முககவசம் போல சமூக இடைவெளி மிக முக்கியம்!


முககவசம் போல சமூக இடைவெளி மிக முக்கியம்!
x
தினத்தந்தி 28 April 2021 8:27 PM GMT (Updated: 2021-04-29T01:57:47+05:30)

“முககவசத்தை சரியாக அணியாததும், சமூக இடைவெளியை பின்பற்றாததும்தான் கொரோனா பரவல் அதிகரிப்பில் 90 சதவீத பங்கு வகிக்கிறது” என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

“சரித்திரம் திரும்புகிறது” என்று பலவற்றை குறிப்பிடுவார்கள். கொரோனாவும் அந்தப் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது. 1918-ம் ஆண்டு, முதல் உலகப்போர் மிக உச்சத்தில் இருந்த நேரத்தில், “ஸ்பானிஷ் புளூ” மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு மேல் அதன் கோர தாண்டவம் நீடித்தது. உலகம் முழுவதிலும் 50 கோடி பேர்களுக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்திய “ஸ்பானிஷ் புளூ” 5 கோடிக்கும் அதிகமானவர்களின் உயிரை பறித்தது. இந்தியாவில்தான் அதிகம் பேர் உயிரிழந்தார்கள்.

அதேபோன்ற ஒரு நிலைமை 103 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ளது. “ஸ்பானிஷ் புளூ”வும் முதல் அலையைவிட 2-வது அலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல்தான் கொரோனா பாதிப்பும் தமிழ்நாட்டில், முதல் அலையின் இறுதியில் நன்றாக குறைந்து வந்தது, தேர்தலையொட்டி 2-வது அலையாக விஸ்வரூபம் எடுத்து, பாதிப்பும் அதிகம், பரவலும் அதிகம், உயிரிழப்பும் அதிகம் என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில், தேர்தல் நேரத்தில் நடந்த பிரசாரக் கூட்டங்களில், பேரணிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இப்போது நிலவும் சூழ்நிலைக்கு தேர்தல் கமிஷன்தான் முழு காரணம். இந்த நீதிமன்றம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.. பின்பற்றுங்கள்.. என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தபோதும், அரசியல் கட்சி பேரணிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பிரசார கூட்டங்களிலும், பேரணிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றாததால்தான் இப்போதைய பரவல் ஏற்பட்டுள்ளது என்று கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி, கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே பொன் விதிகளாக, “அனைவரும் முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும்” என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். ஆனால், சமூக இடைவெளி மட்டும் முறையாக பின்பற்றப்படுவதில்லை.

“முககவசத்தை சரியாக அணியாததும், சமூக இடைவெளியை பின்பற்றாததும்தான் கொரோனா பரவல் அதிகரிப்பில் 90 சதவீத பங்கு வகிக்கிறது” என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. சமீபத்திய ஆய்வுகள், இவை இரண்டையும் கடைப்பிடிக்காதவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், சமூக இடைவெளி இல்லாத இடங்களில், 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனாவை பரவச்செய்ய முடியும். அவர் சமூக இடைவெளியை பின்பற்றினால், 30 நாட்களில் 2.5 பேருக்குத்தான் கொரோனாவை பரவச்செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருப்பதையும் அரசு மேற்கோள்காட்டியிருக்கிறது.

ஆக, சென்னை ஐகோர்ட்டும் கூறிவிட்டது, மத்திய அரசாங்கமும் கூறிவிட்டது. இப்போதைய சூழ்நிலையில் பலருக்கு கொரோனா நோயின் அறிகுறியே இல்லாமல் இருப்பதால், சமூக இடைவெளி இல்லாத இடங்களில் அவர்கள் மூலம் நிறைய பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, முககவசம் அணியவேண்டும் என்ற விழிப்புணர்வு இப்போது மக்களிடையே அதிகமாக இருப்பதுபோல, சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். முககவசம் அணியாதவர்கள் மீது போலீசாரும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுப்பதுபோல, சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பஸ், ரெயில் நிலையங்கள், திருமணங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி ஊர்வலங்களை தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. அதுபோல, மக்கள் பெரும்பாலும் கூடும் நிகழ்வுகளை மிகுந்த கண்காணிப்புடன் பார்த்து, அனைவரும் முககவசம் அணிந்திருக்கிறார்களா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதில்தான், தற்போதைய கொரோனா பரவலை குறைக்கவும் முடியும். கொரோனாவுக்கு விடை கொடுக்கவும் முடியும்.

Next Story