கிராமப்புற மக்களின் ஆர்வம் நகர்ப்புறங்களில் இல்லையா?


கிராமப்புற மக்களின் ஆர்வம் நகர்ப்புறங்களில் இல்லையா?
x
தினத்தந்தி 11 April 2021 8:57 PM GMT (Updated: 2021-04-12T02:27:10+05:30)

வாக்களிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு, மக்களுக்கு இருக்க வேண்டும்.

16-வது சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்தது. தமிழகம் எப்போதுமே அமைதியை விரும்பும் மாநிலம் என்பதால், எந்தவித வன்முறையும் இல்லாமல், தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்தது. “அரசியலிலே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதை வைத்துக் கொண்டு மோதலில் ஈடுபடக்கூடாது” என்ற லட்சியத்தைக் கொண்டவர்கள் தமிழக மக்கள். ஆனால், அமைதியாக தேர்தல் நடந்தது என்றுதான் பெருமைப்பட்டுக்கொள்ள முடிகிறதே தவிர, தமிழக மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியவில்லை.

கூப்பிடும் தூரத்தில் இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 81.7 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. அந்த மாநில மக்களை கேட்டால், 2016-ம் ஆண்டு தேர்தலைவிட, 3.1 சதவீதம் குறைவாகத்தானே வாக்குப் பதிவு நடந்திருக்கிறது என்று குறைபட்டுக்கொள்கிறார்கள். ஆனால், அங்கு வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு என்பதை மறுக்கமுடியாது. தமிழ்நாட்டில் 72.81 சதவீதம்தான் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

குறைந்த வாக்குப்பதிவு என்பது தமிழ்நாட்டில் புதிதல்ல. 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 61.58 சதவீதமும், 2001-ம் ஆண்டு தேர்தலில் 59.07 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. ஆனால், 2011-ம் ஆண்டு 78.01 சதவீதமும், 2016-ம் ஆண்டு 74.26 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. ஆனால், இந்தமுறை வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு, கொரோனா பயமா?, மக்களுக்கு தேர்தலில் ஆர்வம் இல்லையா?, “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கது கவலை இல்லை” என்ற உணர்வில் இருந்துவிட்டார்களா? என்று புரியவில்லை. மாவட்டம் என்று பார்த்தால், கரூர் மாவட்டத்தில் 83.96 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் 82.46 சதவீதமும், தர்மபுரி மாவட்டத்தில் 82.53 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.14 சதவீதமும், நாமக்கல் மாவட்டத்தில் 80.04 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொகுதி என்று எடுத்துக்கொண்டால், அதிகமாக அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டியிட்ட பாலக்கோடு தொகுதியில் 87.37 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. அவரைக் கேட்டால், “நான் ஒவ்வொரு 100 வாக்காளர்களிட மும் ஆதரவை திரட்ட 10 அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். தேர்தல் அன்று அவர்களை வாக்களிக்க செய்யும் பணியிலும் அந்த தொண்டர்கள் ஈடுபட்டனர்” என்று கூறுகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 85.64 சதவீதமும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் 85.43 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், அமைச் சர்கள் கே.சி.கருப்பணன் (பவானி), எம்.ஆர்.விஜய பாஸ்கர் (கரூர்), கே.ஏ.செங்கோட்டையன் (கோபிசெட்டிப் பாளையம்), வி.சரோஜா (ராசிபுரம்), ஆர்.காமராஜ் (நன்னிலம்), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்) ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு மேல் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.

மிகவும் ஆச்சரியப்படத்தக்க வாக்குப்பதிவு கிராமப் புறங்களில்தான் அதிகமாக நடந்துள்ளது. கிராமப்புறங் களிலுள்ள 154 தொகுதிகளில் 76.4 சதவீதமும், நகர்ப்புறங்களிலுள்ள 50 தொகுதிகளில் 63.8 சதவீதமும், பேரூராட்சி பகுதியிலிருக்கும் 30 தொகுதிகளில் 71.6 சதவீதமும் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். தலைநகரமான சென்னையில் 59.15 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே மிகக்குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.92 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. தனித் தொகுதி களில் எப்போதும்போல நல்ல வாக்குப்பதிவு நடந்திருக் கிறது. மாநிலத்தில், ஆண்களைவிட பெண்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 580 பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.

மொத்தத்தில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், படித்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளைவிட, பாமர மக்கள் இருக்கும் பகுதிகளில்தான் வாக்குப்பதிவு அதிகமாக நடந்துள்ளது.

சில நாடுகளில் ஓட்டுப்போடுவது கட்டாயம். ஓட்டுப்போடாமல் இருந்தால் அபராதம் என்று சட்டம் இருக்கிறது. நம் நாட்டில், ஓட்டுப்போடுவது கட்டாயம் என்று சட்டம் இல்லாவிட்டாலும், வாக்களிக்கவேண்டும் என்ற கடமை உணர்வு மக்களுக்கு இருக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Next Story