சொன்னதை 10 நாட்களில் செய்தார் மு.க.ஸ்டாலின்!


சொன்னதை 10 நாட்களில் செய்தார் மு.க.ஸ்டாலின்!
x
தினத்தந்தி 19 May 2021 8:24 PM GMT (Updated: 2021-05-20T01:54:21+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்ததை 10 நாட்களுக்குள் செய்து சாதனை படைத்து இருக்கிறார்.

மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி, ‘சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்’ என்ற தாரக மந்திரத்தை அடிக்கடி சொல்வார். அதேபோலத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது பல அறிவிப்புகளை வெளியிடும் நேரத்தில், ‘சொன்னதைச் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன், ஏனென்றால் நான் கலைஞர் மகன்’ என்றார். அதை நிரூபிக்கும் வண்ணமாகத்தான் சொன்னதை 10 நாட்களுக்குள் செய்து சாதனை படைத்து இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்பு பத்திரிகையாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பிரசார பயணம் மூலம் தமிழகம் முழுவதும் சென்று, மக்களின் கோரிக்கை மனுக்களை நேரில் பெற்று, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்த்துவைப்பேன் என்று ஒரு சபதம் எடுத்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர், அந்த பிரசார பயணத்தை மேற்கொண்டு, ஒவ்வொரு தொகுதியிலும் நடந்த கூட்டத்தில் மக்களின் குறைகளை நேரில் பெறுவதற்கு ஒரு பெட்டியை வைத்தார். அந்த பெட்டியில் மக்கள் தங்களின் மனுக்களை போட்டார்கள். இவ்வாறு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசாரம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 72 பெட்டிகளில் வைக்கப்பட்டு, பூட்டுப்போடப்பட்டு, அந்த சாவியை அவரே வைத்துக்கொண்டார். இதுமட்டுமில்லாமல் இணையதளம் மூலமாகவும் மனுக்கள் பெறப்பட்டன. தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7-ந்தேதி பதவியேற்றவுடன் முதல் உத்தரவாக, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற தனித்துறையை உருவாக்கி அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தார். 72 பெட்டிகளின் சாவிகளும் அந்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த துறைக்கோ, திட்டத்துக்கோ தன் பெயரை வைக்காமல், முதல்-அமைச்சர் என்று அறிவித்தது நிச்சயமாக பாராட்டுக்குரியது.

இந்த 72 மரப்பெட்டிகளில் ஏறத்தாழ 4 லட்சம் மனுக்கள் இருந்தன. 7-ந்தேதி முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த துறை மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தது. இந்த 10 நாட்களில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய 6 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 10 பயனாளிகளை நேரில் அழைத்து மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதுதவிர சாலை மேம்பாடு, குடிநீர் வசதி, அங்கன்வாடி மையக்கட்டிடம், தடுப்பணை உள்பட பல அடிப்படை வசதிகளுக்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 10 நாட்களிலேயே முதல்-அமைச்சர் சொன்ன உறுதிமொழி 6 மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டது, மிகவும் பாராட்டுக்குரியது. நிச்சயமாக 100 நாட்களில் இந்த 4 லட்சம் மனுக்கள் மீதும் ஒரு தீர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி மு.க.ஸ்டாலின் இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், இந்த வேலையைத்தவிர வேறு எந்த வேலையையும் செய்யக்கூடாது. இதை முடித்துவிட்டு, எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று 100 நாட்களுக்குள் எங்களிடத்தில் வந்து சொல்லவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

100 நாட்களில் இந்த மனுக்கள் மீதெல்லாம் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோடு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் பணிகள் முடிந்துவிடக்கூடாது. இந்த துறை ஒரு நிரந்தரமான துறையாக இருக்கவேண்டும். பொதுமக்களின் குறைகளெல்லாம் இந்த துறை மூலமாக தொடர்ந்து பெறப்பட்டு துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு, நம் குறையை தெரிவித்து மனு அனுப்பினால் நிச்சயம் அதற்கு தீர்வு கிடைக்கும் என்ற உறுதி மக்களுக்கு ஏற்படவேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இந்த துறையை இன்னும் வலுப்படுத்தவேண்டும். தேவையானால் மாவட்ட ரீதியாகவும் இதற்கென அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story