இனி மக்கள் கையில்தான் இருக்கிறது!


இனி மக்கள் கையில்தான் இருக்கிறது!
x
தினத்தந்தி 9 April 2021 8:19 PM GMT (Updated: 2021-04-10T01:49:19+05:30)

பரவல் அதிகமாக இருக்கக்கூடாது என்றால், ஊரடங்கு வந்துவிடக்கூடாது என்றால் அது பொதுமக்கள் கையில் தான் இருக்கிறது.

கொடிய கொரோனா தமிழ்நாட்டில் கால்பதித்து ஓராண்டுக்கு மேல் உருண்டோடிவிட்டது. ஜூலை மாதம் முதல் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 27-ந்தேதி அதிகபட்சமாக 6 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் 12-ந்தேதி முதல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழே குறையத்தொடங்கி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி மிக குறைந்தபட்சமாக 438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகிவிட்டது.

5 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குதிரை பாய்ச்சலில் உயர்ந்து, நேற்று மட்டும் 5,441 ஆகிவிட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் 15-வது கட்ட ஊரடங்கில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வரஉள்ளது. இதன்படி, திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. முன்பு, கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்-கனி கடைகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. இதுபோல மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்-கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நல்லவேளையாக நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பஸ்களில் உட்கார்ந்து பயணம் செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றபடி காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் நகை-ஜவுளி வியாபாரம் செய்யும் பெரிய கடைகள், உணவகங்கள், டீ கடைகள் ஒரேநேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 பேர்களுக்கு மேற்படாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேர்களுக்கு மேற்படாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை தான் அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படும். இந்த உத்தரவு நிச்சயமாக ஒரு கசப்பான மருந்து தான். ஆனால் நோய் குணமாக எப்படி கசப்பான மருந்தை கண்டிப்பாக உட்கொண்டுதான் ஆகவேண்டுமோ, அதுபோல கொரோனா பரவலை தடுக்க மக்கள் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இந்த உத்தரவில், தமிழக அரசு தமிழ்நாட்டில் சில இடங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும், பொதுஇடங்களில் மக்கள் முககவசம் அணிவதை தவிர்ப்பதாலும், பணி இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதாலும் தான் சமீப காலங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது. இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. எனவே பரவல் அதிகமாக இருக்கக்கூடாது என்றால், ஊரடங்கு வந்துவிடக்கூடாது என்றால் அது பொதுமக்கள் கையில் தான் இருக்கிறது. வெளியே செல்லும்போதும், பொதுஇடங்களிலும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவவேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். அவசிய தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும் என்பது போன்ற விதிகளை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டால் தான் கொரோனா பரவலை தடுக்கமுடியும். அரசும் கொரோனா பரிசோதனையையும், தடுப்பூசி போடுவதையும் இன்னும் விரைவுபடுத்தவேண்டும். அதேநேரத்தில் பரவலை தடுப்பது, இந்த உத்தரவுகளை முழுமையாக பின்பற்றி, மக்கள் ஒத்துழைப்பு தருவதில்தான் இருக்கிறது.

Next Story