இந்தியா புறக்கணித்த இலங்கைக்கு எதிரான தீர்மானம்


இந்தியா புறக்கணித்த இலங்கைக்கு எதிரான தீர்மானம்
x
தினத்தந்தி 26 March 2021 10:24 PM GMT (Updated: 2021-03-27T03:54:39+05:30)

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, ஒருநாள் பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தினத்தந்தி’ செய்தியாளர் அவரிடம், ‘அமைச்சரவையில் மாற்றம் உண்டா?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘உண்டென்றும் சொல்வதற்கில்லை, இல்லையென்றும் சொல்வதற்கில்லை’ என்று பதிலளித்தார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, ஒருநாள் பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தினத்தந்தி’ செய்தியாளர் அவரிடம், ‘அமைச்சரவையில் மாற்றம் உண்டா?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘உண்டென்றும் சொல்வதற்கில்லை, இல்லையென்றும் சொல்வதற்கில்லை’ என்று பதிலளித்தார். அதேபோன்ற ஒரு நிலைப்பாட்டைத்தான் இப்போது இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா எடுத்துள்ளது. இதை இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடாகவும் எடுத்துக்கொள்ள முடியாது, எதிரான நிலைப்பாடாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

2009-ம் ஆண்டில் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரில் மனிதஉரிமைகள் மீறப்பட்டன. ஈவுஇரக்கமின்றி எண்ணற்ற தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உயிரையும், உைடமையையும் இழந்தனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கூறப்பட்டு, தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

இதற்கு முன்பு ராஜபக்சே அதிபராக இருந்தபோது, 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மூன்று முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. இவ்வளவுக்கும் 2012, 2013-ல் இதுபோன்ற தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது. 2014-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. இதற்கிடையில், சிறிசேனா அதிபராக இருந்தபோது, சர்வதேச அமைப்பிலான சுதந்திரமான விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், ராஜபக்சே அதிபரானவுடன் அந்தக்குழு கலைக்கப்பட்டது. தற்போது ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையத்தில், ‘இலங்கையில் சீர்குலைந்த நட்புறவின் மறுசீராக்கம், நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்பு மற்றும் மனிதஉரிமைகள் மீறல்’ தொடர்பாக இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மலாவி, மான்டனீக்கா, வடக்கு மாசிடோனியோ ஆகிய நாடுகள் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன. போர்க்குற்றங்கள் தொடர்பான நியாயமான விசாரணையை மேற்கொள்வதற்கான வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது. நடுநிலையான விசாரணையை இலங்கை அரசு நடத்தவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 47 நாடுகளில், 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், ரஷியா உள்பட 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், நேபாளம் உள்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தியாவை பொறுத்தமட்டில், இரு அடிப்படை அம்சங்களை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஒன்று, இங்கையில் வாழும் தமிழர்களுக்கு சமவாழ்வு, நீதி, கண்ணியம், அமைதி கிடைக்கவேண்டும். மற்றொன்று, இலங்கையில் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு இருக்கவேண்டும். இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்தது என்று ஒரு உயர்அதிகாரி தெரிவித்தார். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டாலும், இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின்படி, மாகாண கவுன்சில்களுக்கு விரைவில் தேர்தல்நடத்தி, அவை முறையாக செயல்பட அனுமதிக்கவேண்டும். அதிகாரப்பகிர்வும் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இந்தியா முழுஆதரவு அளித்துள்ளது. இலங்கையில் சீனா அழுத்தமாக காலூன்ற முயற்சித்துக்கொண்டிருக்கிறது. பல உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறது. தாராளமாக நிதியுதவிக்கும் தயாராக இருக்கிறது. இலங்கையில் இந்தியாவும் பல திட்டங்களுக்கு முதலீடுகள் செய்துள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக பல திட்டங்கள் இப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இலங்கையோடு நட்புறவும் வேண்டும். அதேநேரத்தில் இலங்கை தமிழர்களின் உரிமைகளையும், நல்வாழ்வையும், சமவாழ்வையும் விட்டுக்கொடுக்க முடியாது. நல்ல வேளையாக இலங்கையின் வேண்டுகோளை ஏற்று, இந்தியா இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை. அதேநேரத்தில், இலங்கையில் பாதிக்கப்பட்டது இலங்கை தமிழர்கள், மனித உரிமைகள் மீறப்பட்டதால் அவதிப்பட்டதெல்லாம் இலங்கை தமிழர்கள், போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதெல்லாம் இலங்கை தமிழர்கள் மீது என்பதால், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருக்கக்கூடாது, ஆதரவாக வாக்களித்திருக்கவேண்டும் என்ற கருத்துகளும் பல தரப்பில் இருந்து வெளிவருவதை ஒதுக்கிவிட முடியாது. 

Next Story