தற்போது அல்ல; எப்போதுமே ஊரடங்கு வேண்டாம்!


தற்போது அல்ல; எப்போதுமே ஊரடங்கு வேண்டாம்!
x
தினத்தந்தி 28 March 2021 10:48 PM GMT (Updated: 28 March 2021 10:48 PM GMT)

ஓராண்டு ஆகியும் இன்னமும் கொரோனாவை ஒழிக்கமுடியாமல் உலகமே தத்தளித்து கொண்டிருக்கிறது.

ஓராண்டு ஆகியும் இன்னமும் கொரோனாவை ஒழிக்கமுடியாமல் உலகமே தத்தளித்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நன்றாக குறைந்து கொண்டே வருகிறது; இனி இப்படியே படிப்படியாக கொரோனா குறைந்து விடும். தடுப்பூசியும் வந்துவிட்டது, பழைய வாழ்க்கையை மீண்டும் அடைவதற்கான காலம் விரைவில் வந்துவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உயர்ந்து கொண்டு போகும் நிலையை பார்த்தால், அச்சமாகவே இருக்கிறது. 2-வது அலை இல்லை... இல்லை... இல்லையென்று தமிழக சுகாதாரத்துறை உறுதியாக கூறினாலும், பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி 2-வது அலை தொடங்கிவிட்டது. அதனால்தான் கடந்த மாதத்தில் வர்த்தக செயல்பாடுகளின் குறியீடு எண் குறைந்திருக்கிறது. ஆனால் 2-வது அலை 100 நாட்களுக்குத்தான் இருக்கும். இப்போது உயர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கணக்கு பார்த்தால், ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்துக்கு போவதற்கான வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறப்பட்டு இருந்தாலும், புதிதாக ஊரடங்கை பிறப்பித்து விடக்கூடாது என்றும் அதில் எச்சரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ‘கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டிருப்பது நிச்சயமாக கவலையளிக்கத்தக்க ஒன்று. ஆனால் தற்போது இதை சமாளிக்க நாடு தயாராக இருக்கிறது. இந்த கொரோனா பாதிப்பு நமது பொருளாதார வளர்ச்சியை பாதிக்காது. இப்போது நம்மிடம் தடுப்பூசி உள்ளது. மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு முறை நன்றாக தெரியும். கொரோனா குறைந்தவுடன் அலட்சியமாக இருந்த மக்கள், தற்போது கொரோனா பரவல் அதிகரித்தவுடன் மீண்டும், அதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ய தொடங்கிவிடுவார்கள். கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிப்பதற்கான நிலை ஏற்படாது. ஏனெனில் கடந்த ஆண்டில் கொரோனா திடீரென வேகமாக பரவியது நமக்கு புதிதாக இருந்த நிலையில் அதிர்ச்சியை அளித்தது. இப்போது சில புதிய உருமாறிய கொரோனாக்கள் வந்தாலும், கொரோனா என்றால் என்ன?, அதை எப்படி சமாளிப்பது? என்பது எல்லோருக்கும் தெரியும் நிலையில், மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பதற்கான சூழ்நிலை இல்லை’ என்றார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் இவ்வாறு கூறினாலும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தி பரவி வருகிறது. அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும்வரை இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பக்கூடாது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது’ என்று கூறியதுதான் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அல்ல; எப்போதுமே ஊரடங்கை மீண்டும் பிறப்பிக்கக்கூடாது. ஏனெனில் கடந்தமுறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தொழில்கள் எல்லாம் பாதித்து, வர்த்தகம் வீழ்ச்சியடைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி, மக்களின் வருமானம் அதல பாதாளத்துக்கு போய் வாழ்க்கையே சுருண்டு போய்விட்டது. இப்போதுதான் மெல்ல... மெல்ல... இயல்பு வாழ்க்கைக்கு மீண்டுவரும் நிலையில், இந்த கொரோனா பரவல் அச்சமூட்டும் நிலையில் இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில், அரசாங்கத்துக்கு கொரோனாவை சமாளிப்பதில் நல்ல அனுபவம் இருப்பதால், பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடும் பணிகளை இன்னும் விரைவுபடுத்தவேண்டும். பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும். பொதுமக்களுக்கும் கொரோனாவை தடுக்க கையிலேயே மாமருந்தாக முககவசமும், சமூக இடைவெளியும், ஒரு துண்டு சோப்பும் இருக்கிறது. அதை பயன்படுத்தினாலே கொரோனா உங்கள் பக்கம்வராது என்பதை சொல்லிப்பார்க்கலாம். கேட்காவிட்டால், கடும் நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை எடுக்க வலியுறுத்தலாம். மொத்தத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்குதான் ஒரேவழி என்ற எண்ணத்தை மட்டும் அரசு ஒருபோதும் மனதில் கொள்ளக்கூடாது. ஊரடங்கு இல்லாமலேயே எங்களால் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்று சாதித்து காட்டவேண்டும்.

Next Story