வலிக்காத ஊரடங்கு!


வலிக்காத ஊரடங்கு!
x
தினத்தந்தி 19 April 2021 7:30 PM GMT (Updated: 2021-04-20T01:00:16+05:30)

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஷ கிருமியாக நுழைந்த கொரோனா, மிக வேகமாக பரவியது.

இடையில் பிப்ரவரி மாதம் 20-ந்தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 438 ஆக குறைந்தவுடன், ஆகா.. நன்றாக குறைந்துவிட்டது, இனி அப்படியே குறைந்து.. குறைந்து.. ஓடிவிடும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழுந்தது.

கொரோனா பரவல் பற்றிய பயம் குறைந்ததால், மக்கள் கூட்டம் கூட்டமாக தேர்தல் பிரசாரங்கள், மதத்திருவிழாக்களில் கூடுவதை அரசும் கண்டுகொள்ளவில்லை. மக்களும் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். கொரோனா மீண்டும் சுனாமிபோல சுழன்றடித்து, முதலில் இருந்த பரவலைவிட மிக அதிகமாக இப்போது பரவிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மக்கள் கூடுவதைத்தடுக்க வேறு வழியில்லாமல், சில மாநில அரசுகள் முழு ஊரடங்கையும், பல மாநில அரசுகள் இரவுநேர ஊரடங்கையும் பிறப்பித்துள்ளன. ஊரடங்கால் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால், இப்போதுள்ள கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த மக்கள் கூடுவதை தவிர்க்க இது ஒன்றுதான் வழி என்றவகையில், தமிழக அரசும் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கினால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும்? என்று தெரியவில்லை என்றாலும், இது மக்களுக்கு வலிக்காது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும், அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது.

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுபோல, தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

இந்த ஊரடங்கு ஒரு பக்கம் இருந்தாலும், பகல் நேரங்களிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பது சாலச்சிறந்தது. இந்த பரவல் சங்கிலி துண்டிக்கப்படவேண்டும் என்றால், எல்லோருக்கும் மிக வேகமாக தடுப்பூசி போடும் பணிகளை நிறைவேற்ற வேண்டும். தற்போது,45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக்குழு ஆய்வு கூட்டம் எடுத்த முடிவுப்படி, “மே 1-ந்தேதி முதல் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” என்று மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. மிகவும் வரவேற்புக்குரியது.

ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடந்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 47 லட்சத்து 31 ஆயிரத்து 143 பேருக்குத்தான் போட்டு முடிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களே 2 கோடியே 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் உள்ளனர். அந்தவகையில், தினமும் 5 லட்சம் பேருக்காவது தடுப்பூசி போடுவதற்கான இலக்கை நிர்ணயிக்கவேண்டும். ஒருமுறை தடுப்பூசி போட்டால், அதனால் 8 முதல் 12 மாத காலம் பாதுகாப்பு இருக்கும். அதன்பிறகு, “பூஸ்டர் ஷாட்” என்று கூறப்படும் மற்றொரு தடுப்பூசி மருந்தை போடவேண்டும் என்கிறார்கள். எனவே, தடுப்பூசி போடுவது என்பது ஒரு சக்கரம்போல இன்னும் சில ஆண்டுகளுக்கு திரும்பத்திரும்ப போடவேண்டிய சூழ்நிலை இருப்பதால், இந்தியாவில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை மத்திய அரசு பல மடங்கு அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்தும் அதிகமாக இறக்குமதி செய்யவேண்டும்.

Next Story