தடுப்பூசி உற்பத்தியை தொடங்கட்டும் செங்கல்பட்டு தொழிற்சாலை!


தடுப்பூசி உற்பத்தியை தொடங்கட்டும் செங்கல்பட்டு தொழிற்சாலை!
x

முதல் அலை முடியும்போதே புறமுதுகிட்டு ஓடிவிடும் இந்த கொரோனா எதிரி என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் திரும்பிப்பார்த்து 2-வது அலையாக கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

முதல் அலை முடியும்போதே புறமுதுகிட்டு ஓடிவிடும் இந்த கொரோனா எதிரி என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் திரும்பிப்பார்த்து 2-வது அலையாக கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. “வரும்முன் காப்பதே நல்லது” என்ற வகையில், கொரோனா வராமல் தடுப்பதற்கான சிறந்த ஆயுதம் தடுப்பூசி மருந்துதான். அதனால்தான் இந்தியாவில் புனேயில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மாதம் 5 கோடி டோஸ்கள் என்று இருந்த நிலையில், இப்போது 6.5 கோடி டோஸ்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் உற்பத்தியை மாதம் 90 லட்சம் டோஸ்கள் என்று இருந்த நிலையைமாற்றி, இப்போது 2 கோடி டோஸ்கள் என்று உயர்த்தியுள்ளது. ரஷிய நாட்டு தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக்கை, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரி நிறுவனம் வினியோகிக்க இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி போட இது போதவே போதாது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகில் 100 ஏக்கர் பரப்பளவில் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட “இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம்” செயல்பட்டால், தடுப்பூசி மருந்து சப்ளை இன்னும் அதிகரிக்கும் என்று எல்லோரும் கோரிக்கை விடுத்தனர். 2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ரூ.594 கோடி செலவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ‘ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்’ கட்ட முடிவெடுக்கப்பட்டது. 2013-ல் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. திட்டமதிப்பீடு தொடக்கத்தில் ரூ.594 கோடியாக இருந்த நிலையில், 2017-ம் ஆண்டு ரூ.710 கோடியாகி, 2019-ல் ரூ.904 கோடியாகிவிட்டது. இன்னும் சில பணிகளை செய்துவிட்டால், தடுப்பூசி மருந்து உற்பத்தியை இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தொடங்கிவிடலாம். ஆண்டுக்கு 58 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உற்பத்தி திறன்கொண்ட தொழிற்சாலை இது. இந்த நிறுவனத்தை பார்வையிட்ட உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு, இது உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்து வளாகம் என்று சான்றளித்ததாக கூறப்படுகிறது.

எந்தவித பயன்பாடும் இல்லாமலிருக்கும் இந்த நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யவேண்டும் என்ற எல்லோருடைய கோரிக்கைக்குமிணங்க, மத்திய அரசாங்கம் பொதுத்துறை நிறுவனமாக இது இருந்தாலும், தனியார் ஏற்று நடத்துவதற்கு டெண்டர் விடுவதற்கான முயற்சிகளை செய்துள்ளது. டெண்டருக்கு முந்தைய கூட்டத்தில் 4 நிறுவனங்கள் பங்குபெற்று இதில் கடுமையான விதிகள் இருப்பதாக முறையிட்டன. இதனால் முதலிலேயே கட்டவேண்டிய ரூ.52 கோடி கட்டணம் பெருமளவில் குறைக்கப்பட்டது. மேலும், ஒரு சில நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டன. ஆனாலும் தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கிற அளவில், டெண்டர் நிபந்தனைகள் இல்லாததால், யாரும் இதில் பங்குபெற முன்வராத நிலையில், டெண்டரில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாளாக வருகிற 21-ந்தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல தனியார் நிறுவனங்கள் பங்குபெற வேண்டும் என்றால், அதற்கு ஏற்றவகையில் நிபந்தனைகளை மேலும் தளர்த்த முடியுமா? என பரிசீலிக்கவேண்டும். நிறைய நிறுவனங்கள் பங்கேற்க வந்தால், தேர்வாகும் அந்த நிறுவனத்தை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து கோவேக்சின் தடுப்பு மருந்தை தயாரிக்க செய்யலாம். ஸ்புட்னிக் நிறுவனத்திடம் இருந்தும் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ள செய்யலாம். அவ்வளவு ஏன், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரிஸ் போன்ற நிறுவனங்களையும் பங்குபெற ஊக்குவிக்கலாம். செங்கல்பட்டு மட்டுமல்லாது, குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம், கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றிலும் தனியார் பங்களிப்புடன் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துவது பற்றி மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பதை இப்போதைய தேவையாக இருக்கிறது.

Next Story