குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு சலுகைகள் !


குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு சலுகைகள் !
x
தினத்தந்தி 14 May 2021 10:00 PM GMT (Updated: 2021-05-14T23:42:38+05:30)

“கொரோனா போன்ற பெருந்தொற்றால் ஏற்பட்ட இடர்பாடு நேரத்தில், எங்களது முதல் முன்னுரிமை மக்கள் கையில் பணப்புழக்கம் இருப்பதுதான்.

தமிழக நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறையில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர். பொருளாதார வல்லுனரும்கூட. அவர் தமிழகத்தின் நிதி நிலைமையை பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், விரைவில் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என்று கூறும்போது, “கொரோனா போன்ற பெருந்தொற்றால் ஏற்பட்ட இடர்பாடு நேரத்தில், எங்களது முதல் முன்னுரிமை மக்கள் கையில் பணப்புழக்கம் இருப்பதுதான். அப்போதுதான் பொருட்களின் தேவை அதிகரிக்கும். எனவே, அதையே முதல் கடமையாக கொண்டு செயல்படுவோம்” என்று கூறினார். அதை நோக்கி தமிழக அரசு செல்கிறது என்பது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அளித்துள்ள சலுகைகளில் இருந்தே தெரிகிறது.

தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் நிலைத்த வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பங்களிக்கின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சமூக பொருளாதார அதிகாரமாக்குதலையும் அளித்து, சமூக மேம்பாட்டு வளர்ச்சியில் பெரும் துணையாக நிற்கின்றன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படை, இந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிதான். கடைசியாக எடுத்த ஆய்வுப்படி, தமிழ்நாட்டில் 20 லட்சத்து 13 ஆயிரம் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களில், 12 கோடியே 89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் உற்பத்திதான், நாட்டில் கனரக தொழில்களுக்கு பெருந்துணையாகவும், தேவையான மற்ற பொருட்களை தயாரிப்பவையாகவும் இருக்கிறது. இந்த நிறுவனங்களில் நேரடியாக மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் நிறைய பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

கொரோனாவின் முதல் அலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த தொழில்கள் பெரும் பாதிப்படைந்தன. நிறையபேர் வேலையிழந்து வீதிக்கு வந்தனர். பல தொழில்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. இப்போது, கொரோனாவின் 2-வது அலை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், “கொரோனாவையும் ஒழிக்கவேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கவேண்டும்” என்ற உயரிய நோக்கத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா, கால் டாக்சி வாகனங்கள் வைத்திருப்போர், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய, மாதாந்திர தவணைத்தொகையை கட்டுவதற்கு 6 மாதம் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுபோல, தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி தொகையையும் 6 மாதம் பிடித்தம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது பிரதமரும், ரிசர்வ் வங்கியும் செய்ய வேண்டியது. தமிழக அரசு சார்பில் சுய முதலீட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உடனடியாக ரூ.168 கோடி முதலீட்டு மானியம் வழங்கப்படும், இந்த நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவி பெறும்போது முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியது இந்த ஆண்டு டிசம்பர் மாதம்வரை நீட்டிக்கப்படுகிறது. இதுபோல, 14 சலுகைகளை இந்த நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

அவர்களுக்கான இந்த சலுகைகளால் நிச்சயமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டெழும், தழைக்கும். ஆனால், இந்த நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதுபோல இவர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளும் கனரக தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும். இவர்களை சார்ந்திருக்கும் ஊரக தொழில்களையும் கைதூக்கிவிடும் வகையில், சலுகைகள் வழங்கவேண்டும். மொத்தத்தில், ஒரு பக்கம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை, மற்றொரு பக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணி என 2 நடவடிக்கைகளும் தொடரட்டும்.. தொடரட்டும்.. என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Next Story