தடுப்பூசி போட்டவர்களுக்கு விளக்கம் வேண்டும்


தடுப்பூசி போட்டவர்களுக்கு விளக்கம் வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2021 10:00 PM GMT (Updated: 16 May 2021 6:23 PM GMT)

தமிழக அரசு குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.

“கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொண்டால்தான், நாட்டையும் பாதுகாக்கமுடியும்’’ என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும். அதனால்தான், தமிழக அரசு குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை கணக்குப்படி, 68 லட்சத்து 78 ஆயிரத்து 742 தடுப்பூசிகள்தான் போடப்பட்டு இருக்கிறது. இதில் இருமுறை போட்டவர்களும் அடங்குவர். முதலில் இருந்தே கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசி மருந்துகளையும் மக்கள் போட்டு வருகிறார்கள். 2 தடுப்பூசிகளையுமே 2 டோஸ்கள் போடவேண்டும். ஆரம்பகாலத்தில் 2 தடுப்பூசிகளையுமே முதல்டோஸ் போட்ட பிறகு, 28 நாட்கள் கழித்து, 2-வது டோஸ் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. முதல்டோஸ் போட்டு கொண்டவர்கள் எல்லாம் 28 நாட்கள் என்று கழியும்?, என்று 2-வது டோஸ் போட வேண்டும்? என மனதில் வைத்துக்கொண்டு, சரியாக 28 நாட்களில் போய் 2-வது டோஸ் போட்டுக்கொண்டார்கள். மருத்துவமனைகளில் இருந்தும் நினைவூட்டல் செய்திகள் வந்தன.

இந்தநிலையில் சற்றுகாலத்துக்கு பிறகு, 4 வார காலஅவகாசம் வேண்டாம். 6 முதல் 8 வாரத்தில் 2-வது டோஸ் போட்டுக்கொண்டால் போதும். அப்படி செய்தால்தான், செயல்திறன் அதிகரிக்கும் என்று சொல்லும்போதே மக்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. இவ்வளவுக்கும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துக்கு, இப்போதும் முதல்டோஸ் போட்டவுடன் 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் போடப்பட்டு வருகிறது. திடீரென கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை மட்டும் 6 வாரத்தில் இருந்து 8 வாரத்துக்குள் போடவேண்டாம். 12 வாரத்தில் இருந்து 16 வாரத்துக்குள் போட்டால் போதும். ஏனெனில், இங்கிலாந்து நாட்டில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 12 முதல் 16 வார காலத்தில், 2-வது டோஸ் போட்டால்தான் அதன் செயல்திறன் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர்குழு இப்போது இதுபோல முடிவுகளை எடுத்திருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு அறிவியல் ரீதியான அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய நிபுணர்குழு தலைவருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இப்போது மக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பகால கட்டங்களில் தடுப்பூசி போட தயக்கம் இருந்தது. பிறகு தடுப்பூசி போட்டு அப்போது கூறியபடி, 28 நாட்களில் 2-வது டோஸ் போட்டவர்கள் உண்டு. அதன்பிறகு அறிவித்த அறிவிப்பின்படி 6 முதல் 8 வார காலம் கழித்து, 2-வது டோஸ் போட்டவர்களும் உண்டு. இப்போது திடீரென 12 முதல் 16-வது வாரம் கழித்து போடவேண்டும். அப்படி செய்தால்தான் செயல்திறன் அதிகமாகும் என்றால் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு செயல்திறன் இருக்காதா?. அப்படியானால் அவர்கள் என்ன செய்யவேண்டும். அவர்களுக்கு ‘பூஸ்டர் ஷாட்’ போடவேண்டுமா? என்ற வகையில் பெரிய குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

மேலும் முதலில் தடுப்பூசி மருந்தை போட சொல்லும்போது, தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஏறத்தாழ 8 மாத காலம் கொரோனாவை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியிருக்கும் என்று கூறப்பட்டது. அப்படியானால் 8 மாதம் கழித்து மேலும் தடுப்பூசி போடவேண்டுமா? என்பதையெல்லாம் இப்போதே மத்திய அரசாங்கம் தெளிவாக்குவதோடு, அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்தால்தான் மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக இப்படி காலஅவகாசம் நீட்டித்து கொண்டிருப்பதால் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு விடை காணமுடியும். கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இவ்வளவு காலஅவகாசம் வேண்டும் என்று நீட்டித்துவிட்டு, கோவேக்சினுக்கு மட்டும் 28 நாட்களில் அடுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றால், அதற்கு மட்டும் காலநீட்டிப்பு தேவையில்லையா? என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Next Story