தலையங்கம்

இரவு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் + "||" + Thalaiyangam pages in Night curfew Causing great harm

இரவு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

இரவு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
நாட்டில் கொரோனா காலெடுத்துவைத்து ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், திரும்பவும் இப்போது விஸ்வரூபம் எடுக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.
 தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் நன்றாக குறைந்து கொண்டிருந்த கொரோனா, இப்போது 2-வது அலையாக மிக வேகமான பரவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி 438 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மட்டும் 7 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடந்த 8-ந்தேதி முதல் தமிழக அரசு அடுக்கடுக்காக பல கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. 9-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்த கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் நல்ல பலன் கிடைக்கவில்லை என்றால், இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்ற அபாய சங்கை ஊதிவிட்டது.ஏற்கனவே, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள், வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் அன்றாட வாழ்க்கை பெரிதும் சீர்குலைந்துள்ளது. மாநில வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஜூலை மாதம் 27-ந்தேதி 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழ்நாட்டில் பெரும்பாலான அலுவலகங்கள் முறையாக இயங்கவில்லை. தொழிற்சாலைகளில், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்களில் உற்பத்தி பெரும் வீழ்ச்சி அடைந்தது. கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள், வியாபாரம் இல்லாமல் படுத்துவிட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகள் வேறு வழியில்லாமல் ஆள் குறைப்பு, சம்பள குறைப்பு விதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.

இந்தநிலையில், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு தமிழகத்தின் பொருளாதாரம் எழுந்துவரும் சூழ்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற அறிவிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தொழிற்சாலைகளில் இரவு நேர பணி இல்லையென்றால், உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும். பலர் வேலையிழக்க நேரிடும். தொழில் நிறுவனங்களின் வருமானம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். இதுபோல, கடைகள், ஓட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்கள் எல்லாம் இரவு நேரத்தில் மூடப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாவார்கள். ஏனெனில், பகலில் வேலைக்கு செல்லும் மக்கள் இரவில்தான் கடைகளுக்கு, ஓட்டல்களுக்கு செல்வார்கள். தொலைதூரம் சென்று பகலில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்கு தொழிலாளர்களுக்கும் போக்குவரத்து வசதி இருக்காது. பெரும்பாலான சரக்கு போக்குவரத்துகள் இரவில்தான் இருக்கும் சூழ்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், அதனால் பாதிப்பு ஏற்படும். பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும். எனவே, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு பதிலாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்னும் வேகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் எந்தவிதமான தயவு தாட்சண்யமும் வேண்டாம். முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது இப்போது எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அதிகமாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகள், தடுப்பூசி போடுவதை இன்னும் அதிகரிக்க வேண்டும். ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த 30 பேர்களை 3 நாட்களுக்குள் தேடிக்கண்டுபிடித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். எனவே, அரசின் முயற்சிகள் எல்லாம் கொரோனா பரவலை தடுப்பதில்தான் இருக்க வேண்டுமே தவிர, இரவு நேர ஊரடங்கு என்பதை இப்போதைக்கு நினைக்க வேண்டாம் என்பதே இரவு நேர ஊரடங்கு வந்துவிடுமோ? என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் பரிதாப குரலாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பிரதமர்!
இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக தலையெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல் பரவலின் இறுதியில் நன்றாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
2. கூட்டு முயற்சியில் கொரோனாவை வெல்வோம்!
உலகத்தையே புரட்டிப்போட்டுவிட்ட கொடிய பெருந்தொற்றான கொரோனா, இந்தியாவையும், ஏன் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை.
3. கொரோனா காலத்தில் நிவாரண உதவி!
கொரோனா பரவல் உயிருக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லை, மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் நிலையை உருவாக்கிவிட்டது.
4. இது உயிர் காக்கும் மருந்து இல்லை; ஆனால் குணமாக்கும் மருந்து
சமீபகாலங்களில் யாரும் கேள்விப்படாத வகையில், கொரோனா நோயாளிகளுக்கான “ரெம்டெசிவிர்” ஊசி மருந்துக்கு மக்கள் அல்லல்படும் நிலை இருக்கிறது.
5. கசப்பான மருந்துதான்; ஆனால் தேவையான ஒன்று!
வாழ்வில் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கான நல்ல பாதையை காட்டும் நூல் “பகவத்கீதை”. இதுவொரு ஞானக்கருவூலம். உபதேச நூலாக மட்டுமல்லாது, கட்டளையிடும் நூலாகவும் இருக்கிறது.