விவசாயிகளின் வருமானம் பெருக தேனீ வளர்ப்பு!


விவசாயிகளின் வருமானம் பெருக தேனீ வளர்ப்பு!
x
தினத்தந்தி 12 April 2021 9:02 PM GMT (Updated: 2021-04-13T02:32:15+05:30)

ஒவ்வொரு மாத இறுதியிலும், பிரதமர் நரேந்திரமோடி, ‘மன் கி பாத்’ என்று கூறப்படும் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் பொதுமக்களிடையே வானொலி மூலம் உரையாற்றுவது வழக்கம்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி விஜயதசமி அன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி, 75-வது மாதமாக கடந்த மார்ச் 28-ந்தேதி நடந்தது. ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு பற்றியும், தமிழர்கள் பற்றியும் பிரதமர் குறிப்பிடு வது வழக்கம் என்றவகையில், தமிழ்நாட்டில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரிய ஈர்ப்பு உண்டு.

அந்த நிகழ்ச்சியில், சென்னை மற்றும் மாமல்லபுரத்திலுள்ள கலங்கரைவிளக்கங்கள் குறித்து சில சுவையான தகவல்களை தெரிவித்தார். “உலகிலேயே ‘லிப்ட்’ வசதி கொண்ட சில கலங்கரை விளக்கங்களில் சென்னை கலங்கரை விளக்கமும் ஒன்று. மேலும், இந்தியாவின் எல்லைக்குள்ளேயே இருக்கும் கலங்கரை விளக்கம் சென்னையில்தான் உள்ளது. மின்சாரத்திற்காக சூரியமின் தகடுகள் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அருங்காட்சியகத்தில், பழைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள் எல்லாம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுபோல, மாமல்லபுரம் கலங்கரைவிளக்கமும் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது. இந்தியாவில் இதுபோல இருக்கும் 71 கலங்கரைவிளக்கங்களுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதை ஈர்க்கும் வகையில், அதை மேம்படுத்த, அதை சுற்றிலும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்” என்றும் அறிவித்திருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், கோவையை சேர்ந்த மாரிமுத்து யோகநாதன் என்ற கண்டக்டர், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்குவதையும், இதற்காக தனது சம்பளத்தில் பெரும் பகுதியை செலவழிப்பதையும் பாராட்டியிருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு அவர் அளித்த பெருமை என்றாலும், அடுத்தாற்போல், “விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க தேனீ வளர்ப்பில் ஈடுபடவேண்டும்” என்று ஆலோசனை கூறியிருக்கிறார். “விவசாயம் நவீனப்படுத்தப்படவேண்டும் என்பது இன்றைய காலக்கட்டத்தின் தேவை. ஏற்கனவே, நாம் தாமதமாகிவிட்டோம். பாரம்பரிய விவசாயத்தோடு புதிய மாற்றுத்தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொண்டால்தான், விவசாயத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும். வருமானத்தை பெருக்க முடியும். அந்தவகையில், தேனீ புரட்சி அல்லது இனிப்பு புரட்சி என்ற வகையில், விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் உள்நாட்டிலுள்ள தேவையையும் பூர்த்தி செய்யலாம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்.

“தேனீ வளர்ப்பில் தேன் மட்டுமல்லாமல், தேன் கூட்டில் இருந்து கிடைக்கும் மெழுகின் மூலமும் நல்ல வருமானம் பெற முடியும். மருந்து, உணவு, ஜவுளி தொழில், வாசனை பொருட்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதால் மெழுகுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. தற்போது இந்தியாவுக்கு இந்த மெழுகை வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்” என்று கூறி, விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபடவேண்டிய அவசியத்தை விளக்கியிருக்கிறார். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற நோக்கம் நிறைவேறவேண்டும் என்றால், விளை பொருட்களை விற்று மட்டும் விவசாயிகளின் வருமானம் பெருகிவிடாது. தேனீ, ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு என்பதுபோன்ற துணைத் தொழில்களில் ஈடுபட்டால்தான் வருமானத்தை பெருக்கமுடியும். தேனீ வளர்ப்புக்கு முதல்முறையாக அந்தக்கூண்டுக்காகும் செலவுதான் முதலீடு. அதன்பிறகு தொடர்ந்து வருமானம்தான். எனவே, அமையப்போகும் புதிய அரசு பிரதமரின் ஆலோசனைப்படி, விவசாயிகளிடம் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கவேண்டும். அதற்குரிய தேன் பெட்டிகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினால், தேன் உற்பத்தியும் பெருகும், மெழுகு உற்பத்தியும் பெருகும், விவசாயிகளின் வருமானமும் பெருகும்.

நல்ல அறிவிப்பை வெளியிட்ட பிரதமரும், அவரது முக்கிய குறிக்கோளான விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, இப்போது 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் கொடுப்பதுபோல, தேனீ வளர்ப்புக்கும் சிறப்பு மானியமோ அல்லது உதவிகளோ வழங்கி தேனை மத்திய-மாநில அரசுகளே கொள்முதல் செய்வதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.


Next Story