மு.க.ஸ்டாலின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பிரதமர்!


மு.க.ஸ்டாலின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பிரதமர்!
x
தினத்தந்தி 10 May 2021 10:00 PM GMT (Updated: 10 May 2021 6:17 PM GMT)

இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக தலையெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல் பரவலின் இறுதியில் நன்றாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒவ்வொருநாளும் கொத்து, கொத்தாய் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்போது தினசரி பாதிப்பு 29 ஆயிரத்தை எட்டிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால், 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதே கடைசிவாரத்தில் 12.7 பேராக உயர்ந்து, இப்போது 100 பேரை பரிசோதனை செய்தால் 15 பேருக்கு மேலாக கொரோனா பாதிப்பிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவேகமாக உயருவதுபோல, உயிரிழப்ப வர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உயர்ந்துக் கொண்டே வருகிறது. அதேபோல், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் உதவியும் மிக அதிகமாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் பெருகிவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக் கேற்ப மத்திய அரசாங்கம் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில்லை என்ற பெரிய குறைபாடிருந்தது. இவ்வளவுக்கும் தமிழ்நாட்டில் தினமும் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்நிலையில், 220 மெட்ரிக் டன் மட்டுமே மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப் பட்டு வந்தது. ஆனால் நமது தேவை தற்போதையநிலை யில், 450 மெட்ரிக் டன்னுக்கு மேலாக உயர்ந்து கொண்டே போகிறது. தமிழகஅரசு மாறி, மாறி விடுத்த கோரிக்கை யின் அடிப்படையில் 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன்தான் வழங்கப்பட்டு வந்தது. கடந்தவாரத்தில், சென்னை ஐகோர்ட்டில் தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், “எங்களிடம் இன்னும் ஒரு நாளைக்குத்தான் ஆக்சிஜன் இருக்கிறது” என்ற அபயக்குரல் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி, மு.க.ஸ்டாலினுடன் டெலிபோனில் பேசும்போது, மிகமுக்கிய கோரிக்கையாக தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் தொடர்பாக மாநிலத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமரும் உறுதியளித்தார். மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்த சற்றுநேரத்தில், மத்திய அரசாங்கம் தமிழகத்துக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் ஆக்சிஜன் அளவை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி மத்திய அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தின் நிலைமையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகஅழுத்தமாக பிரதமரிடம் வலியுறுத்தியதும், அதற்கு பிரதமர் உடனடியாக பரிசீலிப்பதாக உறுதியளித்ததும், தொடர்ந்து சில மணித்துளிகளில் 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க மத்திய அரசாங்கம் முன்வந்ததும் மிக, மிக பாராட்டுக்குரியது. ஆனால் 419 மெட்ரிக் டன்னோடு மத்திய அரசாங்கம் நின்றுவிடக்கூடாது. தமிழகத்தின் தேவைக்கேற்ப அன்றாடம் ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு, மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டுக்காக தற்போது மத்திய அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டம், அதாவது மருத்துவமனைகளில் எவ்வளவு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் இருக்கிறதோ?, அதற்கேற்றாற்போலத்தான் ஆக்சிஜன் வழங்கும் திட்டம் என்பதை மாற்றி, அறிவியல்ரீதியாக, தேவைக்கேற்ப, மிகவும் வெளிப்படையான ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற என்ன வகையான திட்டங்களை மேற்கொள்ளலாம்? என்பதை ஆராய 12 நிபுணர்கள் கொண்ட தேசியஅளவிலான ஒரு பணிக்குழுவை நியமித்திருக்கிறது. இந்த பணிக்குழுவில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்தவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ககன்தீப் காங், இயக்குனர் டாக்டர் ஜே.வி.பீட்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிக்குழு உடனடியாக தன் பணிகளை தொடங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை இந்த பணிக்குழுவிடமும் நம்முடைய தேவைகளை எடுத்துக்கூற வேண்டும். மொத்தத்தில் ஒதுக்கீடு செய்வது மத்திய அரசாங்கம் என்பதால், பிரதமரும், மத்திய அரசாங்கமும் தமிழகத்தின் நிலைமையைக்கருதி ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு ஒதுக்கீடுகளை தினசரி தேவை அடிப்படையில் வழங்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story