தலையங்கம்

கசப்பான மருந்துதான்; ஆனால் தேவையான ஒன்று! + "||" + It is a bitter medicine But something necessary

கசப்பான மருந்துதான்; ஆனால் தேவையான ஒன்று!

கசப்பான மருந்துதான்; ஆனால் தேவையான ஒன்று!
வாழ்வில் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கான நல்ல பாதையை காட்டும் நூல் “பகவத்கீதை”. இதுவொரு ஞானக்கருவூலம். உபதேச நூலாக மட்டுமல்லாது, கட்டளையிடும் நூலாகவும் இருக்கிறது.
18 அத்தியாயங் களை கொண்ட “பகவத்கீதை”யில், 3-வது அத்தியாயமான கர்ம யோகத்தில் 2-வது சுலோகத்தில், அர்ஜூனனுக்கு கிருஷ்ண பகவான் உபதேசிக்கும்போது, “மேலானவன் எதைச் சொல்கிறானோ, அதை அதையே மற்ற மனிதர்கள் பின்பற்றுகிறார்கள்” என்று கூறுகிறார். அதேபோல, மேலானவரான மு.க.ஸ்டாலின் கொரோனாவை ஒழிக்க எதைச் சொல்கிறாரோ, அதை அனைவரும் பின்பற்ற வேண்டிய கடமை இப்போது ஏற்பட்டுள்ளது.

இந்தப்போரில், எதிரே நிற்கும் கொரோனாவின் கை, இப்போது ஓங்கியிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 21 ஆயிரத்தை தாண்டி உயர்ந்து கொண்டேபோகிறது. உயிரிழப்புகளும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இப்போது கிராமப்புறங்களிலும் கொரோனா பரவல் அதிகமாகி விட்டது. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இடமில்லாதநிலை, ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு என்ற நிலை உருவாகிவிட்டது. அதிகாரிகள்கூட, “கொரோனா பாதிப்பு லேசாக இருந்தால் மருத்துவமனைக்கு வரவேண்டாம். வீட்டிலேயே உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்” என்கிறார்கள்.

எனவே, கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகிவிட்டது. முதல்-அமைச்சராக 7-ந்தேதி பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின், “என் வேளை இன்னும் வரவில்லை” என்று காத்திருக்காமல், நேற்று முன்தினமே அதிகாரி களை அழைத்து கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்று தீவிரமாக ஆலோசனை நடத்தினார். அதிகாரிகள், “முழு ஊரடங்கை அமல்படுத்துவதைதவிர வேறு வழியில்லை. நீதிமன்றம் கூட அதைத்தான் வலியுறுத்துகிறது” என்று முழு ஊர டங்கை அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளை கூறினர்.

ஆனால், மு.க.ஸ்டாலின் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதற்கு பதிலாக நாம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாம் என்று கூறினார். வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை அதிகாலை 4 மணி முதல் 20-ந் தேதி அதிகாலை 4 மணி வரை 15 நாட்களுக்கு சில கட்டுப்பாடு களை விதிக்க தமிழக அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அதிகபட்சம் 50 சதவீத பணியாளர் களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தடை விதிக்கப்பட்டுள்ள பெரிய கடைகள், வணிக வளாகங்கள் தவிர, தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் உள்பட அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை அனுமதிக்கப் பட்டுள்ளது. விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள் செயல்படாது. அவசிய மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரெயில் நிலையம் மட்டும் செல்வதற்கு வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகன பயன்பாடு அனுமதிக்கப்படும். இதெல்லாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றுக்கு இப்போது கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆகும்.

இந்த கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இது கசப்பான மருந்துதான். ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் மாமருந்து என்ற வகையில், இதை ஏற்றுக்கொள்ள வேண்டியது மக்களின் கடமையாகும். அதிகாரிகள் முழு ஊரடங்கை பரிந்துரைத்த நேரத்திலும், அதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதை புரிந்துகொண்டு, இந்த கட்டுப்பாடுகளுக்கு மட்டும் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தது நிச்சயம் வரவேற்கத்தக்கது.

கொரோனா பரவல் சங்கிலியை துண்டிப்பதற்கு நிச்சயமாக இது தவிர்க்க முடியாதது என்ற உணர்வோடு, மக்களும் இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி, முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்து, 20-ந்தேதிக்கு மேல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படாத ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். அது மக்கள் கையில்தான் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இது மு.க.ஸ்டாலினின் முத்தான வெற்றி!
தி.மு.க. பெரும்பான்மையான வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்போகிறது.
2. வலிக்காத ஊரடங்கு!
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஷ கிருமியாக நுழைந்த கொரோனா, மிக வேகமாக பரவியது.
3. தடுப்பூசிகளுக்கும், உயிர் காக்கும் மருந்துக்கும் தட்டுப்பாடா?
மருத்துவ உலகில் எல்லோராலும் உற்று நோக்கப்படுவது, ‘லான்செட்’ என்று கூறப்படும் மருத்துவ இதழ்தான்.
4. வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி மையங்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது.
5. தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டும் தமிழ்நாடு!
பண்டைய இதிகாச நூல்களில் கூறப்படும் பல கருத்துகள், இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாகவே அமைந்துள்ளது.