கொரோனா காலத்தில் நிவாரண உதவி!


கொரோனா காலத்தில் நிவாரண உதவி!
x
தினத்தந்தி 6 May 2021 11:07 PM GMT (Updated: 6 May 2021 11:07 PM GMT)

கொரோனா பரவல் உயிருக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லை, மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் நிலையை உருவாக்கிவிட்டது.

முதல் அலை கடந்த ஆண்டு ஏற்பட்டவுடன் முதலில் பொருளாதாரத்தில், உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தள்ளாடிக் கொண்டிருந்த பொருளாதாரநிலை சற்று மீண்டு வந்த நேரத்தில் கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

ஊரடங்கால் நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டன. குறிப்பாக சிறு-குறு, நடுத்தர தொழில்கள் எல்லாம் நசிந்துவிட்டன. வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து வீதிக்கு வந்துவிட்ட நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சற்று நிலைமை சீரடைந்துக் கொண்டிருந்த நிலையில் கொஞ்சம், கொஞ்சமாக வர்த்தகம் தழைத்தது. வேலைவாய்ப்பும் சற்று உருவாகியது. இதில் பெரும் கைகொடுத்தது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். வர்த்தக நிலை சீரடைந்ததற்கு எடுத்துக்காட்டு கடந்த 6 மாதங்களாகவே சரக்கு-சேவை வரி வசூல் உயர்ந்துக்கொண்டு வந்தது. அதிலும் ஏப்ரல் மாதத்தில் சரக்கு-சேவை வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் என்று புதிய சாதனையை படைத்தது.

சரக்கு-சேவை வரி வசூலில் சாதனை என்றால் உற்பத்தி பெருகுகிறது, வர்த்தகநிலை சீரடைகிறது, மக்களின் வாங்கும் சக்தி ஓரளவு அதிகரிக்கிறது என்று பொருள். ஆனால் மார்ச் மாதம் முடிய நடப்பு நிதியாண்டில் கணக்கு முடிக்கவேண்டும் என்ற நிலையில் இந்த வசூல் கூடியிருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இது மார்ச் மாதம் வரை உள்ள விற்பனை, வினியோகம், உற்பத்தி ஆகியவற்றால் கிடைத்த வருமானம். ஆனால் ஏப்ரல் மாதம் முதல் கொரோனாவின் 2-வது அலை முதல் அலையைவிட அதிகமாக கோரத்தாண்டவம் ஆடும் நிலையில், பழையபடி ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் வேகமாக பாய்கின்றன. தமிழ்நாட்டில் கூட இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது காய்கறிகள், மளிகை கடைகள் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும். மற்ற கடைகள் எல்லாம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளநிலையில், இனி வேலைவாய்ப்புகள் குறிப்பாக உடல் உழைப்புக்கான வேலைவாய்ப்புகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகும். நாடு முழுவதும் இந்திய பொருளாதாரத்தை கண் காணிக்கும் மையம் எடுத்த கணிப்பில், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது 8 சதவீதமாக அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. இப்போதே நகர்புறங்களிலும், கிராமப்புறங் களிலும் ஒரு கோடி பேருக்கு மேல் வேலையிழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவு பேருக்கு வரும் மாதங்களில் வேலையிழப்பு ஏற்படுமோ? என்று தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகைகளை அதிகரிக்க வேண்டும். அரசு திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் சற்று வேலைவாய்ப்புகளை மக்களுக்கு அளிக்க முடியும். 100 நாள் வேலைத்திட்டத்துக்கு இன்னும் அதிகளவில் பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிவாரண உதவியாக ஏற்கனவே வழங்கியது போல இப்போதும் நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல் சிறிய, முறைசாரா வர்த்தகங்கள் தழைக்க எல்லாவிதமான கடன், நிதியுதவிகளை வழங்கவேண்டும்.

இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், ‘நான் பதவியேற்றவுடன், முதல் ஆணையாக கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்’ என்று அறிவித்தது நிச்சயமாக உதவியாக இருக்கும். மு.க.ஸ்டாலினைப்போல, மத்திய அரசாங்கமும் இந்த 2-வது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அல்லல்படும் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும் என்பதே இன்றைய காலகட்டத்தில் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story