இது உயிர் காக்கும் மருந்து இல்லை; ஆனால் குணமாக்கும் மருந்து


இது உயிர் காக்கும் மருந்து இல்லை; ஆனால் குணமாக்கும் மருந்து
x

சமீபகாலங்களில் யாரும் கேள்விப்படாத வகையில், கொரோனா நோயாளிகளுக்கான “ரெம்டெசிவிர்” ஊசி மருந்துக்கு மக்கள் அல்லல்படும் நிலை இருக்கிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தினமும் 500 பேர்களுக்குத்தான் விற்பனை செய்யப்படு கிறது. ஒரு நோயாளிக்கு தேவையான 6 பாட்டில்கள் வழங்கப்படுகிறது. இதற்காக முதல்நாள் இரவிலிருந்தே வரிசைக்கட்டி மக்கள் காத்திருக்கும் பரிதாபமான நிலை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்து நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், “ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்து இல்லை. “ரெம்டெசி விர்” மருந்து போட்டுக்கொண்டால், மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் காலத்தை குறைக்கலாம். மற்றபடி, இந்த மருந்தை போட்டால்தான் கொரோனாவிலிருந்து குணமடைவோம் என்ற சூழ்நிலை இல்லை. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே இது தேவைப்படலாம்” என்று கூறியிருக்கிறார்.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு “ரெம்டெசிவிர்” ஊசி மருந்து போடப்படு கிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அது கிடைக்காத பட்சத்தில், டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டை வைத்துக்கொண்டுதான் மக்கள் இப்படி “கியூ”வில் நின்று கஷ்டப்பட வேண்டியுள்ளது. இது உயிர்காக்கும் மருந்தல்ல. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நாட்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்றால், அதைவிட ஒரு கொரோனா நோயாளிக்கு வேறு என்ன வேண்டும்?. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களிடம் கேட்டால், “ரெம்டெசிவிர் ஊசி மருந்தை போடும் நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது” என்கிறார்கள். இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரையில், மிதமான மற்றும் கடுமையான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு “ரெம்டெசிவிர்” மருந்து போடப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ஆக்சிஜன் குறைவாக இருந்தாலோ, மூச்சுவிடு வதில் சிரமம் இருந்தாலோ சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் பாதிப்பு இருந்தாலோ “ரெம்டெசிவிர்” போட வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

“ரெம்டெசிவிர்” தேவையில்லை என்றால், மத்திய அரசாங்கம் பதைபதைத்து வெளிநாடுகளில் இருந்து அவசர அவசரமாக இறக்குமதி செய்வதற்கு தேவையே இல்லை. எனவே, கொரோனா நோயாளிகளை விரைவில் குணமாக்கி வீடுதிரும்ப வைக்கும் “ரெம்டெசிவிர்” மருந்துக்கு தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். “ரெம்டெசிவிர்” என்பது நோய் கிருமிகளின் எதிர்ப்பு சக்தியாகும். இதுவரை இந்தியாவில் ஏறத்தாழ மாதத்துக்கு 38 லட்சம் பாட்டில் “ரெம்டெசிவிர்” மருந்துதான் 7 கம்பெனிகள் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த உற்பத்தி அளவை கடந்த ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஒரு கோடியே 3 லட்சம் பாட்டில்களாக உற்பத்தி செய்ய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், இந்த அளவெல்லாம் இப்போது நாளுக்குநாள் இந்தியா முழுவதும் அதிகளவில் உயர்ந்துவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதவே போதாது.

ஏற்கனவே, மத்திய அரசாங்கம் பல நாடுகளிலிருந்து “ரெம்டெசிவிர்” மருந்தை இறக்குமதி செய்ய கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம் 4 லட்சத்து 50 ஆயிரம் “ரெம்டெசிவிர்” பாட்டில்களை அனுப்பும் முயற்சியை தொடங்கியுள்ளது. இதுபோல ரஷியாவும் அனுப்ப தொடங்கியுள்ளது. இப்போதைய சூழ்நிலையில் “ரெம்டெசிவிர்” மருந்து தேவையில்லை. பொதுமக்கள் தேடி அலையவேண்டாம் என்று கூறுவதைவிட்டுவிட்டு, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியா முழுவதும் தேவையான அளவு “ரெம்டெசிவிர்” மருந்து கிடைக்கும் வகையில் உள்நாட்டு உற்பத்தியையும் பெருக்கவேண்டும். வெளிநாடுகளில் இருந்தும் தேவைக்கு ஏற்ப இறக்குமதி செய்யவேண்டும். முதல்-அமைச்சராக நாளை பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் “ரெம்டெசிவிர்” மருந்தை சென்னையைப் போல அனைத்து முக்கிய நகரங்களிலும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தகுந்தது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், உடனடியாக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு “ரெம்டெசிவிர்” மருந்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும், அதை அவர் நிச்சயம் செய்வார் என்பது மக்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.

Next Story