இனி வீணாகாது தடுப்பூசி மருந்து


இனி வீணாகாது தடுப்பூசி மருந்து
x
தினத்தந்தி 25 April 2021 11:58 PM GMT (Updated: 25 April 2021 11:58 PM GMT)

கொரோனாவின் 2-வது பரவல் மிகவும் அச்சமூட்டும் வகையில் இருக்கிறது. மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கைக்குப்பிறகு பொறுப்பேற்கவிருக்கும் அரசுக்கு இதுதான் மிகப்பெரிய சவாலாக விளங்கப்போகிறது.

கொரோனாவின் 2-வது பரவல் மிகவும் அச்சமூட்டும் வகையில் இருக்கிறது. மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கைக்குப்பிறகு பொறுப்பேற்கவிருக்கும் அரசுக்கு இதுதான் மிகப்பெரிய சவாலாக விளங்கப்போகிறது. ஒவ்வொருநாளும் கொத்துக்கொத்தாக பரவல் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதையும், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதையும் பார்த்து ‘என்று மறையும் இந்த கொரோனாவின் வேகம்’ என்று மக்கள் சோகத்துடன் மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் வந்துவிட்டது.

கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க வேண்டுமென்றால், எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையை நெருங்கும்போதுதான் சாத்தியமாகும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிபோடும் பணிகள் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. அந்த மாதம் 12-ந்தேதிதான் முதற்கட்டமாக 5 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்தன. இதுவரை 65 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று காலை கணக்குப்படி, 8 லட்சத்து 21 ஆயிரத்து 700 டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை பொறுத்தமட்டில், ஒரு ‘கோவிஷீல்டு’ பாட்டிலில் 10 பேருக்கு போடக்கூடிய ‘டோஸ்’களும், ‘கோவேக்சின்’ பாட்டிலில் 20 பேருக்கு போடக்கூடிய ‘டோஸ்’களும் இருக்கும். ஆனால், பாட்டிலை திறந்து 4 மணி நேரத்துக்குள் இதை போட்டுமுடிக்கவில்லை என்றால், அதற்குப்பிறகு அது பயன்படுத்த முடியாமல் வீணாகிவிடும். அந்தவகையில், ஆரம்பத்தில் தமிழகத்தில் ஏராளமான தடுப்பூசிகள் வீணாகின.

தூத்துக்குடி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், ஜனவரி 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை 20 சதவீத மருந்துகள் வீணாகிய சூழ்நிலை ஏற்பட்டது. சில மாநிலங்களில் ஒரு ‘டோஸ்’ கூட தடுப்பூசிகள் வீணாகாத நிலையுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நிறையபேர் தடுப்பூசிபோட முன்வராமல் தயக்கம்காட்டியதால்தான் இந்தநிலை ஏற்பட்டது. 4 மணி நேரத்துக்குள் 10 பேரோ, 20 பேரோ போடக்கூட வராதநிலையில்தான் தடுப்பூசிகள் வீணாகியநிலை இருந்தது. தமிழ்நாட்டில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்நிலையில், 5 சதவீதத்துக்கும் கீழ் இது குறைந்துகொண்டிருக்கிறது என்று அதிகாரிகள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள். மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றநிலை இருக்கிறது.

மத்தியஅரசை பொறுத்தமட்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தடுப்பூசி போடும் செயல்திறன், எவ்வளவு வீணாகாமல் இருக்கிறது? என்று பார்த்துதான் ஒதுக்கீடு செய்ய இருக்கிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும்நிலையில் நிச்சயமாக தமிழகத்தில் தடுப்பூசி மருந்து வீணாகாது. மேலும், 18 வயது முதல் 45 வயது வரை தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள், வருகிற 28-ந்தேதி முதல் ‘கோவின்’ செயலி மூலம் கண்டிப்பாக பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழ்நிலையில், இப்போதுள்ள இளைஞர்கள், தடுப்பூசி போடுவதற்காக காத்திருக்கும் சூழலை தவிர்க்க நிச்சயமாக ‘கோவின்’ செயலியை பயன்படுத்துவார்கள். இதனால் இமாசலபிரதேசம், கேரளா, மிசோரம், கோவா போன்ற மாநிலங்களைப்போல, ஒரு தடுப்பூசி மருந்தும் வீணாகவில்லை என்றபெயரை நிச்சயம் தமிழகம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இனி மாநிலஅரசு ஒரு தடுப்பூசி ‘டோஸ்’ ரூ.400-க்கு வாங்கவேண்டிய நிலையில், அதற்குரிய திட்டமிடுதலை கையாண்டு, தடுப்பூசி மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். 18 வயது முதல் 45 வயதுள்ளோருக்கு தடுப்பூசி போடுவதின் மூலம் புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அரசுக்கு ரூ.1,536 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, புதிய அரசு, தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதிலும், வீணாகாமல் போட்டுக்கொள்வதற்கான திட்டமிடுதலையும்தான் முதல் பணியாக செய்யவேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது.

Next Story