கிராமப்புற மக்களுக்கு வாழ்வளிக்கும் 100 நாள் வேலை திட்டம்!


கிராமப்புற மக்களுக்கு வாழ்வளிக்கும் 100 நாள் வேலை திட்டம்!
x
தினத்தந்தி 30 April 2021 10:44 PM GMT (Updated: 2021-05-01T04:14:53+05:30)

புதிய அரசாங்கம் நிச்சயமாக இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டமாக உயர்த்திவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கொரோனா பாதிப்பு முடியும் வரை 150 நாட்கள் என்பதுகூட போதாது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, மக்களின் உயிருக்கும், உடல் நலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் சிதைத்துவிட்டது. முதல் அலை பாதிப்பில் இருந்து, கொஞ்சம்.. கொஞ்சமாக.. மெல்ல எழுந்துவந்த நிலையில், மீண்டும் சம்மட்டி அடிபோல 2-வது அலை மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் துன்பத்தை ஏற்படுத்திவிட்டது.

இப்போது தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் தொழில்கள் நசிவடைய தொடங்கி, மக்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வேலைபார்த்த பெரும்பாலானோர் அங்கு பிழைக்க வழியில்லாமல் கிராமப்புறங்களுக்கு சென்றுவிட்டனர். அதற்கு, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நகர்ப்புறங்களில் ஓட்டு சதவீதம் குறைந்ததே சாட்சி.

கிராமங்களில் அவர்களுக்கு வாழ்வு அளிக்கும் வேலைவாய்ப்பு என்றால், அது 100 நாள் வேலை திட்டம்தான். அவர்களின் வாழ்வாதாரமே 100 நாள் வேலை திட்டத்தை அடிப்படையாக வைத்துத்தான் இயங்கி வருகிறது. வாரந்தோறும் இந்த 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழ்நாட்டில் ரூ.165 கோடி முதல் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், கொரோனா என்ற பெயரில் தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் இடமில்லை. சளி, இருமல் இருந்தாலோ, நீரிழிவு நோய் உள்ளவர்களாக இருந்தாலோ, அவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலையில்லை என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. ஏனெனில் 55 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் குடும்பத்தை காப்பாற்றும் பெரிய பொறுப்பில் இருப்பார்கள். அவர்கள் வருமானம்தான் அந்த குடும்பத்தை காப்பாற்றும். எனவே, இந்த வயது வரம்பு நிச்சயமாக நீக்கப்பட வேண்டும். இதுபோல நீரிழிவு நோய் என்பது வேலை பார்ப்பதற்கு நிச்சயமாக தடையாக இருக்க முடியாது. எனவே, அந்த கட்டுப்பாட்டையும் நீக்க வேண்டும். மற்றபடி, “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். வாகனங்களில் நிறைய பேரை ஏற்றிக்கொண்டு வரக்கூடாது. கைகளை கழுவிக்கொள்ள சோப்பு, தண்ணீர் வைக்க வேண்டும்” என்பது போன்ற கட்டுப்பாடுகள் வரவேற்கத்தகுந்தது.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதும் பாராட்டுக்குரியது. ஒரு நாளைக்கு ரூ.256 வருமானம் அளிக்கும் இந்த திட்டப் பணிகளில், முழு சம்பளமும் பல இடங்களில் பயனாளிகளுக்கு கிடைப்பதில்லை என்ற குறைபாடு உள்ளது. அதுவும் போக்கப்பட வேண்டும். “இந்த திட்டத்தின் தற்போதைய வேலை நாள், ஆண்டுக்கு 100 நாள் என்பது 150 நாட்களாக அதிகரிக்கப்படும். மேலும், இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் விரிவுபடுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தப்படும்” என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக விரிவாக்கப்படும். பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” என்று உறுதி கூறப்பட்டுள்ளது.

எனவே, புதிய அரசாங்கம் நிச்சயமாக இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டமாக உயர்த்திவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கொரோனா பாதிப்பு முடியும் வரை 150 நாட்கள் என்பதுகூட போதாது. இன்னும் வேலை நாட்களை உயர்த்த முடியுமா? என்பதை அமையப்போகும் புதிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே 100 நாள் வேலை திட்டத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

Next Story