட்டார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறிப்பாக திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகளில் முககவசம் அணியாமல் இருப்பதே, இப்போது உயர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பரவலுக்கு முக்கியகாரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், முககவசம் அணிவதை கட்டாய மாக்கும் வகையில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் நல்ல பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளார். ‘முககவசம் அணியவில்லையா... விமானத்தில் பயணம் செய்யமுடியாது’, என்பதே அதன் அடிப்படை அம்சமாகும். சமீபத்தில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர், தான் மேற்கொண்ட விமான பயணத்தில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பெரும்பாலான பயணிகள் பின்பற்றாததை பார்த்து, இத்தகைய விதிகளை விமான பயணிகள் முழுமையாக பின்பற்றும்படி நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். முககவசம் அணியாதவர்களை விமான பயணம் செய்வதற்கு தடைவிதிக்கும் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதையொட்டி இப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் விமான நிலையத்துக்குள் நுழைவதில் இருந்து பயணத்தை முடித்துவிட்டு வெளியே வரும்வரை கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். விமானம் புறப்படுவதற்கு முன்பு யாராவது முககவசத்தை அணியாமலோ, மூக்குக்கு கீழே அணிந்திருந்தாலோ அவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்படு வார்கள். முககவசம் அணியாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். விமானத்துக்குள் அமர்ந்தபிறகும் முககவசம் அணியாமல் இருந்தாலோ, மூக்குக்கு கீழே இழுத்துவிட்டு கொண்டிருந் தாலோ, திரும்ப திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் அதை கேட்காமல் இருந்தாலோ ஒழுங்கீனமான பயணிகள் என்ற பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டு, 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை அவர்கள் எந்த விமானத்திலும் பயணம் செய்யமுடியாதபடி அவர்களின் பெயர் இது தொடர்பான பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவும், விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அதனைத் தொடர்ந்து பிறப்பித்த விதிகளும் நிச்சயமாக வரவேற்கத் தக்கது. இந்த விதிகளும் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. இனி விமான நிலையங்களிலும் சரி, விமானங்கள் பறக்கும்போதும் சரி யாரையும் முககவசம் அணியாமல் பார்க்கமுடியாது. இதேபோல ரெயில்கள்-பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கும், இத்தகைய விதிகள் பிறப்பிக்கப்பட்டு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும் அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஏன் சாலைகளிலும் யாரும் முககவசம் அணியாமல் இருக்கக்கூடாது என்ற வகையில் அரசு அதிகாரிகள் உடனடியாக அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பறக்கும்படை அமைத்து முககவசம் அணியாதவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அறிவிப்புபோல, தமிழகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். தேர்தல் வருகிறது. தலைவர்கள் பிரசாரம் செய்யும்போதும், பிரசார கூட்டங்களிலும் நிறைய மக்கள் கூடுகிறார்கள். அங்கும் முககவசம் அணியாதவர் களை பார்க்கவே முடியாது என்றவகையில் அரசும், நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கட்சிகளும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளை தங்கள் கூட்டங்களில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

Next Story