வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி மையங்கள்


வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி மையங்கள்
x
தினத்தந்தி 16 April 2021 10:00 PM GMT (Updated: 16 April 2021 7:07 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது.

உலகிலேயே கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது என்றால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது. இதேநிலை மேலும் நீடித்தால் நாட்டுக்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல. இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா கால் தடம் பதித்து ஓராண்டுக்கு பிறகு, கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதிதான் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தற்போது மாதத்துக்கு 6 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகளையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மாதத்துக்கு 1 கோடி தடுப்பூசி மருந்துகளையும் சப்ளை செய்யும் திறன் பெற்றது. இந்த 2 தடுப்பூசி நிறுவனங்களும் சப்ளை செய்யும் தடுப்பூசி மருந்துகள் நிச்சயமாக இந்தியாவுக்கு போதாது. எவ்வளவு வேகமாக அனைவருக்கும் தடுப்பூசி போடுகிறோமோ, அந்த அளவில் கொரோனா பரவலை தடுத்து நிறுத்தமுடியும். கொரோனாவுக்கு விடை கொடுத்துவிடமுடியும்.

இஸ்ரேல் நாடு தன் மொத்த மக்கள்தொகையில் 61 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி மருந்து போட்டு முடித்துவிட்டது. பூடான் நாட்டில் 62 சதவீதம் பேருக்கும், இங்கிலாந்தில் 47 சதவீதம் பேருக்கும், அமெரிக்காவில் 35 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிட்டார்கள். ஆனால் 138 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 12 கோடி பேருக்கு மேல்தான் தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டுள்ளன. ஏறத்தாழ 8 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் 45 லட்சத்துக்கு அதிகமாகத்தான் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மக்கள்தொகையை கணக்கிட்டால், இந்த 2 நிறுவனங்களின் தடுப்பூசி மருந்து சப்ளை போதாது என்ற எண்ணத்தில், இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக ரஷியாவில் இருந்து ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசி மருந்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி ரஷிய நாட்டில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ‘ஸ்புட்னிக்’ தான் முதல் செயற்கைகோள். விண்வெளி வரலாற்றில் மைல்கல் படைத்த ‘ஸ்புட்னிக்’ எப்படி சரித்திரம் படைத்ததோ, அதுபோல ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் ‘ஸ்புட்னிக்’ கொரோனா ஒழிப்பில் முக்கிய பங்காற்றும். இந்த ‘ஸ்புட்னிக்’ மருந்தை வினியோகிக்கும் பொறுப்பு ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 85 கோடி டோஸ் மருந்துகளை தயாரிக்க ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசி தயாரிக்கும் ரஷிய நாட்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள மேலும் சில நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்பு, 5 கோடி டோஸ்கள் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசியை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள ‘ஜான்சன் அன்ட் ஜான்சன்’ நிறுவனம், ‘மாடர்னா’, ‘பைசர்’ ஆகிய தடுப்பூசி மருந்துகளையும் இந்தியாவில் தயாரிக்கவும், இந்தியாவில் வழங்கவும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த தடுப்பூசி மருந்துகளை எல்லாம் தயாரிக்கும் பணி, வழங்கப்படும் பணி விரைவில் தொடங்கப்படுவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கவேண்டும்.

தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் ககன்தீப் காங், “தேர்தலில் வாக்குச்சாவடிகள் அமைப்பது போல ஆங்காங்கு தடுப்பூசி போடும் மையங்கள் அமைத்தால், விரைவில் கொரோனாவுக்கு விடை கொடுத்துவிடலாம்” என்று கூறியிருக்கிறார். எனவே அதற்கேற்ற வகையில் தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து, இந்தியாவில் உற்பத்திக்கும் ஊக்கம் அளித்து, ஏராளமான தடுப்பூசி போடும் மையங்களையும் அமைத்தால்தான் கொரோனாவை ஒழிக்கமுடியும். மக்களும் முககவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதிலும் கொஞ்சம்கூட அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

Next Story