18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி!


18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி!
x
தினத்தந்தி 28 April 2021 4:50 AM GMT (Updated: 2021-04-28T10:20:10+05:30)

எல்லோரும் கொரோனாவின் 2-வது அலை தொடங்கிவிட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், இப்போது பரவிக் கொண்டிருக்கும் வேகத்தை பார்த்தால், இது அலை அல்ல, சுனாமி என்றுதான் கூறத் தோன்றுகிறது.

எல்லோரும் கொரோனாவின் 2-வது அலை தொடங்கிவிட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், இப்போது பரவிக் கொண்டிருக்கும் வேகத்தை பார்த்தால், இது அலை அல்ல, சுனாமி என்றுதான் கூறத் தோன்றுகிறது. இந்தக் கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்கவேண்டும் என்றால், எல்லோருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே முடியும். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், நேற்று முன்தின கணக்குப்படி 54 லட்சத்து 21 ஆயிரத்து 645 பேர்தான் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் நேற்றைய கணக்குப்படி 14 கோடியே 52 லட்சத்து 71 ஆயிரத்து 186 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. பொதுவாக, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மிகப்பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத்தான் போட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், வருகிற மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்ற நல்ல செய்தியை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், “கோவிஷீல்டு” தடுப்பூசி மருந்தை சப்ளை செய்யும் புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமும், “கோவேக்சின்” தடுப்பூசி மருந்தை சப்ளை செய்யும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இனி தங்கள் தயாரிப்பில் 50 சதவீதத்தை மத்திய அரசாங்கத்துக்கும் மீதி 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விலைக்கு வழங்கும் என்றும் மத்திய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, “கோவிஷீல்டு” மருந்து மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும், அதை தயாரிக்கும் நிறுவனம் விலை நிர்ணயித்துள்ளது. இதுபோல, “கோவேக்சின்” நிறுவனம் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்றும் விலையை குறிப்பிட்டுள்ளது. பல மாநில அரசுகள், “இந்த ஏற்பாடு வேண்டாம். இப்போதுபோல, மத்திய அரசாங்கம் தொடர்ந்து இலவசமாகவே தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யவேண்டும்” என்று கூறியுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வாங்கும் விலைக்கும், மாநில அரசுக்கான விலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இப்படி வித்தியாசமான விலை நியாயமான ஒன்றல்ல. மாநில அரசு மேல் கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது நியாயமான கோரிக்கை.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேவை என்றால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்றும், ஏற்கனவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசாங்கத்துக்கு ரூ.10,234 கோடிதான் செலவாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மருந்தை விலை கொடுத்து வாங்கி மாநில அரசுகள் போடவேண்டும் என்றால் ரூ.48,048 கோடி செலவாகும். இந்தச் செலவுகளை அப்படியே மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், ரூ.58,282 கோடி செலவாகும். தடுப்பூசி நிறுவனங்களை விலையை குறைக்கச்சொல்லி மத்திய அரசாங்கம் வலியுறுத்தி, நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இப்போதுபோல, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்கள் கடமையும் கூட.

விலை கொடுத்து தடுப்பூசி வாங்கி போட்டுக்கொள்ளும் நிலையில் ஏழை-எளிய, கிராமப்புறங்களிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இல்லை என்ற சூழ்நிலையில், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

எனவே, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய தொகையோடு, இன்னும் சற்று கூடுதல் தொகையை ஒதுக்கி மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை இல்லாமல் மத்திய அரசாங்கமே அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கவேண்டும் என்பதுதான் இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

Next Story