தடுப்பூசிகளுக்கும், உயிர் காக்கும் மருந்துக்கும் தட்டுப்பாடா?


தடுப்பூசிகளுக்கும், உயிர் காக்கும் மருந்துக்கும் தட்டுப்பாடா?
x
தினத்தந்தி 18 April 2021 10:00 PM GMT (Updated: 2021-04-19T00:30:10+05:30)

மருத்துவ உலகில் எல்லோராலும் உற்று நோக்கப்படுவது, ‘லான்செட்’ என்று கூறப்படும் மருத்துவ இதழ்தான்.

1823-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ், தற்போது லண்டன், நியூயார்க், பெய்ஜிங் நகரங்களில் செய்திப்பிரிவுகளை வைத்திருக்கிறது. இதில்வரும் பல்வேறு நோய்களுக்கான ஆய்வு முடிவுகள்தான் மருத்துவ நிபுணர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது.

தற்போது, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை சேர்ந்த 6 நிபுணர்கள் தீவிர ஆய்வை மேற்கொண்டு, “கொரோனா தொற்று காற்றின் மூலமாகத்தான் பரவுகிறது. பெரிய அளவில் தரையில் துப்பும் எச்சில்களால் பரவுவதில்லை” என்று கூறியிருக்கின்றனர். காற்றின் மூலம் பரவும் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான உயிர்க்கவசம் முககவசம்தான் என்பது அசைக்க முடியாத ஒரு ஆதாரமாகிவிட்டது. எனவே, அனைத்து மக்களும் நிலைமை சரியாகும் வரை முககவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்பதை தமிழக அரசு மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்தவேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில்தான் இவ்வாறு கொரோனா தொற்று காற்றில் பரவுவதன் மூலம் கொத்துக் கொத்தாய் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு, மற்றொரு ஆதாரமாக வேறொரு கருத்தும் உலாவருகிறது. சமீபத்தில் தேர்தல் நடந்த தமிழ்நாட்டில், கடந்த 13-ந்தேதி வரையிலான 14 நாட்களில் கொரோனா சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 309 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கேரளாவில் 111 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இப்போது 8 கட்டங்களாக தேர்தல் நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்காளத்தில் 448 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தேர்தல் பிரசார கூட்டங்களில் சமூக இடைவெளி இருக்கவேண்டும், எல்லோரும் முககவசம் அணிந்திருக்கவேண்டும் என்பதிலும், பெருங்கூட்டங்களிலான பிரசாரம் நடப்பதை கட்டுப்படுத்துவதிலும் தேர்தல் கமிஷன் சற்று கண்டிப்புடன் தன் கடமையை ஆற்றியிருக்கலாமோ? என்ற எண்ணம் இப்போது எழுகிறது. இனிமேலும் பரவல் அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்றால், 45 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசியை போட்டு முடித்துவிடவேண்டும் என்ற வேகத்தில், தமிழக பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

கடந்த வாரம் 2 நாட்களில் தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், அதற்கு ஏற்றவகையில் மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசி மருந்து சப்ளை இல்லை என்பதுதான் மனக்குறைவை அளிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி, 4 லட்சம் தடுப் பூசி மருந்துகள்தான் இருந்தது. இன்னும் 2 நாட்களுக்குத் தான் தாக்குப்பிடிக்கும் என்று தமிழக அரசு அபயக்குரல் எழுப்பிய பிறகு ஒரு லட்சம் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பியிருந்தது. மேலும், 2 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புவதாக கூறியிருக்கிறது. கடும் தாகத்தில் இருக்கும் ஒருவருக்கு, ஒரேயொரு சொட்டு தண்ணீரை நாக்கில் தடவி தாகத்தை தணித்துக்கொள் என்பது எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இந்த மருந்து சப்ளை இருக்கிறது.

எனவே, தமிழக அரசு விடுத்த கோரிக்கையான 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அனுப்பவேண்டும். அதற்கு பிறகும் தொடர்ந்து தேவைக்கு ஏற்ப அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும். இது கொரோனா வராமல் தடுக்கும் கேடயம். ஆனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கும் கடுமையான தட்டுப்பாடு இருப்பது நிச்சயம் ஏற்புடையதல்ல.

‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை தயாரிக்கும் சில நிறுவனங்கள் இப்போது அதன் விலையை பெருமளவில் குறைத்திருக்கிறது. ஆனால், இந்தியாவிலுள்ள இந்த 7 நிறுவனங்கள் மாதத்திற்கு 38 லட்சத்து 80 ஆயிரம் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளைத்தான் உற்பத்தி செய்யும் திறன்படைத்ததாக இருக்கிறது. உடனடியாக இந்த 7 நிறுவனங்களுக்கும் உற்பத்தியை பெருக்க மத்திய அரசாங்கம் நிதியுதவி அளிக்கவேண்டும். தேவைப்பட்டால், வெளிநாடுகளில் இருந்தும் தருவிக்கவேண்டும். இதுபோல ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற வகையில், தமிழக அரசு மிகவும் விழிப்போடு இருக்கவேண்டும்.

Next Story