ஒரே தடுப்பூசி; 3 விலையா?


ஒரே தடுப்பூசி; 3 விலையா?
x
தினத்தந்தி 23 April 2021 8:54 PM GMT (Updated: 23 April 2021 8:54 PM GMT)

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவல் மிக வேகமாக அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவல் மிக வேகமாக அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இந்தநிலையில், எல்லோருமே தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தடுப்பூசி போட்டுக்கொண்டு முககவசம் அணிந்தால்தான், கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும். தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250-க்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைக்கு மத்திய அரசாங்கம், தான் வாங்கும் விலையான ரூ.150-க்கு வழங்கிவருகிறது. புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்தையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருந்தையும் சப்ளை செய்துவருகிறது. இதில், 90 சதவீதம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துதான் பூர்த்தி செய்கிறது.

இந்தநிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் தனது 50 சதவீத தயாரிப்பில், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும் மே 1-ந்தேதி முதல் விற்பனை செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசாங்கத்துக்கு ஏற்கனவே 10 கோடி டோஸ்கள் தலா ரூ.150 விலையில் விற்கப்பட்டதாகவும், இப்போது மேலும் 11 கோடி டோஸ்களும் அதே விலையான ரூ.150-க்கு விற்கப்படுவதாகவும், இந்த சப்ளை முடிந்தவுடன் மத்திய அரசாங்கத்துக்கும் ரூ.400-க்குத்தான் விற்கப்போவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக அரசை பொறுத்தமட்டில், இவ்வளவு காலமும் மத்திய அரசாங்கம் இலவசமாக தந்த தடுப்பூசி மருந்துகளைத்தான், அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுவந்தது. அதிலேயே, மக்களுக்கு ஆர்வமில்லாத நிலை இருக்கும்போது, இனிமேல் ஒரு டோஸ் ரூ.400 கொடுத்து மாநில அரசு வாங்கவேண்டிய சூழ்நிலையில், மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியநிலையில், தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் ரூ.150-க்கு வாங்கிய மருந்துக்கு ரூ.250 கட்டணம் வசூலித்த நிலையில், இனி ரூ.600-க்கு வாங்கும் தடுப்பூசி மருந்துக்கு ஏறத்தாழ ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி மருந்தை தருவித்தால், அதன் விலை அனேகமாக ரூ.675-ல் இருந்து ரூ.750 ஆகத்தான் இருக்கும். இறக்குமதி வரியை ரத்து செய்தால் அதே விலையில் மருத்துவமனைகளுக்கு கிடைக்கும். “கோவிஷீல்டு” தடுப்பூசியை 2 முறை போடவேண்டியது இருக்கும். ஆனால், ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிக்கும் தடுப்பூசி மருந்தை ஒருமுறை போட்டால்போதும்.

இதுபோல, “மாடர்னா” தடுப்பூசி மருந்து ரூ.1,125 முதல் ரூ.1,350 வரையிலும், “பைசர்” தடுப்பூசி மருந்து ரூ.1,500 அளவிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தடுப்பூசி மருந்துகள் இரண்டையும் 2 முறை போடவேண்டியது இருக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்றால், தமிழ்நாட்டில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு 2 டோஸ் போடவேண்டும் என்றால், 12 கோடியே 53 லட்சத்து 48 ஆயிரத்து 892 டோஸ்கள் தேவைப்படும். அதுபோல, இந்தியா முழுவதும் போடுவதற்கு 182 கோடி டோஸ்களுக்கு மேல் தேவைப்படும். அந்த அளவுக்கு தற்போது இந்தியாவில் தடுப்பூசி மருந்து உற்பத்தி இல்லை.

அந்தவகையில், இந்த தடுப்பூசி மருந்துகளை பெருமளவில் இறக்குமதி செய்து போடமுடியுமா? என்பதை தமிழக அரசும், தனியார் மருத்துவமனைகளும் பரிசீலிக்கவேண்டும். மத்திய அரசாங்கமும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் பேசி, ஒரே தடுப்பூசி மருந்துக்கு 3 விலை என்ற நிலையை மாற்றி, மத்திய-மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்ந்து குறைந்த விலையிலேயே சப்ளை செய்ய வலியுறுத்தவேண்டும். 

Next Story