யாருக்கு ஓட்டுப்போட போகிறார்கள் இந்த இளைஞர்கள்!


யாருக்கு ஓட்டுப்போட போகிறார்கள் இந்த இளைஞர்கள்!
x
தினத்தந்தி 1 April 2021 9:07 PM GMT (Updated: 2021-04-02T02:37:23+05:30)

அடுத்த 3 நாட்களில் தமிழ்நாடு, 16-வது சட்டமன்றத்துக்கான 234 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தயாராகிவிட்டது.

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955. இதில் இந்த தேர்தலில்தான் முதல்முறையாக ஓட்டு போடப்போகும் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 ஆகும். நாளைய உலகை உருவாக்குவதில் மிகப்பெரும் பங்குவகிக்கப்போகும் இந்த முதல்தலைமுறை வாக்காளர்கள் நிச்சயமாக தங்களுக்கு கிடைத்த உரிமையை தவறவிடமாட்டார்கள். இவர்களை பொறுத்தமட்டில், அரசியலில் எந்தஅளவுக்கு ஆர்வம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புகளெல்லாம் அரசியலைத்தாண்டி வேலைவாய்ப்பு வேண்டும், விலைவாசி குறையவேண்டும், எதிர்காலத்தில் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்பதுதான். இந்த 18 வயது, 19 வயது இளைஞர்களெல்லாம் பெரும்பாலும் மாணவர்களாக இருப்பார்கள் அல்லது வேலைத்தேடி கொண்டிருக்கும் இளைஞர்களாக இருப்பார்கள். படிக்கும் மாணவர்களை பொறுத்தமட்டில் படித்தபிறகு, வேலைவாய்ப்பு எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பிலும், வேலைத்தேடி கொண்டிருக்கும் இளை ஞர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு சரியான வேலை வாய்ப்பு வேண்டும் என்ற ஏக்கத்திலும் இருக்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள், அதிலும் குறிப்பாக விவசாயத் தில் ஈடுபடும் இளைஞர்கள் அதுதொடர்பான உள்கட்ட மைப்பு வசதிகள் வேண்டும், விவசாயத்தில் வேலை வாய்ப்புவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இளைஞர்களின் வாக்குகளை கவரும்வகையில் தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை களில் நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.  ‘100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைநாட்கள் 150 நாட்களாக உயர்த்தப் படும். குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டம்பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சிபெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து நீர்வளங்கள், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கவும், 
கண்காணிக்கவும், அவைதொடர்பாக அரசின் சார்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நியமிக்கப்படுவார்கள். இதுபோல அனைத்து சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துகளை பாதுகாக்கும் பணிகளில் 75 ஆயிரம் சாலைப்பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள். இந்த இரு வேலைவாய்ப்புகளிலும் தலா 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். திருக்கோவில் சொத்துகளை கண்காணிக்க 25 ஆயிரம் இளைஞர்கள், மக்கள்நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவார்கள்’ என்பது போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அரசுப்பணிகளில் இடம்பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியாக வழங்கப்படும். 100 நாட்கள் வேலைவாய்ப்புத்திட்டம் 150 நாட்கள் வேலை வாய்ப்புத்திட்டமாக விரிவாக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாட்டில் தனியார்துறை தொழில்கள் மற்றும் 
தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தகவல்தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். தொழிற்பேட்டை இல்லாத மாவட்டங் களில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை நிறுவப்படும். மத்தியஅரசு பணியாளர் தேர்வுகளில் மையப்படுத்துதல் தேர்வுமுறைக்கு பதிலாக, மாநில ரீதியான தேர்வு முறையை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து, மாநில இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்திட மத்தியஅரசை வலியுறுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.ஆக தி.மு.க., அ.தி.மு.க. இருவருமே இந்த புதிய வாக்காளர்களின் ஆதரவை பெறுவதில் முனைப்புக்காட்டி வருகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இவர்கள் ஓட்டுகளை பெற 
பணமோ, பரிசுப்பொருளோ எந்த வகையிலும் உதவாது என்றவகை யில், இதுபோன்ற அறிவிப்புகளை மனத்தராசில் போட்டு, எந்தபக்கம் தட்டு கீழே வருகிறதோ? அந்த கட்சிக்கே ஆதரவை அளிப்பார்கள் என்ற வகையில், இவர்களின் வாக்கு யாருக்கு? என்பது மிகவும் கவனிக்கப்படத்தக்க ஒன்றாக இருக்கிறது.

Next Story