வளரட்டும் இந்த அரசியல் நாகரிகம்!


வளரட்டும் இந்த அரசியல் நாகரிகம்!
x
தினத்தந்தி 12 May 2021 8:07 PM GMT (Updated: 12 May 2021 8:07 PM GMT)

இப்போது துளிர்த்துள்ள இந்த அரசியல் நாகரிகம் மேலும் செழித்து ஆலமரமாக வளரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பமாகும்.

அரசியல் கட்சி என்றாலே, மாற்று கட்சியை மாச்சரியத்தோடு பார்ப்பதுதான் நடைமுறை என்று இருந்த காலம் இப்போது மறையத்தொடங்கி இருப்பது, நல்லோர் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் பின்பற்றிய அரசியலில், கொள்கை வேறாக இருந்தாலும், பண்பாடு மேலோங்கி இருந்து, நல்ல அரசியல் நாகரிகம் தலைதூக்கி நின்று கொண்டிருந்தது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் காங்கிரசுக்கு எதிராக தனியாக கட்சி நடத்திய நேரத்திலும், சென்னையில் இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் “தினத்தந்தி” அலுவலகத்தை காமராஜரை கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைக்க செய்தார். 1967-ல் காங்கிரஸ் தோற்று, அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், அண்ணா தன் அமைச்சரவையோடு காமராஜர் வீட்டிற்கு சென்று ஆசிபெற்ற நேரத்தில், இந்தியாவே தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகத்தை கண்டு வியந்தது.

அதேபோல, மலை குலைந்தாலும் நிலை குலையாத காமராஜர், “புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள தி.மு.க. குறித்து 6 மாதத்திற்கு எதுவும் பேசமாட்டேன்” என்று கூறியதுடன், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் எதுவும் பேசாமல் பாதுகாத்த கட்டுப்பாடு காமராஜரின் ஜனநாயக பண்பை வெளிப்படுத்தியது. மு.க.ஸ்டாலின் திருமணத்தன்று காமராஜர் உடல் நலக்குறைவாக இருந்த போதிலும், அவரது கார் மேடைக்கே வருவதற்கு வசதிகள் செய்துகொடுத்து, அவருடைய வாழ்த்துகளையும் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார் கருணாநிதி. இப்படிப்பட்ட அரசியல் நாகரிகத்தில் சற்று தொய்வு விழுந்துவிட்டது. இப்போது மீண்டும் துளிர்த்திருப்பது எல்லோருக்கும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத்தேர்தலில், தி.மு.க. வெற்றி பெற்றவுடன் பிரதமர் நரேந்திரமோடி, மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், “தேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், பிராந்திய மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும், கொரோனா பெருந்தொற்றை தோற்கடிப்பதற்கும் நாம் இணைந்து செயல்படுவோம்” என்று கூறியிருந்ததும், அதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அனுப்பிய செய்தியில், “மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கூட்டாட்சி ஒத்துழைப்பு மூலம் கொரோனாவை நாம் வென்றுவிடுவோம். தொற்றுநோய்க்கு பிந்தைய வளர்ச்சிப்பாதையை உருவாக்குவோம்” என்று கூறியதும், அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.

இதுபோல, முதல்-அமைச்சராக பதவியேற்க இருந்த நேரத்தில், மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்த அடுத்த நொடியே, “மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகத்தை காப்போம்” என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பாங்கும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு டெலிபோன் செய்து, அவரது வாழ்த்தை பெற்றதோடு மட்டுமல்லாமல், தனக்கு ஆலோசனை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டதும், “தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்பதை நிரூபித்து காட்டிவிட்டது.

எளிமையாக கவர்னர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்றதும், கவர்னரோடு முதல்-அமைச்சர் தேனீர் அருந்த உட்கார்ந்திருந்த வட்ட மேஜையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் முக்கிய இடம் கொடுத்ததும், நாம் காண்பது கனவா?, நனவா? என்றநிலையை எல்லோருக்கும் ஏற்படுத்தியது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, முதல்-அமைச்சர் பதவியேற்றபின் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய முதல் கடிதத்தில், “தேர்தல் என்பது மக்களாட்சியின் மாண்புகளுள் ஒன்று. அது போர்க்களமல்ல. ஜனநாயகக் களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிக்கொள்வது இயல்பு என்றாலும், நாம் எல்லோரும் ஒருதாய் மக்கள். எனவே, தி.மு.க.வை சார்ந்தவர்கள் மாற்றுக்கட்சி தோழர்களோடும் நட்புணர்வுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்கு தீர்வு காண முயலவேண்டும்” என்று கூறியதை பார்க்கும்போது, இதுதான் தமிழ்நாடு என்று ஒவ்வொரு தமிழனையும் நெஞ்சை நிமிர்த்த வைக்கிறது. இப்போது துளிர்த்துள்ள இந்த அரசியல் நாகரிகம் மேலும் செழித்து ஆலமரமாக வளரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பமாகும்.

Next Story