ஒரு நொடியில் அடுத்த 5 ஆண்டுகள்!


ஒரு நொடியில் அடுத்த 5 ஆண்டுகள்!
x
தினத்தந்தி 5 April 2021 8:59 PM GMT (Updated: 5 April 2021 8:59 PM GMT)

இந்தியா உலகுக்கே எடுத்துக்காட்டும் ஜனநாயக நாடாக விளங்குகிறது.

ஜனநாயகம் வழங்கிய பெரிய அருட்கொடை மக்களுடைய, மக்களுக்கான அரசை, மக்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும் என்பதுதான். மத்தியில் ஆளும் மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, மாநிலங்களை ஆளும் மாநில அரசுகள் என்றா லும் சரி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்து, தங்களை ஆளப்போவது யார்? என்பதை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஜனநாயக திருவிழாதான் தேர்தல்.அந்தவகையில், 16-வது சட்டமன்றத்துக்கான தேர்தல் இன்று நடக்கிறது. தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்பதால், மேற்கு வங்காளத்தைப்போல் 8 கட்டங்களாக அல்லாமல், 
ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பிப்ரவரி 26-ந்தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. தேர்தலில் போட்டியிட கடந்த மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 19-ந்தேதி யுடன் முடிவடைந்தது. 22-ந்தேதி வெளியிடப்பட்ட வேட்பாளர் இறுதிப்பட்டியலில், தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இன்று ஒவ்வொரு தொகுதி வாரியாக தங்கள் வேட்பாளர் யார்? என்று மக்கள் தேர்ந் தெடுக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இந்தத்தேர்தலில், 5 முனைப்போட்டி நடக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, மக்கள் நீதிமய்ய கூட்டணி, அ.ம.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்றும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகிறது. போட்டி என்னவோ 5 முனைப் போட்டி என்றாலும், யார் ஆளப்போகிறார்கள்? என்பது தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி களுக்கு இடையே நடக்கும் போட்டியின் முடிவில்தான் இருக்கிறது.ஆளுமைமிக்க தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. அதேபோல், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினும், முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், இதில் வெற்றி பெறுபவருக்கு அரசியலில் அந்தஸ்து உயரும்.

இந்தத்தேர்தலில், தாங்கள்தான் வெற்றிபெறவேண்டும் என்ற அடிப்படையில், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுமே தங்களுடைய தேர்தல் அறிக்கையில் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவருமே தமிழ்நாட்டை சுற்றி, சுற்றிவந்து, சூறாவளி பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் 12 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றி வந்திருக்கிறேன் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடைசி நாளன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

மக்களை பொறுத்தமட்டில், தேர்தல் அறிக்கைகள், பிரசாரங்கள், எல்லாவற்றையும்விட, தங்களை ஆள வேண்டியது எடப்பாடி பழனிசாமியா?, மு.க.ஸ்டாலினா? என்பதைத்தான் தங்கள் மனத்திரையில் ஓடவிட்டு எடை பார்த்திருப்பார்கள். என்னதான் அவர்கள் முடிவெடுத்தா லும், மக்கள் மனதில் தங்களை யார் ஆளவேண்டும் என்பதை, தாங்கள் போடும் ஓட்டின் மூலம் கண்டிப்பாக நிரூபித்தாகவேண்டும். ஓட்டுப்போடுவது என்பது ஜனநாயக உரிமை மட்டுமல்ல, ஜனநாயக கடமையும் ஆகும். எனவே, தங்களுக்குள்ள கடமையை நிறைவேற்ற தங்கள் உரிமையை பயன்படுத்தும் வகையில், பெருவாரி யான மக்கள் ஓட்டுப்போடுவதை இன்றைய நாளின் முதல் கடமையாக மனதில்கொண்டு வாக்களிக்கவேண்டும்.

ஓட்டுப்பதிவு எந்திரத்தின் முன்னால் நின்று, யாருக்கு ஓட்டு? என்று பொத்தானை அழுத்தும் அந்த ஒரு நொடி, தமிழகத்தை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார்? என்பதை முடிவு செய்வதில், ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்கிறது. ஓட்டுப்போடுவதற்காக இடதுகை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அடையாள மை ஒரு பெருமையின் சின்னம். தேர்தல் பிரசாரம் வன்முறை இல்லாமல் அமைதி யாக நடந்ததுபோல, தமிழ்நாட்டில் தேர்தல் மிக அமைதியாக நடந்தது என்ற பெயரை வாங்க அரசியல் கட்சிகளும், அதன் தொண்டர்களும் ஒத்துழைக்கவேண்டும். வல்லமை கொள்வோம். நல்லவை வெல்வோம்.

Next Story