மும்பையில் ஊரடங்கு; பங்கு சந்தையில் வீழ்ச்சி


மும்பையில் ஊரடங்கு; பங்கு சந்தையில் வீழ்ச்சி
x
தினத்தந்தி 7 April 2021 9:15 PM GMT (Updated: 2021-04-08T02:45:07+05:30)

“ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு. மற்றொரு பக்கம் கட்டுப்பாடு என்பதை மிகவும் கவனமாக அரசு கையாள வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதில் முக்கிய காரணியாக விளங்குவது பங்குச்சந்தைதான். பங்குச்சந்தை என்பது நிறுவனங்களின் பங்குகளில் மக்கள் முதலீடு செய்வதற்கு வசதியளிக்கும் ஒரு அமைப்பாகும். இதை மக்களின் சேமிப்பாகத்தான் கருதவேண்டும். மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் மக்கள் பங்குச்சந்தையில் மேற்கொள்ளும் முதலீடுகள் மிகவும் குறைவு. அதிலும் தமிழர்களின் முதலீடு என்பது மிகமிக குறைவாகும்.

பங்குச்சந்தை முதலீடு என்பது எப்போதும் ஆபத்து மிகுந்தது. ஒன்று நிறைய லாபத்தை தரும். அல்லது போட்ட முதலுக்கே மோசம் வந்துவிடும். ஆனாலும், மிகவும் கவனமாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள், ஓரளவு வருமானம் பார்த்துவிடுவார்கள். பலர் பங்குச்சந்தையை நன்றாக புரிந்துவைத்துக்கொண்டு கூடுதல் வருமானம் பார்ப்பார்கள்.

இந்தியாவில், பங்குச்சந்தையின் குறியீடு சென்செக்ஸ் அல்லது நிப்டி என்பதன் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. இந்தியாவிலுள்ள 30 பெரிய நிறுவனங்களின் அன்றாட பங்குகள் விலையை வைத்துத்தான் சென்செக்ஸ் மதிப்பிடப்படுகிறது. நிப்டி என்பது தேசிய பங்குச்சந்தையின் குறியீடு. இதில் இந்தியாவிலுள்ள 23 துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட 50 நிறுவனங்களின் பங்கு மதிப்பை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது.

கொரோனா நேரத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மிகவும் அதலபாதாளத்திற்கு, அதாவது 26 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றிருந்த சென்செக்ஸ் குறியீடு, கடந்த பிப்ரவரி மாதம் 52 ஆயிரத்தை தாண்டி நிலைகொண்டிருந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. நாட்டில் பொருளாதாரம் மீண்டெழுகிறது. சென்செக்ஸ், நிப்டி குறியீடு உயர்ந்துவிட்டது. சரக்கு சேவை வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடியானது. மத்திய அரசாங்கத்தின் மூலதன செலவுகள் 104.4 சதவீதமாக உயர்ந்தது. வேளாண் துறையில் நல்ல விளைச்சல். கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலைதிட்டம் தந்த நல்ல வேலைவாய்ப்பு என்றெல்லாம் பல புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அபரிமிதமாக உயர்ந்து கொண்டிருந்த நிலையில், அம்மாநில அரசாங்கம் வேறு வழியில்லாமல் தினமும் இரவு நேரத்திலும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பஞ்சாப், டெல்லியில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இரவில் ஊரடங்கு என்றால், மக்கள் வெளியேசெல்ல முடியாது. அந்தவகையில், தொழிற்சாலைகள் இயங்க முடியாது. ஓட்டல்கள், கடைகள் ஆகியவற்றுக்கு மக்கள் செல்லமுடியாத நிலையில், வர்த்தகம் படுவீழ்ச்சி அடையும். அதன் எதிரொலியாக அரசுக்கு வருவாயும் பெருமளவில் குறைந்துவிடும்.

மும்பைதான் இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்றவகையில், அங்கு ஏற்படும் பாதிப்பு நாட்டுக்கே பெரும் பாதிப்பை தரத்தொடங்கிவிடும். இந்த ஊரடங்கு உத்தரவு, வங்கிகள், மோட்டார் வாகன உற்பத்தி, சுற்றுலா, ஓட்டல் தொழில், பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை வீழ்ச்சி, உள்கட்டமைப்பு என்று எல்லாவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால், கடந்த திங்கட்கிழமை ஒரேநாளில் சென்செக்ஸ் 870 புள்ளிகள் குறைந்து, 49,159 புள்ளிகளாக நிலைகொண்டிருந்தது. நிப்டி 229 புள்ளிகள் குறைந்து, 14,637 புள்ளிகளாக மையம் கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பு மேலும் அதிகமானால், கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில், நிச்சயமாக உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றில் பெரும்பாதிப்பு ஏற்படும். அதற்கு எச்சரிக்கை மணிதான் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி.

இதுகுறித்து, பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன், “ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு. மற்றொரு பக்கம் கட்டுப்பாடு என்பதை மிகவும் கவனமாக அரசு கையாள வேண்டும். கடுமையான கட்டுப்பாடு என்பது பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடுவதோடு, மக்களின் வாழ்வையும் பெரிதும் பாதித்துவிடும். எனவே, இரண்டையும் சமன் செய்து அரசு மிகவும் எச்சரிக்கையோடு, கவனத்தோடு தன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்கிறார்.

Next Story