விவசாயிகளை எல்லோரும் மறந்துவிட்டோமே!


விவசாயிகளை எல்லோரும் மறந்துவிட்டோமே!
x
தினத்தந்தி 8 April 2021 6:31 PM GMT (Updated: 2021-04-09T00:01:10+05:30)

விவசாயிகளை எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவது சரியல்ல. இவ்வளவுநாள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சற்றும் உற்சாகம் குறையாமல், குடும்பங்களாக இணைந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

நிலையில்லாத வருமானம், உழைப்புக்கேற்ற வருமானம் இல்லாத நிலையில், அல்லல்படுபவர்கள் விவசாயிகள். இயற்கை இடர்பாடுகளை மீறி, நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும் நேரத்தில், விலையில்லாமலும், விலை நன்றாக இருக்கும் நேரத்தில் விளைச்சல் இல்லாமலும் அவதிப்படுபவர்கள் விவசாயிகள். அதனால்தான் மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி, “நமது பொருளாதாரத்தில் விவசாயி என்ற ஒரு மனிதர்தான் எல்லா பொருட்களையும் சில்லரை விலையில் வாங்கிக்கொண்டு, மொத்த விலைக்கு விற்றுக்கொண்டு, அதேநேரத்தில் இந்த இரண்டுக்கும் ஆகும் போக்குவரத்து செலவையும் அவர்களே செலுத்தும் ஒரு துர்ப்பாக்கியமான நிலையில் உள்ளவர்கள்” என்று கூறினார்.

கடினமான உழைப்பில் கிடைத்த விளைச்சலை எல்லாம் அறுவடை செய்தவுடனேயே, கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, அதன்பிறகு ஆண்டு முழுவதும் சில்லரை விலையிலேயே தனக்கான உணவுப்பொருட்களை வாங்க வேண்டிய கஷ்டமான நிலையில் இருப்பவர்கள்தான் விவசாயிகள் என்று குறிப்பிடுவதற்கே அவர் அவ்வாறு சொன்னார். பிரதமர் நரேந்திரமோடி, “2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்” என்றார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, பல ஆண்டுகளுக்கு முன்பே, “விவசாயிகளின் உற்பத்தி செலவில் 1½ மடங்கு லாபம் கிடைக்கவேண்டும்” என்றது.

இந்தநிலையில், இதுவரை வாயில்லா பூச்சிகளாக இருந்த விவசாயிகள், இப்போது எதிர்ப்பு குரலை பதிவுசெய்ய தொடங்கிவிட்டனர். பஞ்சாப், அரியானா விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல், டெல்லி எல்லையில் உட்கார்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர்கள் என்று ஒட்டுமொத்த குடும்பமே சாலையில் அமர்ந்து கடும் குளிரையும், கொட்டும் மழையையும், இப்போது சுட்டெரிக்கும் வெயிலையும், ஏன் கொரோனா பரவிவிடுமே என்ற அச்சத்தையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். “மத்திய அரசாங்கம் பிறப்பித்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும். தங்கள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதை சட்டப்பூர்வமாக்க உறுதி செய்யவேண்டும்” என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

மத்திய அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியது. சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு, எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், மத்திய அரசாங்கமும் கண்டுகொள்ளாத நிலையில் போராட்டம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. 135 நாட்கள் ஆகிவிட்டன, விவசாயிகள் போராட்டத்திற்கு இன்னமும் விடிவு கிடைக்கவில்லை. எனவே, நாளை காலை 11 மணி முதல் நாளை மறுநாள் காலை 11 மணி வரை 24 மணி நேரம் டெல்லி செல்லும் சாலையை மறிக்க விவசாயிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். “ஜனவரி மாதம் பேச்சு வார்த்தையை முடித்த மத்திய அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதை தட்டி எழுப்பும் போராட்டம்தான் இது. இதன்பிறகு, மே மாத தொடக்கத்தில், நாடாளுமன்றத்தை நோக்கி எந்தவித குழப்பமோ, வன்முறையோ இல்லாமல் அமைதியாக நடந்துசென்று ஒரு போராட்டத்தை நடத்தப்போகிறோம்” என்று விவசாய சங்கத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நாட்டின் உயிர்நாடி விவசாயிகள். நமது பொருளாதாரத்தில் 50 சதவீத பங்களிப்பு விவசாயத்தில் இருந்துதான் வருகிறது. எனவே, விவசாயிகளை எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவது சரியல்ல. இவ்வளவுநாள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சற்றும் உற்சாகம் குறையாமல், குடும்பங்களாக இணைந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் நியாயம் இருக்கும். எனவே, வேளாண் சட்டங்களை 1½ ஆண்டுகள் நிறுத்திவைக்கிறோம் என்று கூறும் மத்திய அரசாங்கம், நிரந்தரமாக அதை கைவிடமுடியுமா?, குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க சட்டப்பூர்வ உத்தரவாதம் கொடுக்க முடியுமா? என்பதை பரிசீலிக்கவேண்டும்.

போதும் இவ்வளவு நாள் நடந்த விவசாயிகளின் போராட்டம். இனி அவர்களை தங்களது நிலங்களுக்கு சென்று சாகுபடி வேலையை கவனிக்கவிடுவோம் என்பது தான் நாட்டிலுள்ள மற்ற விவசாயிகளின் எண்ணமுமாகவும், அனைவரின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

Next Story