சொன்னதை செய்தார், மு.க.ஸ்டாலின்!


சொன்னதை செய்தார், மு.க.ஸ்டாலின்!
x
தினத்தந்தி 7 May 2021 10:01 PM GMT (Updated: 7 May 2021 10:01 PM GMT)

முதல்-அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தன் தேர்தல் பிரசார கூட்டங்களில் எல்லாம், “மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே என் முதல் பணி. சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின். செய்வதைத்தான் சொல்வான் இந்த ஸ்டாலின்” என்று உறுதிபடக் கூறிக்கொண்டிருந்தார்.

முதல்-அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தன் தேர்தல் பிரசார கூட்டங்களில் எல்லாம், “மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே என் முதல் பணி. சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின். செய்வதைத்தான் சொல்வான் இந்த ஸ்டாலின்” என்று உறுதிபடக் கூறிக்கொண்டிருந்தார். தான் சொன்னதை நேற்று பதவியேற்ற உடனேயே செய்தும் காட்டிவிட்டார்.

தேர்தல் அறிக்கையில் கூறியதில், 5 வாக்குறுதிகளை முத்தான முதல் கையெழுத்துகள் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். முதல் ஆணையாக, “அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்” என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “மே மாதமே ரூ.2 ஆயிரம், முதல் தவணையாக வழங்கப்படும்” என்று கையெழுத்திட்டுள்ளார். அடுத்து ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிட்டுள்ளார். இன்றுமுதல் அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில், அனைத்து பெண்களும் கட்டணமில்லாமல் பயணம் செய்ய உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம் பெற்ற மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க, “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்க உத்தரவிட்டுள்ளார். மிக கருணை திட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அந்த மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீடு திட்டத்தின்கீழ் ஏற்க உத்தரவிட்டுள்ளார்.

ஆக, நேற்று பதவியேற்று தலைமைச் செயலகத்திற்கு சென்றவுடன், முதல் வேலையாக இந்த அறிவிப்புகளில் கையெழுத்திட்டு, “சொன்னதைத்தான் செய்வார், இந்த ஸ்டாலின்” என்பதை நிரூபித்துவிட்டார். நேற்று பதவியேற்பு விழாவையும், அவர் பெருந்தொற்றின் நிலைமையை கருதி மிக வித்தியாசமாக நடத்தி முடித்துவிட்டார். காலத்தின் கட்டளையை ஏற்று, அமைச்சரவை பதவியேற்பு விழாவை மிக எளிமையாக நடத்தியது மு.க.ஸ்டாலினின் பொது வாழ்வு முதிர்ச்சியை காட்டுகிறது. இதுவொரு நல்ல முன்னுதாரணமும் கூட. “ஆடம்பரத்தைவிட எளிமைதான் அழகு. ஆபரணத்தைவிட பொட்டுதான் அழகு” என்பதை நடத்திக்காட்டிவிட்டார், மு.க.ஸ்டாலின். அவரது அமைச்சரவையும், மூப்புக்கு மூப்பான அமைச்சரவையாகவும், இளமைக்கு இளமையான அமைச்சரவையாகவும் அமைத்து, ஒரே கல்லில் 2 மாங்காயை அடித்திருக்கிறார், மு.க.ஸ்டாலின். மூத்தவர்கள் அனுபவத்தை கொடுப்பார்கள். இளைஞர்கள் துடிப்பாக செயல்படுவார்கள்.

“இதனை, இதனால், இவன்முடிக்கும், என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்றார் திருவள்ளுவர். இந்த செயலை இந்த வழியால் இவன்தான் முடிக்க வல்லவன் என்று நன்கு ஆராய்ந்து மூன்றும் பொருந்திய திறமை கொண்ட ஒருவரிடம் அந்தப் பொறுப்பை வழங்குவதுதான் இதன் பொருள். சரியான பொறுப்புக்கு சரியானவர்களை தேர்ந்தெடுத்து வழங்கியது, அவரது திறமைக்கு மற்றொரு சான்றாகும்.

பொது வாழ்க்கையில் நீண்டநெடிய அனுபவம் வாய்ந்த மு.க.ஸ்டாலின் வழிகாட்ட, அமைச்சரவை சிறப்பாக செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. திறமை, அனுபவம், அறிவு, தொலைநோக்கு பார்வை அனைத்தும் கலந்த கலவைதான் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவை என்றுதான் சமுதாயம் பாராட்டுகிறது, வாழ்த்துகிறது.

இதுதவிர, 10 துறைகளின் பெயர்களை, மக்களுடைய எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, தொலைநோக்கு பார்வையோடு மாற்றியமைத்துள்ளார்.

அமைச்சரவை பொறுப்பேற்ற நேற்றே, நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டுவிட்டு, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தையும் கூட்டி கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். “தனது சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி கிடையாது” என்பதை நேற்று மு.க.ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

ஆங்கிலத்தில், “நல்ல தொடக்கம் பாதி வெற்றி” என்று கூறுவதுபோல, நல்ல தொடக்கத்தை தொடங்கியிருக்கும் மு.க.ஸ்டாலின் முழு அளவில் வெற்றிபெறவேண்டும். வெற்றி பெறுவார் என்று தமிழ்ச் சமுதாயம் உறுதியாக நம்புகிறது.

Next Story