இந்த வேகத்தில் தடுப்பூசி போட்டால், எப்போது முடிப்பது?


இந்த வேகத்தில் தடுப்பூசி போட்டால், எப்போது முடிப்பது?
x
தினத்தந்தி 18 May 2021 10:40 PM GMT (Updated: 2021-05-19T04:10:52+05:30)

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு என்றால், கொரோனா பாதிக்காதவர்களுக்கு வாழ்வாதாரத்தில் பாதிப்பு.

உலகம் முழுவதும் கொரோனா பெரிய சீரழிவை ஏற்படுத்திவிட்டது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு என்றால், கொரோனா பாதிக்காதவர்களுக்கு வாழ்வாதாரத்தில் பாதிப்பு. எல்லோருடைய வாழ்வாதாரத்திலும் கொரோனா பரவலுக்கு முன், கொரோனா பரவலுக்கு பின் என்ற வித்தியாசம் தெரிகிறது. இயல்புவாழ்க்கை திரும்பவேண்டுமென்றால், கொரோனா பரவல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டாகவேண்டும். அதற்கு ஒரே வழி தடுப்பூசி போடுவதுதான். அந்த முனைப்பில்தான் உலகிலுள்ள எல்லா நாடுகளுமே தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில், தடுப்பூசி போடும் வேகம் போதுமா?, இன்னும் அதிகரிக்க வேண்டுமா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிபோடும் பணிகள் நடக்கிறது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசாங்கம் இலவசமாக வழங்கி வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாநில அரசுகளே தடுப்பூசிகளை விலைக்கு வாங்கி போட்டுவிடவேண்டும். தனியார் மருத்துவமனைகளும் விலைக்கு வாங்கி, கட்டணத்தோடு போட்டுவிடலாம். இந்தியாவை பொறுத்தமட்டில், நமது மொத்த மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏறத்தாழ 94 கோடி பேர் இருக்கின்றனர். இதில் 18 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளவர்கள் 59 கோடியே 10 லட்சம் பேர் ஆகும். எனவே மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து 190 கோடி டோஸ்கள் போட்டால்தான், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை போட்டு முடிக்கமுடியும்.

நேற்று காலை கணக்குப்படி, இந்தியாவில் 18 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 149 டோஸ்கள்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இவ்வளவுநாள் கழித்தும், 18 கோடிக்கு அதிகமானவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நியூயார்க் நகரிலுள்ள ‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் 2½ ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சீனா 7 மாதங்களிலும், பிரான்ஸ் 5 மாதங்களிலும், கனடா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் 4 மாதங்களிலும், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் 3 மாதங்களிலும், ரஷியா 16 மாதங்களிலும் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடித்துவிடும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் இப்போது தடுப்பூசிபோடும் வேகம் நிச்சயம் போதாது. இந்த வேகத்தை இன்னும் அதிகரிக்கவேண்டும்.

தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மே மாதத்தில் 8 கோடி டோஸ்களும், ஜூன் மாதத்தில் 9 கோடி டோஸ்களும் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியிருக்கிறார். ஆனால் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகஸ்ட்டில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்ட தடுப்பூசி மருந்துகளையும் கணக்கில் சேர்த்தால் 21 கோடியே 60 லட்சம் டோஸ்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். மற்ற நாடுகள் எல்லாம் தடுப்பூசி போடும் வேகத்தை பார்த்தால், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தினமும் இன்னும் ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இதில் தமிழக அரசு எடுத்திருக்கும் முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியது. உள்நாட்டு கம்பெனிகளிடமும் ஆர்டர் கொடுத்திருக்கிறது. உலகளாவிய டெண்டர் மூலமும் 3.5 கோடி டோஸ்களுக்கு சர்வதேச நிறுவனங்களிடமிருந்து வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் என மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேருக்கும் மிக விரைவில் தடுப்பூசி போடுவதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசாங்கம் துணைநிற்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story