தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கூட்டுத்தொற்று அபாயம் இல்லையா?


தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கூட்டுத்தொற்று அபாயம் இல்லையா?
x
தினத்தந்தி 29 March 2021 8:40 PM GMT (Updated: 2021-03-30T02:10:58+05:30)

நன்றாக குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்றின் வேகம் இப்போது குதிரை பாய்ச்சலில் உயரத்தொடங்கிவிட்டது.

நன்றாக குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்றின் வேகம் இப்போது குதிரை பாய்ச்சலில் உயரத்தொடங்கிவிட்டது. 4 மாதங்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. நேற்று மட்டும் 2 ஆயிரத்து 279 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் வாராந்திர சராசரி 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இங்கொன்றும், அங்கொன்றுமாக வந்து கொண்டிருந்த கொரோனா இப்போது ஒரேநேரத்தில், ஒரே குடும்பத்தில் பலருக்கு என்றும், கல்விநிலையங்களில் கொத்து, கொத்தாக பாதிப்பு என்ற நிலையிலும் ‘கிளஸ்டர்’ என்று கூறப்படும் கூட்டு தொற்றாகவும் உருவெடுத்துள்ளது.

பொதுவாக இளைஞர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு வராது. அவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகம் என்ற நிலையையெல்லாம் மாற்றும் வகையில், தஞ்சாவூரில் மட்டும் 227 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தேசியத்திறன் பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று வந்த நிலையில், மேலும் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 550 மாணவர்களில் ஏறத்தாழ 9 சதவீதம் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டம் கூடும் இடங்களில்தான் கொரோனா தொற்று அதிகமாக பரவுகிறது என்ற வகையில், இந்தியா ஒரு கஷ்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வில், மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங் களுக்கும் எழுதிய கடிதத்தில், ‘அனைத்து மதங்களுக்கும் பண்டிகைகள் அடுத்தடுத்து வரக்கூடிய நேரத்தை கருத்தில் கொண்டு, அங்கெல்லாம் கூட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே கடந்த 23-ந்தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ‘மதவழிபாட்டு தலங்களில் எந்த அளவில் சமூகஇடை வெளி பின்பற்றப்படவேண்டும்?, எந்த அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்?’ என்றெல்லாம் தெளிவாக கூறப்பட்டிருந்தது. கல்விநிலையங்களிலும், மதவழிபாட்டு தலங்களிலும் எங்கே கூட்டுத்தொற்று வந்துவிடுமோ? என்று அஞ்சப்படும் நிலை, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தலையொட்டி, தினமும் இந்த மாநிலங்கள் முழுவதும் நடக்கும் அரசியல் கட்சி பிரசாரக்கூட்டங்களில் மட்டும் வந்துவிடாதா?, அதைப்பற்றி மட்டும் ஏன் மத்திய உள்துறை அமைச்சகமோ?, சுகாதாரத்துறை அமைச்சகமோ?, தேர்தல் ஆணையமோ?, மாநில அரசுகளோ? கருத்தில்கொள்ளாமல் இருக்கிறது என்பதுதான் கொரோனா பரவல் இன்னமும் அதிகரித்துவிடக்கூடாது என்று ஏங்கிக்கொண்டிருக்கும் சமூகஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் மராட்டியம், குஜராத், அரியானா, தமிழ்நாடு உள்பட 12 மாநில உயர்அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி இருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர், ‘90 சதவீத கொரோனா உயிரிழப்புகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே ஏற்படுகிறது. 44 சதவீதம் மக்கள்தான் முககவசம் அணிகிறார்கள்’ என்ற மத்திய அரசாங்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையையும் அவர் தெரிவித்து, ஒரு அபாய சங்கை ஊதிவிட்டார். தமிழ்நாட்டில் பல வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து கட்சிகள் சார்பில் நடக்கும் தேர்தல் பிரசாரக்கூட்டங் களிலும் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு பெருந்திரளாய் கூடி நிற்கிறார்கள். இதில் பெரும்பாலான தலைவர்களும் முககவசம் அணிவதில்லை. பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொதுமக்களிலும் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. அங்கு சமூகஇடைவெளி என்பதற்கே பொருளில்லாமல் இருக்கிறது. ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் கூடிய கூட்டம்தான் கொரோனா பரவலை அதிகரித்த அனுபவம் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. எனவே தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கூட்டுத்தொற்று ஏற்படாத வகையில், உரிய நடவடிக்கைகளை அரசும் எடுக்கவேண்டும். முககவசம் அணியாதவர்கள் பிரசாரக்கூட்டங்களுக்கு வரக்கூடாது. சமூகஇடைவெளியை பின்பற்றவேண்டும் என்ற உத்தரவுகளை அரசியல் கட்சி தலைவர்களும் பிறப்பிக்கவேண்டும்.

Next Story