கட்டுப்பாடு என்ற பெயரில் ஊரடங்கு வந்துவிடக்கூடாது


கட்டுப்பாடு என்ற பெயரில் ஊரடங்கு வந்துவிடக்கூடாது
x
தினத்தந்தி 6 April 2021 8:34 PM GMT (Updated: 2021-04-07T04:07:56+05:30)

“சரித்திரம் திரும்புகிறது” என்று கூறப்படுவது கொரோனா விஷயத்தில் நிரூபணமாகிவிட்டது.

1918-ம் ஆண்டு “ஸ்பானிஷ் புளூ” என்ற ஒரு பெருந்தொற்று மும்பை துறைமுகம் வழியாக வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது. அதேபோலத்தான், இந்தியாவுக்குள்ளும் சீனாவிலிருந்து வந்தவர்களால் கொரோனா நுழைந்தது. “ஸ்பானிஷ் புளூ” 2-வது அலை மிக மோசமாக இருந்தது. அதுபோன்ற, ஒரு நிலைமை இப்போது 2-வது அலையாக உருவெடுத்திருக்கும் கொரோனாவால் வந்துவிடக்கூடாது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு, ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. தமிழ்நாட்டிலும் நன்றாக குறைந்து வந்துகொண்டிருந்த கொரோனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் இதன் பாதிப்பு 3,645 ஆக இருந்தது. தினமும் வேகமாக கூடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், நேற்று தேர்தல் முடிந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 3-ந்தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தேவைக் கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று கூறப் பட்டிருந்தது. சென்னையில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில், மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், “தேர்தல் முடிந்த பிறகு மக்கள் நடமாட்டத்தில் கடுமை யான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள் ளார். “இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்கப்பட்ட பிறகு, இம்மாத இறுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும்” என்றும் அவர் கூறியுள்ளார்.சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், “தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என்ற செய்தியை மக்கள் நம்ப வேண்டாம். ஆனால், நோய் பாதிப்பு அதிகரிக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மராட்டிய மாநிலம் போல நிலைமை கையைவிட்டு போகாமல் இருக்க, மக்களுக்கு எந்தவித பாதிப்புமின்றி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால்தான் பொருளாதாரம் சீர்குலைந்து மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் இருக்கிறது.

மக்களையும், தொழிலையும், வர்த்தகத்தையும் பாதிக்கும் வகையில், கட்டுப்பாடுகள் விதிக்காமல், பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனை நடத்தும்போது, 5 அம்ச திட்டத்தை நேற்று முதல் 16-ந்தேதி வரை செயல்படுத்த உத்தரவிட்டார். கொரோனா பரிசோதனை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தேடிக்கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசி போடுதல் ஆகியவற்றோடு மக்கள் 100 சதவீதம் முககவசம் அணிதல், தனிநபர் சுகாதாரத்தை பேணிக்காத்தல், பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்படுதல் என்பதை வலியுறுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல், “கொரோனா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமுதாய பங்களிப்பையும் பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த 5 அம்ச திட்டங்களை மிக தீவிரமாக தமிழக அரசு நடைமுறைப் படுத்தினாலே போதும். பிரதமர் கூறியபடி, “தமிழ்நாட்டில் முககவசம் அணியாதவர்கள் யாரும் இல்லை. சமூக இடைவெளியை பின்பற்றாத இடங்கள் எதுவும் இல்லை. கொரோனா பரிசோதனை களின் எண்ணிக்கை இருமடங்காகிவிட்டது. தடுப்பூசி போடும் எண்ணிக்கை மும்மடங்காகிவிட்டது” என்ற நிலையை ஏற்படுத்திவிட்டாலே போதும். எந்தக்கட்டுப் பாட்டுக்கும், எந்த ஊரடங்குக்கும் தேவையே இருக்காது.

தேர்தல் முடிந்துவிட்டது. இனி இந்த ஒரு பணியை மட்டும் அரசின் நிர்வாக எந்திரம் முழுவதும் முழு வீச்சில் ஈடுபட்டாலே போதும். மற்ற பணிகளை எல்லாம் மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் அமையப் போகும் புதிய அரசு பார்த்துக்கொள்ளட்டும். அதுவரை கொரோனா பரவல் தடுப்பு என்பதே ஒரே பணியாக அரசுக்கு இருக்கட்டும்.


Next Story