இந்த கட்டுப்பாடுகளையே எல்லோரும் பின்பற்றலாமே!


இந்த கட்டுப்பாடுகளையே எல்லோரும் பின்பற்றலாமே!
x
தினத்தந்தி 2 April 2021 11:21 PM GMT (Updated: 2021-04-03T07:23:37+05:30)

‘பதுங்கி இருக்கும் கோரப் புலி போல’, கடந்த சில மாதங்களாக நன்றாக குறைந்து கொண்டிருந்த கொரோனா, இப்போது 2-வது அலையை உருவாக்கும் வகையில், பாய்ந்து தாக்கத் தொடங்கி விட்டது.

கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பு உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் எல்லா துறைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது மத்திய அரசாங்கம் கொரோனா பரவலை தடுக்க முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கும், 2-வது கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், 3-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாட்டில் தீவிரமாக போடப்பட்டு வருகிறது. அதே நேரம், ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இப்போது அவர்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளவேண்டும் என்றால், நிச்சயம் இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும். ஆனால் அதுவரையில் கொரோனா பரவல் மேலும் அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் பாதுகாப்பு நடைமுறைகளை எடுத்தாகவேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள இந்து கோவில்களில் எல்லோருக்கும் முன்மாதிரியாக கொரோனாவில் இருந்து பக்தர்களையும், ஊழியர்களையும் பாதுகாக்க சில கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதன்படி அனைத்து இந்து கோவில்களிலும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். உள்ளே வரும்போதும் அனைவரும் முககவசம் அணியவேண்டும். கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்திருக்கவேண்டும். 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அனுமதி இல்லை. 
கோவில்களிலும் அர்ச்சனைகள் நடக்காது. பிரசாதமோ, தீர்த்தமோ வழங்கப்படாது. பெரிய கோவில்களில், “நடமாடும் தடுப்பூசி மையங்கள்” ஏற்படுத்தப்படும். பக்தர்கள் அங்கு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எல்லா கோவில்களிலும் இந்த உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறைவனை தேடி கோவில்களுக்கு வரும் எந்த பக்தர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த நடைமுறைகளை நிச்சயம் பின்பற்றி ஆகவேண்டும். இந்து கோவில்கள் காட்டும் இந்த வழிமுறையை எல்லா இடங்களிலும் பின்பற்றவேண்டும். அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்றும், நாளையும் இருக்கிறது. இவ்வளவு நாளும் இல்லாவிட்டாலும் இந்த 2 நாட்களிலாவது அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தின்போது ஒரு தொண்டர் கூட முககவசம் அணியாமல் வரக்கூடாது என்பதை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சைதாப் பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி உள்பட சில வேட்பாளர்கள் முககவசம் அணிந்தே தேர்தல் பிரசாரம் செய்வது போல எல்லா வேட்பாளர்களும் தாங்களே எடுத்துக்காட்டாக முககவசம் அணிந்து தங்களுடன் வரும் தொண்டர்களும் ஒருவர் பாக்கி இல்லாமல் முககவசம் அணியவேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும். முககவசம் இல்லாதவர்களுக்கு அங்கேயே வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்யவேண்டும். அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தடுப்பூசி போடும் முகாம்களை தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைத்து 45 வயதுக்கு மேற்பட்ட எல்லாருமே அடுத்த சில நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுவிட்டார்கள் என்ற நிலையை ஏற்படுத்தி, அதற்கு அடுத்தகட்டமாக எல்லோருக்கும் தடுப்பூசி போடும் நிலையை உருவாக்கும் ஏற்பாடுகளை மத்திய அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும் என்பதுதான் பொதுவான வேண்டுகோளாக இருக்கிறது. இப்போது வயது வரம்பின்றி எல்லோருக்கும் கொரோனா வரத் தொடங்கி விட்டது. எனவே, வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் தடுப்பூசி போடும் உத்தரவு உடனடியாக பிறப்பிக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story